உணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லதா?
பால் பருகுவது நல்லது.
ஆனால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன காரணம்?
தயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜீரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும்.
தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம்.
தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. “தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்” என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.
குளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.
இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெரும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
நன்றி: டாக்டர் பி.எல்.டி.கிரிஜா