இஸ்லாத்தினூடாக உலக அமைதி
M.அப்துர் ரஹீம், MA,BCom,BGL,PGDBA.
நிறையுடைய வாழ்வளித்து நெடுநிலத்தைக் காப்பதற்கு
மறையளித்த இறைவனுக்கே மாபெரும் புகழனைத்தும்
உலகம் பிறந்தது நமக்காக
எல்லாம் வல்ல இறைவன் முதன் முதலில் வான்வெளியில் மேகம் போன்ற ஒரு பிரகாசமான தோற்றத்தை (Nebula) உருவாக்கி, அதைப் பிளவு படுத்தி நட்சத்திர மண்டலத்தை (Galaxy) உருவாக்கி, அதிலிருந்து தனித்தனியே கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் படைத்தான் (அல் குர்ஆன் 21:30),
இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்தான் (அல் குர்ஆன் 41:11),
இரவையும் பகலையும் படைத்தான் (அல் குர்ஆன் 79:29),
ஏழு வானங்களையும், பூமியையும் படைத்து அதன் நடுவில் சந்திர வெளிச்சத்தையும், சூரிய ஒளியையும் ஏற்படுத்தினான் (அல் குர்ஆன் 71:16),
குடி நீரையும், உப்பு நீர் நிறைந்த கடலையும், இருபால் பறவைகளையும், மிருகங்களையும், காய் கனி உணவு வகைகளையும், மனித இனத்தையும், சுருங்கச்சொன்னால் இறைவன் உலகத்தையும் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும், அவற்றுக்குத் தேவையான உணவையும் படைத்தான் எனலாம். இந்த வியத்தகு இறையாற்றலின் செயல் யாருக்காக? எல்லாம் நமக்காகத்தான்.
படைப்பின் ரகசியம்
இந்த படைப்புகள் எல்லாமே இறை கட்டளைக்குப் பணிந்து நடக்கின்றன என்பதுதான் உண்மை. மனித குலத்தின் தந்தையும் தாயுமாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரை அல்லாஹ் படைத்து, அவர்கள் மூலம் உலக மக்கள் பெருகினார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகத் திகழ்கிறது. ஓர் உயிர் எப்படி உருவாக்கப்பட்டு, அதன் உடற்கூறு அளவுகோலின்படி அமைக்கப்படுகிறது என்ற படைப்பின் ரகசியம் இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அப்படி படைக்கப்பட்ட உயிரினங்களில் மனித குலம், இயல்பான வாழும் வழியாம் இஸ்லாத்தில் வாழ்வதற்கு வல்லோன் வகுத்த கட்டளைகள் மீறப்பட்டு இஸ்லாம் அல்லாதோரும் உலகெங்கும் பரவியுள்ளனர்.
இயற்கை அமைதி
உதாரணத்திற்காக ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நீல வானக் குடையின் கீழ் நெடு நிலத்தில் ஒரு சிறிய தீவு. அதில் நெருக்கமான ஒரு மலர்ப்பூங்கா. நித்தமும் மலரும் பல வண்ண மலர்களின் சிரிப்பு, பறவைகளின் மெளன மொழி, மருட்சியில் துள்ளும் மான்கள் கூட்டம், அதைப் பார்த்து ஆடும் மயில்கள், முல்லைச்சரம் போல் அசைந்தாடும் அருவி, சற்றுத் தொலைவில் சன்னமாய் உயர்ந்து கரையை முத்தமிடும் நீலக் கடல் அலைகள், இதமாக வீசும் தென்றல் காற்று, அதில் அசைந்தாடும் இலை-செடி கொடிகளின் நாட்டியம், முழு நிலவின் முடி சூடா ஆட்சி, இவற்றுக்கு நடுவில் எங்கிருந்தோ இதமாக காதில் ஒலிக்கும் பாங்கின் ஓசை. இதுபோன்ற இடத்தில் இருக்க நாம் ஆசைப்பட்டால், அதுதான் அமைதி, மனதிற்கும் நிம்மதி. இந்த அமைதியை விரும்பாதவர்கள் உலகில் எவரேனும் உள்ளனரா? இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இஸ்லாம் இப்படிப்பட்ட இனிய அமைதியை ஏற்படுத்தித் தந்து இருப்பதை, ஏக இறைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். அல்ஹம்துலில்லாஹ்.
