அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;
”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது, எனக் கூறினார்கள்.
மக்கள் ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?’ என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருக்கவில்லை.
தொடர்ந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார்.
உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, ‘இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது’ எனக் கூறினார்கள்.
இதைக் கேட்ட மக்கள், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.” (நூல் புஹாரி எண் 3471)
இந்த பொன்மொழியில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு செய்தியை சொல்லும்போது, அதை உறுதிப்படுத்துவதற்காக இந்த செய்தியை நானும் அபூபக்கரும்- உமரும்[ரலியல்லாஹு அன்ஹும்] நம்புகிறோம் என்று சொல்லும் அந்த இடத்தில் இவ்விரு ஸகாபிகளும் இல்லை. இந்த நிலையில் நபியவர்கள் சொல்கிறார்கள் எனில், அல்லாஹ்வின் தூதர் அவர்களின் வாக்கை, அவர்கள் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்பி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உண்மைப்படுத்தக்கூடியவர்களாக, அமல் செய்யக்கூடிய நல்லறத்தோழர்களாக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும்- உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கமுடிகிறது.