MUST READ
பெருகிவரும் தனிப்பள்ளிகளும்- அருகிவரும் ஒற்றுமையும்!
தமிழகத்தில் ஒருகாலத்தில் ஒரு ஊருக்குசென்றால் அங்கே பெரும்பாலும் ஹனபி மத்ஹபை அடிப்படையாக கொண்ட பள்ளி ஒன்று இருக்கும். அவ்வூரில் ஷாபி மத்ஹப்பினர் கணிசமாக இருந்தால் அவர்கள் ஒரு பள்ளியை எழுப்பியிருப்பார்கள்.
ஷாபியாக்கள் விரல்விட்டு என்னுமளவுக்குதான் அவ்வூரில் இருந்தால் அவர்கள் வித்ரு தொழுகை நீங்கலாக ஏனைய தொழுகைகளை ஹனபிஜமாத்துடன் தொழுது கொள்வார்கள். அத்திப்பூத்தார்போல் சிலபகுதிகளில் அஹ்லே ஹதீஸ் பள்ளிகளும் இருந்தன.
இன்றைய நிலைஎன்ன? ஹனபி பள்ளி, ஷாபி பள்ளி- அஹ்லே ஹதீஸ்பள்ளி- ஜாக்பள்ளி- த.த.ஜ. பள்ளி, த.மு.மு.க. பள்ளி, இ.த.ஜ. பள்ளி இப்படி ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒருபள்ளிஎன்ற அளவுக்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இப்படி ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக்கொள்வது பற்றி மார்க்கஅடிப்படையில் கேள்வி எழுப்பினால்,
ஹனபி-ஷாபி பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளை நபிவழிப்படி தொழ அனுமதிப்பதில்லை.
”இப்பள்ளிவாசலில் மவ்லித்போன்ற பித்அத்கள் அரங்கேறுகிறது” என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தனிப்பள்ளி காண்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மக்காவில் இருந்தபோது காபாவின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம். நபியவர்கள் மக்காவெற்றியின்போது முன்னூற்றி அறுபது சிலைகளை அப்புறப்படுத்தியதையும் நாமறிவோம்.
முழுக்க,முழுக்க சிலைகளால் நிரம்பியிருந்த மார்க்கம் காட்ட்டிதராத சீட்டியடித்தல், நிர்வாணமாக தவாப் செய்தல், போன்ற செயல்களை குறைஷிகள் அப்புனித வீட்டில் செய்துவந்த நிலையில், நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தவரைக்கும் காபாவில்தானே தொழுதார்கள். தனிப்பள்ளி எழுப்பவில்லையே?
இன்றைக்குள்ள மத்ஹப்பள்ளிகளில் எந்த பள்ளியில் சிலையிருக்கிறது?
எந்த பள்ளியில் சீட்டியடிக்கப்படுகிறது? எந்தபள்ளியில் அவலட்சணமான ஆடை அணிந்து தொழுகை நடைபெறுகிறது?
ஆக தனிப்பள்ளி கட்டுவதற்கு பித்அத்கள் அரங்கேறுகிறது என்ற காரணம் ஏற்புடையதன்று.
ஒருவாதத்திற்காக, நபிவழிப்படி தொழுவதற்காக தனிப்பள்ளி எழுப்புதல் என்பதை சரிகன்டால் கூட, அஹ்லேஹதீஸ் பள்ளிவாசலோடு நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.
*நபிவழியில் தொழஅனுமதிக்கும் அஹ்லே ஹதீஸ் பள்ளியிருக்கும் ஊரில் ஜாக் பள்ளி எதற்கு?
*நபிவழியில் தொழ அனுமதிக்கும் ஜாக்பள்ளி இருக்கும் ஊரில் த.மு.மு.க.பள்ளி எதற்கு?
*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.மு.மு.க.பள்ளி இருக்கும் ஊரில் த.த.ஜ.பள்ளி எதற்கு?
*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.த.ஜ.பள்ளி இருக்கும் ஊரில் இ.த.ஜ. பள்ளி எதற்கு?
இப்படி அமைப்புக்கொரு பள்ளி கட்டியதிலிருந்தே, நபிவழி தொழுவது மட்டும் நோக்கமல்ல. என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும், சில அமைப்புகள் தங்கள் கிளை/மாவட்ட/மாநில அலுவலகங்களில் தொழுகை நடத்துவதையும் பார்க்கிறோம். பள்ளிவாசலுக்கு செல்லாமல் இப்படி அலுவலகத்திலே தொழுகை நடத்துவது சரியா என்றால்? அதற்கு ஒரு ஆதாரம் காட்டப்படும். ‘மஸ்ஜிதுன் நபவிதான் நபியவர்களின் தொழும் பள்ளியாகவும், அரசியல்,போர் உள்ளிட்ட அத்துணை விசயங்களையும் அலசும் இடமாகவும் இருந்தது’ என்பார்கள்.
ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து/மறைத்து விடுவார்கள். அதாவது நபியவர்கள் தொழும் பள்ளிவாசலை ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தியது வேறு. பள்ளிவாசலுக்கு தொழ செல்லாமல் அலுவலகத்தையே பள்ளிவாசலாக நினைத்து தொழுவது என்பது வேறு.
எனவே, ஒரு ஊரில் ஒருபள்ளிவாசல் இருக்கும்நிலையில், அப்பள்ளி தொழவரும் மக்களுக்கு போதுமானதாக இல்லையெனில் அதை விரிவுபடுத்தலாம். அல்லது கூடுதல் பள்ளிகளை எழுப்பிக்கொள்ளலாம். பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளமக்கள் வக்துக்கு வரமுடியாத நிலையிருந்தால் விரும்பினால், கூடுதல் பள்ளிகளை எழுப்பலாம். [அழகான முறையில் ஒழுசெய்து தொழுகைக்காக பள்ளியை நோக்கி நடந்துவந்தால் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்ற நபிமொழியும் உண்டு] வேறு எதற்காகவும் பள்ளிவாசலை கட்டிக்கொண்டு பிரிவதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை.
பெருகிவரும் தனிப்பள்ளிகளும் அருகிவரும் ஒற்றுமையும்
தனிப்பள்ளியை சரிகான்பவர்கள், பித்’அத் அரங்கேறும் பள்ளிவாசலில் எங்களை தொழ சொல்கிறீர்களா ? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பித்’அத் அரங்கேறுவதால் ஒரு பள்ளி தொழுவதற்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது. எனவே, தனிப்பள்ளியே தீர்வு எனில், புனித மக்காவிலும்- புனித மதீனாவிலும் உள்ள காபா மற்றும் மஸ்ஜிதுன்நபவியில், ஜும்மாவிற்கு இருபாங்குகள், தராவீக் இருபத்து ரக்’அத்துகள் போன்ற பித்’அத்கள் அரங்கேறுகிறது.
அப்படியாயின் அந்த இரு புனிதபள்ளிகளும் தொழுவதற்கான தகுதியை இழந்துவிட்டது என கூறவருவார்களா?[அஸ்தஃபிருல்லாஹ்]இரு புனித பள்ளிகளும் தகுதியிழந்து விட்டதால், இந்த ‘தனிப்பள்ளிவாதிகள்’ அங்கேயும் தனிப்பள்ளி எழுப்புவார்களா? ‘தனிப்பள்ளிவாதிகள்’ ஹஜ்- அல்லது உம்ரா சென்றால் இந்த பித்’அத்அரங்கேறும் பள்ளியில் தொழுவார்களா? அல்லது வேறு எங்காவது தொழுவார்களா? என்ற கேள்விக்கு பதிளில்லை.
அடுத்து, சு.ஜ. பள்ளிகளில்தான் நபிவழிப்படி தொழுவதை தடுக்கிறார்கள் என்றுவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஒரு ஊரில் நபிவழிப்படி தொழ அனுமதிக்கும் பள்ளியிருக்கும்போது, அமைப்புக்கொரு பள்ளி ஏன்? என்ற கேள்விக்கும் பதிளில்லை. சரி! சு.ஜ. பள்ளிகளில் தவ்கீத்வாதிகளை தடுப்பது ஏன் என்பதை பார்ப்போம்.
முதலாவது தவ்ஹீதுவாதிகள் உள்ளத்தில், ”நாம் தொழும் முறைதான் நபிவழிமுறையில் உள்ளது. மற்றவர்கள் தொழுவதெல்லாம் அவர்களாக உருவாக்கிக்கொண்டு தொழும்முறை” என்று ஒரு அழுத்தமான எண்ணம் பதியவைக்கப்பட்டுள்ளது.
தவ்ஹீத்வாதிகளுக்கும் சு.ஜ. வாதிகளுக்கும் தொழுகையில் பிரதானமான பிரச்சினை வருவது பெரும்பாலும் மூன்று விசயங்களில்தான். 1. தொப்பி 2. ஆமீன் சொல்லுதல் 3.விரலசைத்தல். இந்த மூன்று விசயங்களில் மத்ஹப்வாதிகள் தவறான வழியில் இருக்கிறார்களா? அல்லது அவர்களது செயலுக்கும் ஆதாரம் உள்ளதா என்பதை பார்ப்போம்.
தொப்பி:
தொப்பி போடுவதை கண்டிப்புடன் வலியுறுத்துவதற்கு எப்படி வலுவான ஆதாரமில்லையோ அதுபோல தொப்பி போடக்கூடாது என்று தடையேதுமில்லை என்பதை தவ்ஹீத்அறிஞர்கள் ஒப்புக்கொண்ட விசயம்தான். அதே நேரத்தில் தொப்பி அணிவதற்கு நெருக்கமான ஆதாரங்கள் இருப்பதை காணலாம்.