சாந்தி சமாதானம்
இஸ்லாம் என்றாலே பணிதல் (Submmission), சாந்தி (Peace) என்று பொருள். இதிலுள்ள சாந்தியைத்தான் நாம் அமைதி என்கின்றோம். இந்த அமைதி மனிதனுக்கு எவ்வாறு கிட்டுகின்றது என்ற வினாவிற்கான விடை அந்த மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கிறது. ஒரு தனி மனிதனோ, ஒரு சமுதாயமோ, ஒரு நாடோ உலகமோ அமைதியாக வாழ வேண்டுமென்றால் அதற்கு ஓர் உந்துதல் சக்தி (Inspirative Spirit) தேவைப்படுகின்றது. இந்தச் சக்தி, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருட்கொடையாக அல்குர்ஆன் மூலமாக மனிதர்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருந்தும், அதன் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பாமலும், சரிவர இறைக் கட்டளைகளை நிறைவேற்றாமலும் தங்கள் மனம் போன போக்கிலே வாழ்ந்து அமைதியின்றி அல்லல்படும் பல சகோதரர்கள் இஸ்லாத்தின் கண் முன்னே இன்னல்படும் முகத்தோடு காட்சி தருகின்றனர்.
மனித குலத் தோற்றம்
மனித குலத் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம், தாய் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் இரத்தத்தில் தோன்றிய மனித குலம் உலகெங்கும் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் பின்பற்றிய ஒரே இரத்தத்தில் ஊறிய இஸ்லாமியர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் யூகித்துப் பார்க்க முடிகின்றது. அப்படி உலகிலுள்ளோர் அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்திருந்தால் ஒரு வேளை நாம் இப்போது விவாதிக்கும் உலக அமைதி இருந்திருக்கக் கூடும். ஆனால், இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இதர மதங்களைச் சேர்ந்தவர்களாகப் பல நாடுகளில் பல விதமான கலாச்சாரத்தில் இணைந்து வாழ்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
அமைதி வாழ்க்கை
இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்றும் நாடுகள், இதற்கு அப்பாற்பட்ட இதர நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் இவ்வுலகம். இறைவன் படைப்பின் மூலக்கரு அமைதி. உலக மக்கள் அனைவரும் அவரவருக்குக் கடைமையாக்கப்பட்ட கட்டளைகளின்படி செயல் பட்டு குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும். அப்படிப்பட்ட அமைதியை உலகில் இஸ்லாம் அல்லாத நாடுகளில் நாம் காண முடிகிறதா? இல்லையே! விதிமுறைகளைத் தாண்டிய நவீன கலாச்சாரம், போரிடும் குணம், இறையச்சமில்லாத தான்தோன்றித்தனமான வாழ்க்கைமுறை ஆகியவைதாம் அமைதியைக் கெடுக்கும் மூலக்கூறுகள்.
