டெல்லி: ஜின்னாவை பாராட்டுவதில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கையே மிஞ்சிவிட்டனர் பாஜக தலைவர்கள். முதலில் அவரை பாராட்டினார் அத்வானி. இப்போது அவரை பாராட்டி பதவியிழந்துள்ளார் ஜஸ்வந்த் சிங்.
இதையடுத்து ஜின்னா குறித்து அத்வானி முதலில தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான அருண் ஷோரி கோரியுள்ளார்.
முஹம்மத் அலி ஜின்னா குறித்து முன்பு அத்வானி கூறியதையே தான் இப்போது ஜஸ்வந்த் சிங்கும் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற அத்வானி, ஜின்னா ஒரு மதசார்பற்ற தலைவர். புதிய வரலாறை உருவாக்கியவர் நபர் என்றார்.
இதற்கு ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந் நிலையில தான் எழுதிய ”Jinnah-India, Partition, Independence” என்ற ஜின்னாவின் பயோகிராபியை புத்தகத்தை நேற்று வெளியிட்டார் ஜஸ்வந்த் சிங். அதில், நாடு பிளவுபட ஜி்ன்னா காரணமல்ல, அன்றைய அரசியல் சூழல்களும் சில தலைவர்களின் செயல்பாடுகளும் தான் அவரை தனி நாடு கோர வைத்தன. அவர் மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்ல, தன்னமல்லாத ஒரு நபர். இதனால் தான் அவர் பால் நான் ஈர்க்கப்பட்டேன்.
அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காமல் அதை பரவலாகக வேண்டும் என்றுதான் ஜின்னா சொன்னார். அதை அப்போதைய தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் அப்படிப்பட்ட ஆட்சியில் தனது சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருதித் தான் தனி நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் முன்னாள் ராணுவ அதிகாரியாவார். வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவின் மிகச் சிறந்த மூளைகளில் ஒருவர்.
இந் நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்ததாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதன்மூலம் இந்தக் குழுவில் இல்லாத மூத்த தலைவர்களுடன் ஜஸ்வந்த் சிங்கின் நீக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
இந் நிலையில் ஜஸ்வந்த் நீக்கப்பட்டதற்கு யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எதி்ர்ப்புத் தெரிவித்துள்ளனர். சிம்லாவில் இன்று நடக்கும் கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை இந்த இரு தலைவர்களும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் ஷோரி கூறுகையில், ஜின்னா குறித்து அத்வானியின் நிலை என்ன?. முதலில் அவர் அதை விளக்கட்டும் என்றார். அதே போல ஜஸ்வந்த் நீக்கத்தை யஷ்வந்த் சின்ஹாவும் எதிர்த்துள்ளார்.
பாஜக-சங் பரிவார் இயக்கங்களுக்கு இடையே பாலமாக செயல்படும் மூத்த தலைவரான சேஷாத்ரி சாரி கூறுகையில், ஜஸ்வந்த் சிங்குக்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவரை நீக்கியுள்ளனர் என்றார்.
இதனால் ஜஸ்வந்த் சிங்கின் நீக்கத்தால் பிரச்சனை தீருவதை விட கட்சியில் மேலும் பல புதிய சி்க்கல்கள் உருவாகும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, சிம்லாவில் இன்று தொடங்கிய தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தோல்விக்கான உண்மையான காரணங்களை மூடி மறைத்து, தோல்விக்குக் காரணமானவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே ஜஸவந்த் சிங்கை நீக்கி அதை பெரிய செய்தியாக்கி மக்களை திசை திருப்ப முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் அவுட்-லுக் ஆசிரியர் வினோத் மேத்தா.
பாம்பே டையிங் அதிபர் நுஸ்லி வாடியா, ஜின்னாவின் பேரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.