கவிஞர் நபிநேசன்
பொறாமைக் காரிருளில்
முன்னேற்றப் பாதை
தெரியாமல்
முழிப்பவர்களே !
கைகளில் –
ஒற்றுமைவிளக்கை
ஏந்துங்கள் !
பகைத்துக்கொண்டு
பிரிந்து நின்றால்
உங்களை –
கொசுகூட
வசைபாடும் !
ஒற்றுமைக்குரலை
ஓங்கி ஒலித்தால் –
பொங்கிவரும்
அலைகூட
அடங்கிப் போகும் !
வேரை விட்டு – மரம்
வேறாகிப் போனால்
விறகாகிப் போகும்
பூர்வீகத்தை –
பழித்துப் போனால்
தார்மீகக் கொள்கைகள்
காற்றில் பறக்கும் !
‘சுடர்” தரும்
வெளிச்சத்தைப் பாராமல்
சுடுகிறது என்பவரை –
மூடரென்று உலகம்
சொல்லும் !
வேற்றுமைக் கிணற்றில்
கிடப்பவர்களே …
அல்லாஹ் –
அல்-குர்ஆனில் அருளியபடி-
ஒற்றுமைக் கயிற்றைப்
பற்றிப் பிடித்து
மேலே வாருங்கள் !
கீற்றை முடைந்து
கூரை வேய்கிற
மாதிரி –
இதயங்களை ஒன்றாக்கி
நம் –
சமுதாயத்தைக் காப்போம்
வாருங்கள் !
With thanks :Iniya Thisaigal Tamil