அப்துல்லாஹ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார். இஹ்ராம் அணிந்தவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது! செருப்பு கிடைக்காதவர்கள் காலுறைகளை அணியலாம். ஆயினும் கரண்டைக்குக் கீழே இருக்கும்படி (மேலிருந்து கரண்டைக்குக் கீழ் வரை) அவற்றை வெட்டி விட வேண்டும்!” என்று விடையளித்தார்கள். நூல்;புஹாரி,எண் 1842
இந்த செய்தயில் இஹ்ராம் அணியும்போது தவிர்க்கவேண்டிய ஆடைகள் பட்டியலில் நபி[ஸல்]அவர்கள், தொப்பியையும் குறிப்பிடுவதால் தொப்பி அணிந்துவரும் நடைமுரையிருந்திருக்கிறதுஎனவேதான் இஹ்ராமின்போது அதை நபியவர்கள் தடுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கமுடியும்.
அம்ர் இப்னு மைமூன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்;
உமர்ரளியல்லாஹு அன்ஹுகுத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை.
உமர் ரளியல்லாஹு அன்ஹு(மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), ‘சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள்.
சில சமயம் ‘யூசுஃப்’ அத்தியாயம் அல்லது ‘நஹ்ல்’ அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகை;காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள்.
(சம்பவ தினத்தன்று) அப்போது நான் தக்பீர் கூறியிருப்பாக்hள். ‘என்னை நாய் கொன்றுவிட்டது… அல்லது தின்றுவிட்டது…” என்று கூறினார்கள். (அப்போது ‘அபூ லுஸலுஆ ஃபைரோஸ்’ என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்).
உடனே, அந்த ‘இல்ஜ்’ (அரபில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி வட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். [ஹதீஸ் சுருக்கம்] (நூல்; புஹாரி;எண் 3700)
இந்த செய்தியில் தொழுகையில் உமர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு பின்னால் தொழுகையில் அணிவகுத்திருந்த ஒருவர் தனது தொப்பியை கழற்றி வீசிஎறிந்தார் என்பதை பார்க்கும்போது தொழுகையில் தொப்பியணிவது நடைமுறையில் இருந்துள்ளதை காணலாம்.
தொப்பியின் வகை மாறுபட்டாலும் தொப்பி இருந்துள்ளது என்பதற்காக இதை குறிப்பிடுகிறோம். மேலும், இதை ஆதாரமாக கொள்ளமாட்டோம் என்று தவ்ஹீத்வாதிகள் மறுத்தால்கூட, பிரச்சினை விசயத்தில் எது எதற்கோ சமரசம் காணும்போது, ஒற்றுமை நாடி தொப்பியணிந்தால் என்ன பாதிப்பு வந்துவிடும்?
ஆமீன்:
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமீன் சொல்லச்சொன்னார்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொல்லவில்லை. முதல்வரிசைக்கு கேட்குமளவுக்குதான் சொல்லியுள்ளார்கள். அவர்களை பின்தொடர்ந்து சகாபாக்கள் தொழும்போது பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொல்லியதாக ஆதாரமுண்டா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் சகாபாக்கள் தங்களுக்கு மத்தியில் தொழும்போது பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொன்னதாக ஹதீஸ் உள்ளது. நபிவழியை பின்பற்றுவதாக இருந்தால் மிதமாக முன்வரிசை கேட்குமளவுக்கு ஆமீன் சொல்வதுதானே முறை. சகாபாக்களை பின்பற்றமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு சகாபாக்கள் வழிமுறையில் ஆமீன் என அலறுவது ஏன்? அதே நேரத்தில் ஆமீன் சொல்வதை பள்ளிவாசல் நிர்வாகிகள் தடுப்பது அப்பட்டமான வரம்புமீரலாகும்.
விரலசைத்தல்:
விரலசைக்காமல் இருப்பதற்கும் ஹதீஸ் உள்ளதை பாருங்கள்
ஆசிம் இப்னு குலைபில் அல்ஜர்மி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அப்போதுஅவர்கள் தமது இடதுகையை இடது தொடையின் மீதும், வலதுகையை வலது தொடைமீதும் வைத்திருந்தார்கள்.மேலும் தமது வலதுகை விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலை நீட்டிவைத்துகொண்டு ‘இதயங்களை புரட்டுபவனே என்னுடய இதயத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.நூல்;திர்மிதி, 3511
இந்த ஹதீஸை சு.ஜ. பள்ளியில் அமுல்படுத்தினால் ஏன் பிரச்சினை வருகிறது? இரு ஹதீஸ்கள் இருக்கும்போது ஒரு ஹதீசைமட்டும்தான் அமுல்படுத்துவோம் என்று பிடிவாதம் பிடிப்பது ஏன்? எனவே, தொழுகை விசயத்தில் சு.ஜ.வினர் சில மஸாயில்களில் அறியாமையிளிருந்தால் பக்குவமாக எடுத்துச்சொல்லி நாளடைவில்தான் சரிசெய்யமுடியுமேயன்றி, எடுத்தேன்-கவிழ்த்தேன் என்று தனிப்பள்ளி காண்பது சரியல்ல.
”Jazaakallaahu khairan” Mukavai express