உன்னைப்படைத்துக் காக்கும் இரட்சகன் யார் ?
என்னைப் படைத்துக் காக்கும் இரட்சகன் அல்லாஹ் ஒருவனேயாவான். அவன் தான் என்னையும் உலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தவன். அவன் தான் எனக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தனது அளவற்ற அருட்பெரும் கொடையினால் உணவளிக்கிறான்.
உனது மார்க்கம் எது ?
என்னுடைய மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், அவனது இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைகளுக்கும் தன்னை முழுமையாக ஒப்படைப்பதும் அதற்கு முழுமையாக கீழ்படிதலும் ஆகும். இதனை மிக்கப் பற்றுதலுடனும் நம்பிக்கையுடனும் (ஆதரவு வைத்தும்) இறையச்சத்துடனும் பேணிச்செய்தல் வேண்டும்.
அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய் ?
அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் அவனது படைப்புகளான இரவு பகல், சூரியன் சந்திரன், வானம் பூமியைக்கொண்டும், அவைகளிலுள்ள ஏனையப் படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன். (ஆதாரம் : குர்ஆன் வசனம் 37:41, 57:7)
அல்லாஹ் எங்கிருக்கிறான் ?
அல்லாஹ் வானங்கள் அனைத்திற்கும் மேலாக ”அர்ஷ்” எனப்படும் தனது அரியாசனத்தின் மீது இருக்கிறான்”.
அல்லாஹ் கூறுகிறான் : அர்ரஹ்மான் தனது மகத்துவத்திற்கும் மாண்புக்கும் தகுந்தவாறு அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான். (அல்-குர்ஆன் 20:5)
அல்லாஹ் நம்முடன் எங்கும் இருக்கிறானா ?
அல்லாஹ் தனது மேன்மைக்குரிய அரியாசனத்தின் மீது அமைந்துள்ளான். அஞ்சவேண்டாம்! நிச்சயமாக நான் யாவற்றையும செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறேன். (அல்-குர்ஆன் 20:46) என்று அல்லாஹ் கூறுவது போல, அவனுடைய தனிப்பெரும் ஞானத்தினால் நாம் செய்பவை யாவற்றையும் உற்று நோக்குபவனாகவும் நாம் பேசுபவை யாவற்றையும் செவியேற்பவனாகவும், அர்ஷின் மீது இருந்து கொண்டே நம்மைக் கண்காணித்து வருகிறான்.
அல்லாஹ்வின் நேசர்கள் (அவ்லியாக்கள்) யார்?
அல்லாஹ்வின் நேசர்கள் என்ப்படுவோர் ”அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள். நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனை அதிகம் அஞ்சி வாழ்வார்கள். எல்லாவகையான பாவங்களைவிட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். நற்செயல்கள் அனைத்தையும் செய்து வருவார்கள். திருமறை குர்ஆனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் பேணிக் கடைபிடித்து வாழ்ந்து வருவார்கள்.
அல்லாஹ்வை நீ எவ்வாறு வழிபடுகின்றாய் ?
என்னுடைய எல்லா வணக்கங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே உரிய வகையில் சமர்பித்து அவனை ஒருமுகப்படுத்தி உள்ளச்சத்தோடு வழிபடுகிறேன். எனது வணக்க வழிபாடுகளில் நான் எவரையும் சேர்ப்பதில்லை. ”இபாதத்” என்பது சொல் செயல் யாவும் அந்தரங்கமாகவும் வெளிப்படையாகவும் உள்ளச்சத்தோடும் மனத்தூய்மையோடும் ஆற்றப்படும் ஒரு வணக்கமாகும் என்பதை உணர்ந்து செயலாற்றுகிறேன்.
அல்லாஹ் தன் தூதர்களை எதற்காக அனுப்பினான் ?
அல்லாஹ்வுடன் யாரையும் துணையாக்காமல் அவனை மட்டுமே வணங்கி வரும்படி மக்களை அழைப்பதற்காகவும், மனித இனம் ”எங்களுக்கு நேர்வழி காட்ட எவரும் வரவில்லை” என இறைவனுக்கெதிராக முறையிடாதிருப்பதற்காகவும் தூதர்களை அனுப்பினான்.
”Jazaakallaahu khairan” albaqavi.com