Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்!

Posted on August 10, 2009 by admin

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ٌ

”….அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்”. (அல்குர்ஆன் 2:102)

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.

ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.

இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.

நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.

இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.

எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ”நீ ஒன்றுமே செய்யவில்லை” எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ”நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்” என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.

மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! ”அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)

அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.

மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.

அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.

தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: அஹ்மத், புகாரி

பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.

இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.

இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.

நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)

ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.

”Jazaakallaahu khairan” Islam thalam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb