M U S T R E A D
நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.
நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தான்! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்!
இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். ”கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?
என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்” இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே! இது நியாயமா?
டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது.
ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய்?
எனதருமை தெரியாத மனிதர்களே! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை கேளுங்கள்;
”திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.” (அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.
ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள்!
ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம்!
தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங்களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.
பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.
மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.
எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.
ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய்! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !
இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை! அறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர்களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்!