திருக்குர்ஆன் ஓதுவோம்
எம்.ஏ.முஹம்மது அலீ
[ மௌத் விழுந்துவிட்டால் உடனே பள்ளிவாசலுக்கு குர்ஆன் ஷரீஃபை வாங்கி கொடுப்பதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக பலர் திருப்தி பட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பத்து குர்ஆனை வாங்கி வைப்பதைவிட, அவர்களே ஒரு தடவையாவது திருக்குர் ஆனை ஓதுவது அதிக நன்மையை ஈட்டித்தரும் என்று சிந்திக்க வேண்டாமா?
முன்பெல்லாம் சுபுஹுக்குப்பின்னும் மஃரிபுக்குப் பின்னும் பள்ளவாசலில் திருக்குர்ஆன் ஓதும் சப்தத்தை கேட்க முடிந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. வீடுகளைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல வீடுகளில் அந்த நேரத்தை தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாக நேரத்தை பாழ்படுத்தி விடுவதைத்தான் காண முடிகிறது.
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாசீன், தபாரக் இன்னும் சில குறிப்பிட்ட சூராக்களை சரளமாக, ஏன் மனப்பாடமாகக்கூட ஓதத்தெரிந்த பலருக்கு குர்ஆனின் மற்ற சூராக்களை சரளமாக ஓதத் தெரியாது. காரணம் இந்த சூராக்களின் முக்கித்துவத்தை கருதி இதை மட்டுமே ஓதி மற்றவைகளை ஓதாமல் விட்டு விடுவதால்; அவைகளை ஓதும்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. திருக்குர்ஆனின் ஒவ்வொரு சூராவும் தனித்தன்மை வாய்ந்ததுதான். ]
(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்கள் இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்)கற்றுக் கொடுத்தான். (அன்றி) அதன் மூலம்) மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுக்கின்றான். (இவ்வாறிருந்தும்) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாத்) தன்னை (இறைவனின்) தேவையற்றவன் என்றும் மெய்யாகவே எண்ணிக்கொண்டு அவனுக்கு மாறு செய்கின்றான். (அல் குர்ஆன் 96: 1-7)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வுதஆலா இறக்கியருளிய ‘வஹி’ யின் முதல் வசனமே ‘ஓதுங்கள்’ என்பதுதான். அதுவும் அல்லாஹ்வின் பெயரால் எனும்போது திருக்குர் ஆனை ஓதுவது எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அகிலத்தின் அருட்கொடை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ‘உங்களில் மிகச்சிறந்தவர், குர்ஆனைக் கற்று பிறருக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்தான்.’ (அறிவிப்பாளர்: உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தர்கீப்)
அல்லாஹ்வுடைய திருவசனமாகிய குர்ஆன் ஷரீஃப் மற்றெல்லா வசனங்களைவிட மிகச் சிறப்பானதாக இருப்பதால் அதனைக் கற்பதும், கற்றுக்கொடுப்பதும் எல்லாப் பொருளையும்விட சிறப்பானதாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ‘எவர் குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக என்னை திக்ர் செய்வதற்கும் என்னிடம் துஆ கேட்பதற்கும் நேரம் கிடைக்கவில்லையோ, அவருக்கு துஆ கேட்பவர்கள் அனைவருக்கும் கொடுப்பதைவிட அதிகமானதை நான் கொடுப்பேன் என்று அல்லாஹு தஆலா கூறுகின்றான்.’ மேலும், ‘மற்றெல்லா வசனங்களைவிட அல்லாஹு தஆலாவுடைய திருவசனத்தின் உயர்வு, அல்லாஹு தஆலா படைப்பினங்களைவிட எவ்வளவு உயர்வானவனாக இருக்கின்றானோ அவ்வளவு உயர்வானதாகும்.’ என்றும் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
பல பள்ளிவாசல்களில் தொழுகையாளிகளின் அளவுக்கோ அல்லது அதைவிட அதிக அளவிலோ குர்ஆன் ஷரீஃப் பீரோவில் வைக்கப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் அதை எடுத்து ஓதுகின்றவர்கள் ஒருவரோ இருவரோதான் இருப்பார்கள்.
