பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-51:15)
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள் நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். (அல்குர்ஆன்-51:16)
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். (அல்குர்ஆன்-51:17)
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-51:18)
நீங்கள் இதனை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் போதுமான அளவு வசதி வாய்ப்பும் ஆரோக்கியமுடைய இளைஞர். ஒரு நாள் நீங்கள் உங்கள் வீட்டை நோக்கி செல்கிறீர்கள். செல்லும் வழியில் சாலையோரத்தில் ஒரு மனிதரை காண்கிறீர்கள். அவரோ பார்ப்பதற்கு மெலிந்து நோய் வாய்ப்பட்டவராக சாப்பிட்டு பல நாட்கள் ஆனவராக தென்படுகிறார். ஆடைகளும் உடலும் அழுக்கடைந்தவராக காணப்படுகிறார். இக்காட்சியை கண்டவுடன் இந்த மனிதரை விட உங்களை சிறப்பாக்கிவைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்.
பின்னர் அந்தமனிதரின் மீது இரக்கப்பட்டு அவருக்கு உதவும் நோக்குடன் அவரருகில் சென்று சகோதரா என்னோடு வாருங்கள் என அழைத்துச்சென்று அவர் அணிய சில ஆடைகளை வாங்கி கொடுத்து அவரை ஒரு சிறந்த ஹோட்டலுக்கு அழைத்துச்செல்கிறீர்கள். அங்கு ஒரு அறையை புக் செய்து தங்கவைத்து சிறந்த உணவை வரவழைத்து கொடுக்கின்றீர்கள். அவருடைய நோய்க்கு சிகிட்சை செய்ய ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்துவிட்டு நாளை காலையில் வருகிறேன் என்று கூறிவிட்டுசெல்கிறீர்கள்.
மறுநாள் காலையில் ஹோட்டலுக்கு வருகிறீர்கள். அங்கு நீங்கள்காணும் காட்சி உங்களுக்கு கோபத்தை வரவழைக்கிறது. நீங்கள்யாரை இரக்கவுணர்வுடன் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தீர்களோ அந்த மனிதர் குளிக்காமல் ஆடைகளை மாற்றாமல் தூங்கிக்கொண்டிருக்கிறார்.
நீங்கள் ஏற்பாடு செய்த உணவு அப்படியே இருக்கிறது.நோய்க்கு சிகிட்சை பெறவுமில்லை. உங்கள் மனம் இதைப்பார்த்து ஆதங்கப்படுகிறது. சே! என்ன மனிதர் இவர் இவ்வளவு உதவிகளை அவர் கேட்காமலேயே செய்த பிறகும் அதை பயன்படுத்தாமல் பாழ்படுத்துகிறாரே என்று! மீண்டும் அந்த மனிதருக்கு உதவிச்செய்ய உங்களுக்கு மனம் வருமா? நீங்கள் தானாக முன் வந்து செய்த உதவியை ஏற்க மறுக்கும் அந்த மனிதனின் முட்டாள் தனத்திற்காக ஆத்திரப்படும். நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்!
உங்களையும் வானம் பூமியையும் அதிலுள்ள பொருள்களையும் படைத்து பரிபாலித்து வரும் அந்த வல்ல இறைவனாகிய அல்லாஹ் தினம் தோறும் உங்களை அழைக்கிறானே உங்கள் பிரார்த்தனையும் வேண்டுதலையும் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு! ஆம் ஒவ்வொரு தினமும் இரவின் கடைசிப்பகுதியில் கீழ் வானத்தில் இறங்கி உங்களை அழைக்கிறானே! (புஹாரி மற்றும் முஸ்லிம்) அந்த அழைப்பை ஏற்காமல் தஹஜ்ஜத்துடைய அந்த வேளையில் தூங்கிக்கொண்டிருக்கிறோமே! குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை அல்லாஹ்வின் அந்த அழைப்பை நாம் ஏற்றோமா?
”நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?” (அல்குர்ஆன்-55:60)
ஆகவே சகோதரர்களே இனியாவது அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குறைகளை முறையிடுங்கள்! உங்கள் பாவத்தை அவன் முன்னால் கூறி மன்னிப்புக்கேட்டு அதிலிருந்து விடுபடுங்கள்!உங்கள் தேவைகளை அவனிடமே வேண்டுங்கள் அவன் நிறைவச் செய்வான். அல்லாஹ் மகத்தான வல்லமை மிக்கவன் என்பதை உணருங்கள்! நீங்கள் அவனது அடிமை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
”Jazaakallaahu khairan” Fatimatu Al-Zzahra