வாஜ்பாயிடமிருந்து மோடியைக் காப்பாற்றினார் அத்வானி : ஜஸ்வந்த் சிங்
புது தில்லி: குஜராத் மாநிலத்தில் கோத்ரா நகர ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு நடந்த வகுப்புக் கலவரங்களால் கோபம் அடைந்த வாஜ்பாய், முதலமைச்சர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்கவே விரும்பினார், ஆனால் அதைத் தடுத்தவர் அத்வானி என்று NDTV தொலைக்காட்சிக்கு நடந்து கொண்டே அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஜஸ்வந்த் சிங். இவர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் முதலில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பிறகு நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு ஹிந்து-முஸ்லிம் கலவரம் தொடங்கியது. நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு அதைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எனவே மிகப் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்பும் உடமைகள் இழப்பும் ஏற்பட்டது. அப்போது பிரதமர் பதவியிலிருந்த வாஜ்பாய்க்கு இது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியது.
அப்போது நாடாளுமன்றத் தொடர் நடந்து கொண்டிருந்தது. பிரதமர் தனது அலுவலகத்தில் இருந்தார். அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். குஜராத் கலவரங்களால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒரு காகிதத்தை எடுத்து தனது கைப்பட ராஜிநாமா கடிதத்தை எழுத ஆரம்பித்தார். உடனே நான் அவருடைய கையைப் பிடித்து தடுத்தேன். அவர் சற்றுக் கோபமாகவே என்னைப் பார்த்தார்.
தயவு செய்து இதைச் செய்யாதீர்கள் (ராஜிநாமா செய்யாதீர்கள்) என்று வேண்டினேன். “கையை விடுங்கள், என்னைப் போக விடுங்கள்” என்று கோபமாகவே அவர் மீண்டும் கூறினார். பிறகு அவருடைய வீட்டுக்கே சென்று அவரைக் கெஞ்சி, அவருடைய மனதை மாற்றினோம்.
வாஜ்பாய், அத்வானி, அருண் செüரி ஆகியோருடன் நான் விமானத்தில் கோவாவுக்கு கட்சி மாநாட்டுக்காகச் சென்று கொண்டிருந்தோம். அப்போது குஜராத் பற்றி பேச்சு வந்தது. குஜராத் விவகாரத்தில் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அங்கு அமைதி நிலவியது. குஜராத் விவகாரத்தில் நாம் எதையாவது செய்தாக வேண்டும் என்று மீண்டும் கூறினார் வாஜ்பாய். அந்தச் சூழலில் பதில் எதையும் கூறுவதைத் தவிர்க்க விரும்பிய அத்வானி, கழிப்பறைக்குச் செல்வதைப்போல அங்கிருந்து சென்றார். “”அவர் (அத்வானி) வரட்டும், வந்த பிறகு என்ன செய்வது என்று கேட்டு அதன்படி முடிவு செய்வோம்” என்றார் வாஜ்பாய்.
அத்வானியிடம் சென்று, “”குஜராத் விவகாரம் தொடர்பாக என்ன செய்யலாம்?” என்று கேட்டேன். “”அவர் (வாஜ்பாய்) சொல்கிறார் போலச் செய்தால் (மோடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால்) கட்சிக்குள் பெரிய பிரச்னை ஏற்பட்டுவிடும்” என்று மட்டும் ஒரு வரியில் பதில் சொன்னார் அத்வானி. வாஜ்பாயின் வீட்டிலிருந்து பிரமோத் மகாஜன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். “”உடனே பிரதமர் வீட்டுக்கு விரைந்து வாருங்கள், விஷயம் மிகவும் அவசரம்” என்றார். என்ன, ஏது என்று எதுவும் புரியாமல் நான் விரைந்தேன். “”அவர் (வாஜ்பாய்) ராஜிநாமா செய்வேன் என்று கடிதத்தோடு தயாராகிவிட்டார், ஏதாவது சொல்லி அவரைச் சமாதானப்படுத்துங்கள்” என்று மகாஜன் என்னிடம் (ஜஸ்வந்த் சிங்) கூறினார்.
அப்போது வாஜ்பாய் தன்னுடைய செயலரை அழைத்தார். நான் அந்தச் செயலரைப் பார்த்து, “”இன்னும் சில நிமிஷங்களுக்கு நீங்கள் இந்தப் பக்கமே வர வேண்டாம்” என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பினேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வாஜ்பாய் கோபமாக என்னைப் பார்த்து, “”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கோபமாகக் கேட்டார். ஒருவாறாக நாங்கள் எல்லாம் சேர்ந்து அவரைச் சமாதானப்படுத்தினோம்’ என்றார் ஜஸ்வந்த் சிங்.
