நில மோசடியைத் தடுக்க
”பவர் ஆப் அட்டர்னி” பத்திரப்பதிவில் ஏஜெண்டின் கைரேகையை பெறும் புதிய முறை
பதிவுத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் கூட்டு நடவடிக்கை
சென்னை: ”பவர் ஆப் அட்டர்னி” மூலம் நில மோசடி செய்வதை தடுப்பதற்காக புதிய முறைகளை விரைவில் அரசு கொண்டு வர உள்ளது.
பெருகும் நில மோசடி
தமிழகத்தில் நில மோசடி வழக்குகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. மற்றவர் நிலத்தை அவர்களுக்கு தெரியாமலேயே யுபவர் ஆப் அட்டர்னிரு ஆவணத்தை போலியாக தயாரித்து விற்பனை செய்யும் மோசடி விண்ணைத் தொடுகிறது. இதுபோன்ற நில மோசடிகளைத் தடுக்க பத்திர பதிவுத்துறை மற்றும் போலீஸ் துறை இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து ”பவர் ஆப் அட்டர்னி” ஆவணங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறைகளை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மோசடி வகைகள்
இதுகுறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பொது அதிகார ஆவணங்களை (பவர் ஆப் அட்டர்னி) போலியாக தயாரித்து, அதன் மூலம் நிலத்தை மற்றவர்கள் பெயரில் பதிவு செய்வதாக பல புகார்கள் வந்தன. முறையான பொது அதிகார ஆவணம் வழங்கிய பிறகு, அதனை பவர் ஏஜெண்டுகள் தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்களை தயாரித்து நிலங்களை அபகரித்துவிடுகின்றார். இது ஒரு வகை மோசடி.
மேலும், நில உரிமைதாரர் பவர் எழுதிக் கொடுத்ததாக போலியான நபரை காட்டி, பவர் ஏஜெண்டு பெயரில் நிலத்தை பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த பவர் ஆவணத்தை வைத்து நிலங்களை ஏஜெண்டு அபகரித்து விடுகிறார். இது மற்றொரு வகை மோசடி.
ஏஜெண்டுகளின் புகைப்படம்
இந்த மோசடிகளை தவிர்ப்பதற்கு பதிவுத்துறை மற்றும் போலீஸ் துறை இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பவர் ஆவணங்களை பதிவு செய்யும் போது, பவர் கொடுப்பவர்களின் புகைப்படங்கள் மட்டும் ஆவணத்தில் ஒட்டப்படுகிறது. பவர் ஏஜெண்டுகளின் புகைப்படங்கள் அல்லது கைரேகை பெறப்படுவதில்லை.
இனிமேல் பவர் ஏஜெண்டுகளின் புகைப்படங்கள், கைரேகை போன்றவை அனைத்தும் பெறப்படும். பவர் ஆவணங்களை பதிவு செய்வதும், இனிமேல் நிலத்தை பதிவு செய்வது போலவே பதிவு செய்யப்படும். இதற்கான முடிவை பதிவுத்துறை ஏற்கனவே எடுத்துள்ளது. அதன்படி இனிமேல் பவர் ஆவணங்களை பதிவு செய்யும்போது இருதரப்பினரும் தகுதியான அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். சாட்சிகளை அழைத்து வந்தால் அவர்களும் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு சார்&பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பவர் ஆவணம் பற்றிய தகவல், அது பயன்படுத்தப்படும் இடத்தில் உள்ள சார்&பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அந்த பவர் ஆவணத்தை பதிவு செய்ததும், அது ஒரு வில்லங்கமாக மாற்றப்பட்டு அந்த சொத்துக்கு வில்லங்கமாக அது இணைக்கப்படும்.
வருவாய்த்துறை சான்றிதழ்
மேலும், இனிமேல் பவர் கொடுப்பவர்கள் அதை பவராக மட்டும் கொடுக்காமல், அந்த நிலத்தின் முழு விவரங்களை பவரில் குறிப்பிட வேண்டும். பவரை பயன்படுத்தி நிலங்களை வாங்கினால் அல்லது விற்பனை செய்தால், அந்த விவரத்தை வருவாய்த்துறைக்கு முதலில் அவர் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு அந்த துறையினரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். அதன் பிறகே பவர் மூலம் வாங்கப்பட்ட சொத்து ஆவணம் பதிவு செய்யப்படும்.
இதுபோன்ற நடவடிக்கையால் இனிமேல் பவர் பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் எங்கு வேண்டுமானாலும் அசையா சொத்துகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. பவர் மூலம் ஒருவர் அசையா சொத்தை வாங்கினால், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பதிவுத்துறை அலுவலர்கள் ஆகியோர் அந்த நில உரிமையாளரிடம் அதுபற்றி உறுதி செய்த பின்பே சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அளிக்கப்படும்.
போலீசில் புகார்
இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் போது பவர் ஆப் அட்டர்னி மூலம் நடக்கும் மோசடிகளை 100 சதவீதம் தவிர்க்க முடியும். மேலும் போலி ஆவணங்கள் மூலம் நிலம் வாங்கப்பட்ட விவரம் தெரிந்தால் அதை கிரிமினல் குற்றமாகக் கருதி, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய போலீஸ் துறைக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதுவரை சிவில் வழக்காகவே அது கருதப்பட்டு வந்தது.
குறிப்பிட்ட நிலத்தை வாங்கியுள்ளதாக யாராவது பவர் பதிவு செய்ய வந்தால், அதற்கான ஆவணங்களை வைத்துக் கொண்டு, நிலம் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்துவோம். அவர் ஒப்புக்கொண்டால்தான் அதற்கான ஆவணத்தை கொடுப்போம். இதுவரை இப்படி நாங்கள் குறுக்கு விசாரணை செய்ததில்லை. இனிமேல் விசாரணை நடத்தி நில விற்பனையை முடிவு செய்வோம். அதில் மோசடி இருப்பதாக தெரிந்தால் உடனடியாக போலீசில் புகார் செய்யப்படும்.
சுற்றறிக்கை
இந்த புதிய முறைகளைக் கொண்ட சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய முறைகள் அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளன. அப்போது அனைத்து சார்&பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
நன்றி: ahamed imam