ஏக இறைத் தத்துவம் (தவ்ஹீத்)
இஸ்லாம் ஏக இறைத் தத்துவத்தை உணர்த்துவதை யாரும் மறுக்க முடியாது. அப்படி உணர்த்துவதை உலகில் உள்ளோர் அனைவரும் உணர்ந்து நடந்தால் அவர்கள் எல்லாம் வல்ல ஆற்றல்மிகு அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் வகுத்த கட்டளைகளைச் சிரமேற்கொண்டு செயல்படுத்த முற்பட்டால், அனைவரும் சகோதரர்களாகி விடுவர். அப்படி சகோதர சகோதரிகளாகி விட்டால் உலகத்திலுள்ளோர் ஒரு குடும்பம் என்ற கட்டுப்பாட்டில் வருவர். அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் குடும்பத்திலுள்ள ஒருவர் மற்றொருவருக்கு கேடு விளைவிப்பது, கொலை செய்வது போன்ற கொடுமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இஸ்லாம் கூறும் நல்லுலகம் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் சொந்தமல்ல. அல்குர்ஆன் ஓர் உன்னத உலகப் பொது மறை. அவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து அமைதியாக வாழவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும் அல்குர்ஆன் கூறும் கருத்துகள் உலக ஆராய்ச்சியாளர்களால் நன்கு ஆய்வு செய்யப்பட்டு, பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இஸ்லாம் ஒரு விஞ்ஞான ரீதியான மெய்ப்பிக்கப்பட்ட மார்க்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆனின் அறை கூவல்
அல்குர்ஆன் மனித உயிர் புனிதமானதென்றும், எதற்காகவும் அந்த உயிர் கொலை செய்யப்படக்கூடாதென்றும், ஒருவர் மற்றொருவரை எவ்விதமான கொலைப்பழியும் இல்லாத நிலையில் கொன்று விடுதல் என்பது, மனித இனம் முழுவதையுமே கொலை செய்தவருக்கு ஒப்பாவர் என்றுரைக்கின்றது (அல் குர்ஆன் 5:32). யாரும் யாரையும் துன்பப்படுத்துதலை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்களின் கற்பு நெறி இரு கண்கள் போல் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், வறியவர்கள், வாழ்விழந்தவர்கள், விழுப்புண் பெற்றோர், பாதிக்கப்பட்டோர் போன்றவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படல் வேண்டுமென்றும் அல்குர்ஆன் நல்லுபதேசம் செய்கின்றது. இறைவனால் அருளப்பட்ட வேதத்தின் கட்டளைகளை மாற்றம் செய்ய உலகில் எவருக்கும் அதிகாரம் அளிக்கப்படாத காரணத்தால் இஸ்லாமிய மார்க்க நெறியுடன் கூடிய சட்டத்தை கடைப்பிடிக்கும் நாடுகளும், அங்குள்ளவர்களும் அமைதி வழியில் வாழுகின்றனர் என்பதையும் அப்படி ஓரிரு தவறு செய்பவர்கள் இஸ்லாமியச் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் கண் கூடாகக் காண்கின்றோம்.
இஸ்லாமியச் சட்டம்
இஸ்லாம் அல்லாத சில நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்தி அவர்கள் சட்டப்படி தண்டனை வழங்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள இயலாது. அது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். ஒரு நாடு அமைதியாக வாழ வேண்டுமென்றால் அந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் (Constitutional Law) இஸ்லாமியக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தச் சட்டத்தை அல்குர்ஆன் உருவாக்கியதால் ஆள் பலம், அரசியல் பலத்தை வைத்து இச்சட்டத்தில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது. இஸ்லாம் அல்லாத சில நாடுகளில் தற்போதுள்ள அரசியல் அமைப்புச் சட்டம் சிலவற்றில் கடுமையாகவும் (Rigid), பலவற்றில் சூழ்நிலைகளுக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடியதாகவும் (Flexible) உள்ளது. இந்நிலை அறவே மாற்றப்படல் வேண்டும். ஓரிறைக் கொள்கை ஏற்கப்பட்டு இஸ்லாமிய சட்டம் பின்பற்றப்பட்டால் மட்டுமே உலகம் அமைதியாக இருக்க முடியும் என்பது பல வல்லுனர்களின் கருத்தாகும்.
நிராகரிப்பாளர்கள்
அல்லாஹ்வால் இறக்கப்பட்ட சட்டத்தின்படி தீர்ப்பு வழங்காதவர்களை நிராகரிப்பாளர்கள் (அல்குர்ஆன் 5:45)” என்றும் அவர்கள் இறுதியாகத் தங்குமிடம் நரகந்தான்(அல்குர்ஆன் 47:12) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது. அப்படி அல்லாஹ்வின் சட்டம் செயல்படுத்தப்படும் நாடுகளில் அமைதி நிலவுகிறது என்றால், இதர உலக நாடுகள் இதையே பின்பற்றுவதிலோ, செயல் படுத்துவதிலோ தவறு ஏதும் இல்லை. அமைதி ஒன்றுதான் மனித வாழ்வின் அடிப்படை உரிமை என்று இருக்கும்போது அதை அடைய அதற்கான இஸ்லாமிய மார்க்க நெறி ஒன்றுதான் நிரூபிக்கப்பட்ட காரணி (Proved Factor) என்பதால், அதை உலக நாடுகள் ஓடி வந்து செயல் படுத்தலாம்.