மோடியை நீக்க வேண்டும் என்பதில் வாஜ்பாய் பிடிவாதமாக இருந்தாரா என்று தொலைக்காட்சி நிருபர் கேட்டதற்கு, “”குஜராத் கலவரத்தால் தனது ஆட்சிக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுவிட்ட களங்கத்துக்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் விரும்பினார்’ என்றார் ஜஸ்வந்த் சிங்.
காந்தஹாருக்கு இந்தியன் ஏர்-லைன்ஸ் விமானத்தைப் பயங்கரவாதிகள் கடத்தியவுடன் அதில் சிக்கிய பயணிகளை மீட்க, அவர்கள் கோரியபடி 3 பயங்கரவாதிகள் சிறைகளிலிருந்து விடுதலை செய்து விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு காந்தஹாரில் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது விமானத்தில் அவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங்கும் சென்றார். இந்த விஷயம் எனக்குத் தெரியாமல் நடந்தது என்பதைப்போலவே அத்வானி இதுவரை கூறி வருகிறார். “”அது உண்மையல்ல, அவருக்குத் தெரிந்துதான் நான் கூட்டிப் போனேன்” என்று ஜஸ்வந்த் சிங் வெள்ளிக்கிழமை பேட்டியில் கூறியிருந்தார். பாரதிய ஜனதாவின் உள் விவகாரங்களைத் தினம் ஒன்றாகப் போட்டு உடைப்பது என்று ஜஸ்வந்த் சிங் தீர்மானித்துவிட்டதையே அவருடைய இந்தப் பேட்டி உணர்த்துகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வாசகர் கருத்து:
ஜஸ்வந்த் சிங் ஒரு ஒப்பற்ற அரசியல் தலைவர் மற்றும் வரலாற்று வல்லுநர் என்பது அவர் ப.ஜ.க. விலிருந்து நீக்கப்பட்ட பிறகு தான் தெரிகிறது.
நேருவும், காந்தியும், ஜின்னாவிற்கு நிகராக இந்தியாவின் பிரிவினைக்கு (பார்டிஷனுக்கு) காரணமாக இருந்தார்கள் என்று அவர் ஆதாரத்துடன் கூறுவதை ஏற்பது மனதுக்கு சங்கடமாக இருந்தாலும், அது உண்மையாகவே இருக்குமானால், இப்பேர்ப்பட்ட உண்மையை தோண்டி எடுத்துள்ள ஜஸ்வந்த் சிங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
இறுதியில் எல்லா மனிதனின் குறைவை காண முடிகிறது. எவரும் இவ்வுலகில் முழுக்க முழுக்க யோகியவான் இல்லை என்று புரிகிறது. இதில் வெளிப்படும் இன்னொரு உண்மை ப.ஜ.க. தலைவர் அத்வானியின் கள்ளத்தனம்.
அவர் நரேந்திர மோடி மீது குஜராத் படுகொலைக்கு அடல் பிஹாரி வாஜ்பாயீ அவர்களை நடவைக்கை எடுக்க விடாமல் தடுத்தது போன்ற பல ரகசியிங்கள் வெளிபடுகின்றன. நல்ல வேளையாக மன்மோகன் சிங்கே பிரதமர் ஆகி விட்டார். இவ்வாறு பொய்யுரைக்கும் அத்வானி பிரதமர் ஆகியிருந்தால் நாட்டுக்கல்லவா கேடு!
வாஜ்பாயை சந்தித்து ஜஸ்வந்த் சிங் ஆலோசனை
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நேற்று ஜஸ்வந்த் சிங் சந்தித்து பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை ஜஸ்வந்த் சிங் சந்தித்தது இதுவே முதல்முறை. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பா.ஜனதாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சியில் குழப்பம் நிலவுகிறது.
நீங்கள் எழுதிய ஜின்னா புத்தகத்தை வாஜ்பாயிடம் கொடுத்தீர்களா?` என்று கேட்டதற்கு, `நாங்கள் என்ன பேசினோம் என்பதை ஏற்கனவே கூறி விட்டேன்’ என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், `என்னை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுக்கும்போது ஜின்னாவின் தனிப்பட்ட பண்பையும், அவரது அரசியலையும் வேறுபடுத்தி பார்க்க கட்சி தவறிவிட்டது. என் மீது நடவடிக்கை எடுத்த முன்னாள் நண்பர்கள் புத்தகத்தில் உண்மையில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்று படிக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி இந்தளவுக்கு குறுகிய மனப்பான்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார்.சர்தார் வல்லபாய் படேலின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் விதத்தில் நீங்கள் புத்தகத்தில் எழுதி இருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு,
`நான் வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். எந்தவொரு தலைவரின் புகழையும் குலைக்கும் விதத்தில் எழுதவில்லை’ என்று ஜஸ்வந்த் சிங் பதிலளித்தார்.
வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ஜஸ்வந்த் சிங், அவரது பதவி காலத்தின் போது வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய சக்தி வாய்ந்த துறைகளின் மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானியின் உதவியாளர் குல்கர்னி, பா.ஜனதாவில் இருந்து விலகல்
புதுடெல்லி: ஜின்னா குறித்து புத்தகம் எழுதிய ஜஸ்வந்த் சிங், பா.ஜனதாவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், அத்வானியின் உதவியாளர் குல்கர்னி நேற்று கட்சியில் இருந்து விலகினார்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங், ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில், பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல என்பது போன்ற கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பா.ஜனதா கட்சியில் இருந்து ஜஸ்வந்த் சிங்கை டிஸ்மிஸ் செய்து விட்டனர்.
ஏற்கனவே, பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு மிகவும் மோசமான நிலையில் பா.ஜனதா இருந்து வருகிறது. இதற்கிடையே தலைவர்களிடையே மோதல் மற்றும் ஜஸ்வந்த் சிங் நீக்கம் காரணமாக கட்சிக்குள் கடும் புயல் வீசுகிறது. இந்த சூழ்நிலையில், ஜஸ்வந்த் சிங் நீக்கத்துக்கு கட்சிக்குள்ளேயே மறைமுக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அதன் காரணமாக அத்வானியின் உதவியாளராக இருந்து வந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குல்கர்னி, கட்சியில் இருந்து நேற்று விலகி விட்டார். `சமீப காலமாக, பா.ஜனதா கட்சியின் கொள்கைகளில் மாறுபாடு காணப்படுவதால்’, அத்வானியிடம் இருந்தும், பா.ஜனதா கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.
ஜஸ்வந்த் சிங்கை நீக்குவதாக சிம்லா கூட்டத்தில் முடிவு எடுத்தபோதே, அதை எதிர்த்து குல்கர்னி குரல் கொடுத்தார். தற்போது, கட்சியில் இருந்து விலகும் முடிவை அத்வானியிடம் முன்னதாகவே தெரிவித்து விட்டார்.
இது குறித்து ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதியுள்ள குல்கர்னி, `முன்னதாகவே மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்யாமல் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தை யார் படித்தாலும், பா.ஜனதா மேலிட கூட்டம் எடுத்த முடிவு தவறானது என அறிந்து கொள்வார்கள். அசாதாரணமான காரணங்களை கூறி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து விலகிய குல்கர்னி, ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்வானியின் நெருங்கிய உதவியாளராக இருந்து வந்த அவர், சமீபத்திய பாராளுமன்ற தேர்தலின் போதும் அத்வானியுடன் பணியாற்றினார். 2004-ம் ஆண்டில் பா.ஜனதா தலைவராக அத்வானி இருந்தபோது, அவருடைய அரசியல் செயலாளராக இருந்தார்.
அது மட்டுமல்ல, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளராகவும் குல்கர்னி பணியாற்றினார். முன்னதாக, ஜின்னா விவகாரத்தில் அத்வானி சிக்கியபோது குல்கர்னி தான், அத்வானியை தவறாக வழி நடத்துவதாக பா.ஜனதாவுக்குள் புகார் எழுந்தது.
கட்சியில் இருந்து விலகியது குறித்து குல்கர்னியிடம் கேட்டபோது, “பா.ஜனதாவில் 13 ஆண்டுகளாக முழு நேரமாக பணியாற்றி வந்த நான், எனது தீவிர செயல்பாட்டை முடித்து கொள்கிறேன். எனினும், கட்சியின் அனுதாபியாக தொடர்ந்து இருப்பேன். கட்சியின் கொள்கைகளில் மாறுபாடு ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், எந்த வித அர்த்தமுள்ள பங்களிப்பையும் என்னால் அளிக்க முடியாது. எனது கருத்துகளை சுதந்திரமாக வெளியிட விரும்புகிறேன். அதே நேரத்தில், கட்சியின் ஒழுங்கு முறையையும் மதிக்கிறேன்” என்றார்.