மௌத் விழுந்துவிட்டால் உடனே பள்ளிவாசலுக்கு குர்ஆன் ஷரீஃபை வாங்கி கொடுப்பதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக பலர் திருப்தி பட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பத்து குர்ஆனை வாங்கி வைப்பதைவிட, அவர்களே ஒரு தடவையாவது திருக்குர் ஆனை ஓதுவது அதிக நன்மையை ஈட்டித்தரும் என்று சிந்திக்க வேண்டாமா?
முன்பெல்லாம் சுபுஹுக்குப்பின்னும் மஃரிபுக்குப் பின்னும் பள்ளவாசலில் திருக்குர்ஆன் ஓதும் சப்தத்தை கேட்க முடிந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. வீடுகளைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல வீடுகளில் அந்த நேரத்தை தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாக நேரத்தை பாழ்படுத்தி விடுவதைத்தான் காண முடிகிறது.
நாம் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை செய்து அதை மக்கள் பாராட்டும்போது நமக்கு சந்தோஷம் உண்டாவது இயற்கை. அட! நம்முடைய இந்த செயலை இவர்கள்கூட கவனிக்கிறார்களே என்கின்ற சந்தோஷமே நம்மை சிறகடித்துப் பறக்கச் செய்யும். அதே சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எடுத்துச்சொன்ன ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷமான ஒரு ஹதீஸை மறக்கலாமா?.
சொன்னார்கள் அண்ணலம் பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒரு அடியான் திருக்குர்ஆனை ஓதும்போது அல்லாஹு தஆலா அதை ஆவலோடு கவனிப்பது போல் வேறு எதையும் கவனிக்க மாட்டான்.’ சுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட வார்த்தைகள்! நாம் எவ்வளோ நல்ல காரியங்களை செய்கின்றோம்தான், நல்ல காரியங்கள் அனைத்திற்கும் நன்மை உண்டு என்பதும் உண்மைதான். ஆனால் அவற்றையெல்லாம் அல்லாஹ் ஆவலோடு கவனிக்கின்றான் என்று எதற்கும் சொல்லப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஓதப்படுவதை மட்டும்தான் அல்லாஹ் மிகவும் ஆவலோடு பார்ப்பதாக அறிய முடிகிறது.
கொஞ்ச நேரம் எல்லா அலுவல்களையும் மூட்டை கட்டி விட்டு அமைதியாக சிந்தனை செய்து பாருங்கள். முதலாளியிடம் வேலைபார்க்கும் தொழிலாளி, முதலாளியிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமானால் என்ன செய்வான்? அந்த முதலாளிக்கு எது ரொம்ப புடிக்குமோ அதற்குத் தகுந்த மாதிரிதான் இவனும் நடந்து கொள்வான். அப்போதுதான் முதலாளியின் கடைக்கண் பார்வையாவது தன் மீது விழும் என்று!
அதே சமயம் நாம் யார்? அல்லாஹ்வின் அடிமைகள். இந்த அடிமைகளின் ஒரு செயலை அந்த மாபெரும் எஜமானன் ஆவலோடு பார்க்கின்றான் என்றால் அந்த செயல் எவ்வளவு மகத்துவமிக்கதாக இருக்கும்! எண்ணிப்பார்க்க வேண்டாமா? வருடத்திற்கு ஒருமுறை நோன்பு காலங்களில் மட்டும் குர்ஆன் ஷரீஃபை திறப்பதும் மற்ற காலங்களில் அதை காட்சிப் பொருளாக வைத்திருப்பதும் தகுமா?
மனிதர்களாகிய நாம், வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் உதவியை தேவை உடையவர்களாகத்தான் இருக்கின்றோம். அவனது தயவுக்கு ஏங்கியவர்களாகத்தானே வாழ்கின்றோம்! அவனின்றி எதுவும் நடக்காது என்று நன்றாகத் தெரிந்துதானே வைத்திருக்கின்றோம்! அப்படியிருக்கும்போது அவனுக்கே ஆவலைத்தூண்டக்கூடிய செயலை (திருக்குர்ஆனை ஓதுவது) தினசரி வாழிவில் நடைமுறைப் படுத்துவதில் என்ன தயக்கம்! என்ன தடங்கல்!!