இஸ்லாத்தில் மனித உரிமைகள்
இஸ்லாமிய அரசில் பின் வரும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்ட விதம் எல்லோரையும் பிரமிக்க வைக்கிறது,
1. ஒருவர் மற்றொருவரின் உயிர் மற்றும் உரிமையை பறிக்கக்கூடாது.
2. யாரும் யாரையும் கேலி செய்யக்கூடாது.
3. அவதூறு கற்பிக்கக்கூடாது.
4. தேவையற்ற பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தக்கூடாது.
5. புறங்கூறக் கூடாது – தரக்குறைவாகப் பேசக்கூடாது.
6. உளவு பார்க்கக் கூடாது.
7. உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கக் கூடாது.
8. ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் சிறையில் அடைக்கக் கூடாது.
9. அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக வாதிடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
10. அரசை நடத்துபவர்கள் மக்களின் முன் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
11. மக்களின் பேச்சிற்கும் கருத்துக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
12. பொது நல விதி முறைகளுக்கு உட்பட்டு கட்சிகள், மன்றங்கள் மூலம் மக்கள் கூடி வாழ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
13. இறை மார்க்கத்தில் நிர்பந்தமில்லாத தீர்மானிக்கும் உரிமை உள்ளது.
14. பிற சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
15. செய்யாத குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
16. வறியோர்க்கு வாழ்வாதார உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
17. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உள்ளது.
18. மக்களால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் அவர்கள் பங்கு பெற்றுச் செயலாற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
19. சட்டபூர்வமான பாதுகாப்பு அனைவருக்கும் கிட்ட ஏற்பாடுகள் உள்ளன.
20. மனித நேயம், மனித மாண்புகள் பாதுகாக்கப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
21. அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
22. சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ இஸ்லாம் அழைக்கின்றது.
23. சமூகத்திற்கு ஊறு விளைவிப்பதை ஒழுக்கக்கேடாக அறிவிக்கின்றது.
24. விபச்சாரம் பெரும் குற்றமாக்கப்பட்டுள்ளது.
25. நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
26. மது, சூது அறவே தடுக்கப்பட்டுள்ளது.
27. எல்லோரும் எத்தருணத்திலும் பொறுமையைக் கடை பிடிக்கப் போதிக்கின்றது.
28. பிறர் நலம் பேணுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது
29. திருட்டு, பொய், கொலை, மற்றும் கையூட்டு அறவே தடுக்கப்பட்டுள்ளது.
30. இருப்போர் கண்டிப்பாக இல்லாதோர்க்குக் கொடுத்தல் கடமையாக்கப்பட்டுள்ளது.
31. ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
32. பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர், அண்டை வீட்டார் உறவுகள் மற்றும் உரிமைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.
33. நல்வாழ்வை நாட வைக்கும் மரணசிந்தனை, மறுமை நம்பிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
34. விதவைகள் மறுமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
35. வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
36 வரதட்சணை கேட்பதும்,கொடுப்பதும் பெருந்தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மனித உரிமைகள் இதர நாடுகளிலும் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இஸ்லாம் கூறும் அமைதி உலகில் ஏற்படும் என்பது திண்ணம்.
தூய வாழ்க்கை
உலக நாடுகளில் உள்ள சில உரிமையியல் (Civil) மற்றும் குற்றவியல் (Criminal) சட்டங்களில் தவறு செய்வோர் இறுதி மேல் முறையீட்டு நீதி மன்றம்வரை கூட சென்று தங்களுடைய பண பலம் மற்றும் ஆள் பலத்தினால் நிரபராதிகளாகி விடுதலைப் பெற்று திரும்பி மீண்டும் அதே தவறுகளை செய்வதைக் காண்கின்றோம். இந்த நிலை இஸ்லாமியச் சட்டத்தில் சாத்தியமா? இல்லை! இல்லவே இல்லை என்பதுதான் பதில். எவ்விதமான பாரபட்சமும் காட்டாமல் செயல் படுத்தப்படுவதுதான் இஸ்லாமிய உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்கள். மனிதன் வாழ்கின்றபோது அவன் எப்படி இறைநெறி போற்றி இஸ்லாமியக் கோட்பாட்டுடன் வாழ வேண்டுமென்பதுதான் அந்தச் சட்டம். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உத்தமசீலனாக வாழ்ந்தால் அந்தக் குடும்பம், அருகில் உள்ளவர்கள், ஊரைச்சேர்ந்தவர்கள், நாட்டைச்சேர்ந்தவர்கள், உலகத்தைச்சேர்ந்தவர்கள் உத்தமர்களாக வாழ வழி உள்ளதா இல்லையா? உலகத்தோர் இதை ஆழமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.
தீவிரவாதம்
இன்று தீவிரவாதம் தலை தூக்கி உலகைச் சீரழித்துக்கொண்டிருக்கிறதே! என்ன காரணம்? இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றதா அல்லது அதற்குத் துணை போகின்றதா? ஒரு போதும் இல்லையே! பின் ஏன் இந்தக் கொடூரமான விரும்பத்தகாத செயல்கள்? குர்ஆனின் குரல் இவர்களுக்குக் கேட்கவில்லையா அல்லது கேட்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படவில்லையா? எது உண்மை?. ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது சொற்ப காரணங்களுக்காகப் படையெடுத்தல், அதனால் அப்பாவி மக்கள் மலை போல் மாண்டுபோதல் நியாயமானதா? இல்லையே! பின் ஏன் இந்த நிகழ்வுகள்? ஓர் இறை – சகோதரக் கொள்கையில் இவர்களுக்கு ஒப்புதல் இல்லையா? இவர்கள் ஏன் ஏகத்துவத்தை ஏற்கக்கூடாது? இவர்கள் சிந்திக்க இறைவன் நல்லருள் புரிய வேண்டும் – ஆமீன்.
உந்துதல் உணர்வு (Inspiration)
மேற்கண்ட சிந்தனை மற்றும் அதன் தொடர்ச்சியான செயல் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றா? இல்லை! இறையருளால் கண்டிப்பாக முடியும். அல் குர்ஆனின் அறைகூவல் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் ஓர் உந்துதல் உணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. ஆனால் இதை நடைமுறைப்படுத்த “If not I then who?; If not now then when?” அதாவது “இதை நான் செயல் படுத்தவில்லையென்றால் வேறு யார் செயல் படுத்துவது?; அதையும் இப்போதே செயல் படுத்த வில்லையென்றால் வேறு எப்போது செயல் படுத்துவது?” என்ற அடை மொழிக்கேற்ப ஒவ்வொருவரும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் இறுதி வெற்றி உலக அமைதியே.