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாசீன், தபாரக் இன்னும் சில குறிப்பிட்ட சூராக்களை சரளமாக, ஏன் மனப்பாடமாகக்கூட ஓதத்தெரிந்த பலருக்கு குர்ஆனின் மற்ற சூராக்களை சரளமாக ஓதத் தெரியாது. காரணம் இந்த சூராக்களின் முக்கித்துவத்தை கருதி இதை மட்டுமே ஓதி மற்றவைகளை ஓதாமல் விட்டு விடுவதால்; அவைகளை ஓதும்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. திருக்குர்ஆனின் ஒவ்வொரு சூராவும் தனித்தன்மை வாய்ந்ததுதான். உதாரணத்திற்கு, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், யாஸீன் சூராவை திருக்குர்ஆனின் இதயமாகச் சொன்னார்கள். அவர்களே, திருக்குர்ஆனில் முப்பது வசனங்கள் கொண்ட ஒரு சூரா இருக்கிறது, அது ஒவ்வொரு முஃமினின் நெஞ்சத்திலும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதமாகவும் சொன்னார்கள்.
இதயம் என்பது உடம்பின் முக்கியமான பகுதி என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அதற்காக கண், காது, மூக்கு இவையெல்லாம் முக்கியமில்லை என்று அர்த்தமாகாது. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் மிக மிக முக்கியமானது தான். ஏன்! ஒரு சின்ன நரம்புகூட உயிரை போக்கக்கூடிய அளவுக்கு கொண்டு போய் விடக்கூடிய ஆற்றலை அல்லாஹ் அதற்குள் வைத்துள்ளான். ஆக ஒரு முழு உடம்பு இயங்குவதற்கு எப்படி அத்தனை பகுதியும் முக்கியமோ அதுபோல் திருக்குர்ஆனின் அத்தனை வசனமும்-ஏன் அத்தனை எழுத்துக்களும் முக்கிமானதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ‘(ஓதுகின்றவர்க்கு) திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் எழுதப்படுகிறது, அலீஃப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று சொல்லவில்லை, அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்தாகும்.’ சுப்ஹானல்லாஹ்! ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்றால் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தால் எவ்வளவு நன்மை என்பதை கணக்கிட்டுப் பாருங்களேன்!
அதுமட்டுமா! இந்த உலகத்தில் மாட மாளிகை கூட கோபுரத்தில் வெளிச்சத்தில் வாழும் மனிதனுக்கு கடுமையான இருள் ஆட்கொண்டிருக்கும் ‘கப்ருக்குள்’ வெளிச்சத்தை கொண்டு வருவது திருக்குர்ஆன் அல்லவா? சூரியனுக்கு ‘கப்ருக்குள்’ ஊடுருவிச்சென்று ஒளி தரும் ஆற்றல் கிடையாது. ஆனால் அந்த ஆற்றலை அல்லாஹ் திருக்குர் ஆனுக்கு வழங்கியுள்ளான்.வாழும்போது வசதியாக வாழ்வதற்கான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்கின்றோமே மரணத்திற்குப்பிறகு நாம் தங்கப்போகும் அந்த இருளடைந்த வீட்டை ஒளி பொருந்தியதாக ஆக்க இப்பொழுதே முயற்சி எடுக்க வேண்டாமா?
சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதர், மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முன்னிலை நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது, ‘கப்ரில்’ ஒளியாக வலம் வரும்’ மேலும் சொன்னார்கள், ‘கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை’.
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அபூதர்ரே! நீர் காலை நேரத்தில் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் ஆயத்தை கற்றுக் கொள்வது, நூறு ரக அத்துக்கள் தொழுவதைவிட உமக்கு சிறந்ததாகும். மேலும், நீர் காலை நேரத்தில் சென்று மார்க்க அறிவிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வது அவ்விஷயம் அந்த நேரத்தில் அமுல் படுத்தப்பட்டாலும், படாவிட்டாலும் அது ஆயிரம் ரக் அத்து தொழுகையை விட சிறந்ததாகும்.’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (நூல்: இப்னு மாஜா)
திருக்குர்ஆன் ஓதுவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதை ஓதுவதின்; அவசியத்தைப் பற்றியும், இம்மையிலும் மறுமையிலும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றியும் ஏராளமான ஹதீஸகள் உள்ளன. அவைகளையெல்லாம் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எல்லாவற்றிர்க்கும் மேலாக அதை தினசரி ஓதுவதற்கு நம்மை பழக்கப் படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, நம் குடும்பத்தார்கள், உறவினர்கள், ஊரார்கள் அனைவரையும் பழக்கப்படுத்த முயற்சிக்க வேண்டும். ‘அதன்படி’ நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்வானாக, ஆமீன். அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.