மரண பயம்
இஸ்லாமியக் கோட்பாடுகளை செயல்படுத்த எல்லோருக்கும் ஓர் உந்துதல் உணர்ச்சி தேவை என்பதைப் பார்த்தோம். அந்த உணர்ச்சியின் ஊடே ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் கூறும் மரண சிந்தனையும் வர வேண்டும். வல்லரசராக இருந்தாலும் சரி, வாழ வழியில்லாதவராக இருந்தாலும் சரி மண்ணில் வந்துதித்த பின்னே மீண்டும் மண்ணிற்கே செல்வோம் என்ற மரண பயம் வர வேண்டும். நல்லவை செய்யப்பட்டால் நற்கூலியும் சுவர்க்கமும், கொடுஞ்செயலுக்கு கடும் தண்டனைகளுடன் கூடிய நரக வாழ்வும் மறுமையில் கிட்டும் என்ற மறுமை உலக வாழ்வின் இரகசியம் புரிந்து கொள்ளப்படவேண்டும். மரணம் என்பது ஒவ்வொரு உயிரும் பிறக்கும்போதே நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். இதை எந்த விஞ்ஞான சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. மரணம் நிச்சயம் என்ற பய உணர்வு ஒருவரின் உள்ளத்தில் இறையச்சத்துடன் ஊசலாடிக் கொண்டிருக்குமேயானால் அவரின் தவறுகள் செய்யும் மனப்போக்கு மாறிவிடும். இவ்வுலக வாழ்வில் யாருக்கும் கேடு விளைவிக்காமல் நன்மைகள் செய்தால் மட்டுமே மறுமை வாழ்வு வெற்றி பெற்ற வாழ்வாக அமையும் எனும் கோட்பாடு அனைவரது உடலிலும் ஜீவ இரத்தமாக ஓட வேண்டும்.
ஒன்றே குலம். ஒருவனே இறைவன்
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம், ஒரே இறைவன், ஒரே தலைவன், ஒரே வேத நூல், ஒரே மார்க்கம், ஒரே சட்டம் எனும் கொள்கையை மேம்படுத்தி தன்னுடைய இவ்வுலக வாழ்வு ஒரு குறுகிய காலம் கொண்டது என்றும், நிரந்தரமான மறுமை வாழ்வே சிறந்தது என்பதனால் இவ்வுலக வாழ்வில் தவறே செய்யாமல் வாழ முற்படுவான். எனவே உலக மக்கள் இந்த மாபெரும் உண்மையை உணர்ந்து மரண சிந்தனையை ஏற்படுத்திக்கொண்டு ஓரிறைக் கொள்கையை ஏற்க வேண்டும். இந்த மாற்றம் நிகழ்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அச்சுறுத்தல் நிகழ்வுகளினால் மனமுடைந்து அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலை மாறுவதற்கு அல்லாஹ்வின் அருள் கண்டிப்பாகக் கிட்டும்.
முயலுங்கள் முடிவில் வெற்றி உங்களுக்கே
இருக்கின்ற நிலை மாறி இஸ்லாத்தினூடாக இனியதொரு நிலை தோன்ற எல்லா முஸ்லிம்களும் சட்டத்திற்குட்பட்டு தங்களால் இயன்றதை செய்யவேண்டும். இஸ்லாம் ஒன்றினால்தான் உலகத்தை அமைதியாக வாழ வைக்க முடியும் என்ற ஆணித்தரமான எண்ணத்தை ஒவ்வொருவரும் செயல்படுத்த முன்வர வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. Try Try again and again and you will succeed at last என்பதை மனதில் கொண்டு நாம் அனைவரும் ஒன்று படுவோம், முயலுவோம், மீண்டும் மீண்டும் முயலுவோம், முடிவில் இறையருளால் வெற்றி கொள்வோம்.
உலக அமைதியின் ஊடகம் இஸ்லாம் மட்டுமே
வானத்தையும், வளம் மிக்க இந்த பூமியையும் உருவாக்கி காத்து, அதன்பால் மனித குலத்தை தழைக்கச்செய்து, அவர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, ஒருவருடன் ஒருவர் வாஞ்சையுடன் வாழ வழி வகுத்த வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த உலகம் அமைதி பெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழி இஸ்லாம்தான். ஆம்! உலக அமைதி என்றாவது ஒரு நாள் இஸ்லாத்தினூடாகத்தான் நிறைவேறும் என்பது உறுதி. ஆமீன்! ஆமீன்! யா ரப்பில் ஆலமீன்!!
துணை நின்ற நூல்கள் :
1. Kuran and Modern Science by Dr. Jakir Nayak
2. இஸ்லாத்தை தெரிந்து கொள்ளுங்கள் – அல் பதிய்யா, சவூதி அரேபியா
”Jazaakallaahu khairan” சத்தியமார்க்கம்