கேள்வி: 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா?
இது சந்தேகத்திற்கு இடமின்றி விபச்சாரக் குற்றத்தைச் சேரும். இதற்கான பதிலை ஒரே வரியில் சொல்லிவிட முடியும், ஆனாலும் விபச்சாரம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைபாட்டை ஆதாரங்களோடு இங்கே விளங்கிக் கொள்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும்.
1.விபச்சாரம் கூடாது:
அல்லாஹ் திருமறையில் விபச்சாரம் குறித்து இவ்வாறு சொல்கிறான்.
”நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும், மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது’ (அல்குர்ஆன் 17:32)
இங்கே அல்லாஹ் பயன்படுத்தி இருக்கும் வார்த்தையின் ஆழத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். ”விபச்சாரத்தை நெருங்காதீர்கள்” என்பது ”விபச்சாரத்தை செய்யாதீர்கள்” என்று சொல்வதை விட எந்த அளவுக்கு கவனமான வார்த்தைப் பிரயோகம் என்பதை புரிந்து கொள்ளலாம். ”விபச்சாரத்தை செய்யாதீர்கள்” என்பது அந்தச் செயலை செய்வதை மட்டுமே தடுக்கும். ஆனால் விபச்சாரத்திற்கு முந்திய செயல்களை அவை தடுக்காது. பார்ப்பது, பேசுவது, நடப்பது, பிடிப்பது இதுபோன்ற அதை நெருங்குவதற்குரிய காரியங்களும் உள்ளன. இவற்றுக்கு தடை விதித்தால் தான் விபச்சாரம் என்ற குற்றத்திலிருந்து தப்ப முடியும். அதனால் தான் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
2.நூறு கசையடிகள்:
விபச்சார குற்றம் எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை அதற்கு தரப்படும் தண்டனையை வைத்து விளங்கிக் கொள்ளலாம். ஒரு இஸ்லாமிய ஆட்சியில், ஒரு இஸ்லாமிய ஆட்சியாளன் இந்த தண்டனையை நிறைவேற்றுவது அவன் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
”விபச்சாரியும், விபச்சாரனும்” ”இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்” (அல்குர்ஆன் 24:2)
திருமணம் ஆகாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. திருமணம் ஆகாதவருக்கத் தான் இந்த தண்டனை என்பதை அடுத்து வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
3.மரண தண்டனை:
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொண்டார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மீண்டும் கூறினார். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்.
முடிவில் நான்கு தடவை தனக்கு சாட்சியம் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”உமக்கு பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீர் மணமுடித்தவரா? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.
அதன் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறியுமாறு கட்டளையிட முஸல்லா என்ற இடத்தில் கல்லெறியப்பட்டார். கல்லெறி விழுந்ததும் அவர் ஓடலானார். பிடிக்கப்பட்டு மீண்டும் கல்லெறியப்பட்டு மரணித்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்தார்கள். அவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கிறார்கள். (நூல்கள்: புகாரி, திர்மிதி 1451)
இந்த ஹதீஸ் திருமணம் ஆனவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் தண்டனையாக கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், ஒருவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசரம் காட்டக் கூடாது என்பதையும் விளக்குகிறது.
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக அவரது குற்றத்தை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. தண்டனை கொடுப்பதில் அவசரம் காட்டி ஓர் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் இதன் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றொரு ஹதீஸ் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.உங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களைத் தண்டிப்பதைத் தவிருங்கள். அவரை விட்டுவிட ஏதேனும் ஒருவழி இருந்தால் விட்டுவிடுங்கள். ஏனெனில் ஒரு தலைவர் தண்டனை வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவதை விட மன்னிப்பு வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவது சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி 1444)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நரகம் காட்டப்பட்ட போது அதில் விபச்சாரகர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டார்கள். (நூல்: புகாரி 1386) அதாவது மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள்.
4.பாவமன்னிப்பு: ”உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள், அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள்
– நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4:16)
”எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4:17)
நமது நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாததினாலும், விபச்சாரத்திற்கு உரிய தண்டணை வழங்கப்படாததினாலும் விபச்சாரகர்கள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமே இல்லை. விபச்சாரகர்கள் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பது திருமண ஒப்பந்தம் இன்றி ஆணும் பெண்ணும் விரும்பி செய்வதாகும். 15 வயதுடைய விபரமறிந்த ஓர் ஆண், ஏழு வயதுடைய விபரமறியாத பெண்ணை உடலுறவில் ஈடுபடுத்துவது கற்பழிப்பு வகையைச் சேர்ந்ததாகும். விபச்சாரக் குற்றத்திற்கே மிகக் கடுமையான தண்டனை என்கிற போது கற்பழிப்புக் குற்றம் அதைவிட கடுமையானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கேள்வி : மேஜிக் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? சிலர் கையில் அணிந்து கொள்வதற்காக வளையங்களையும் கறுப்புக் கயிறுகளையும் கொடுக்கிறார்கள், இன்னும் சிலரோ தண்ணீரில் ஒதி ஊதிக் கொடுக்கிறார்கள் இவைக்கெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா?
மேஜிக், சூனியம் ஆகிய இரண்டையும் குறிக்க அரபியில் ”ஸிஹ்ர்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ”அழிவுக்கு இட்டுச் செல்லும் 7 பெரும்;பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்” எனக்கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவற்றில் இரண்டாவதாக ஸிஹ்ரையும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸிலிருந்து மேஜிக், சூனியம் செய்வது கூடாது என்பது தெளிவாகிறது. (மேலும் பார்க்க: அல்குர்ஆன் சூரா அல்பகரா 2:102, ஃபத்வா பகுதியில் அடுத்து இடம் பெறப்போகும் ஃபத்வா)
நோயை அகற்றுவதற்காக அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கழுத்தில் அல்லது கையில் அல்லது இடுப்பில் நூல்களை, கயிறுகளை கட்டிக் கொள்வதும் தாயத்து போன்றவற்றை தொங்கவிடுவதும் கூடாது. அதைப் போலவே மந்திரித்த தகடு, கற்பூரம் போன்றவற்றை வீடுகளில் வணிக, தொழில் கூடங்களில் தொங்கவிடுவதும் கூடாது.
”யார் எதையேனும் தொங்கவிட்டுக் கொள்கிறாரோ அவர் (அல்லாஹ்வின் உதவியின்றி) அதன் பொறுப்பிலேயே விடப்படுவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு மனிதர் தனது புஜத்தின் (மேல்கை) ஒரு வளையத்தை அணிந்திருப்பதை கண்டார்கள். அவரிடம் ”எதற்காக இதனை அணிந்திருக்கிறீர் என வினவினார்கள். உடலில் ஏற்படுகின்ற ஒருவித பலவீனத்தைப் போக்க என்று அவர் பதிலளித்த போது, ”அதனை கழற்றி வீசி விடு. அல்லாமல் அது உன்னில் இருக்கிற நிலையில் நீ மரணித்தால் நீர் ஜெயம் (வெற்றி) பெறவே மாட்டீர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), நூல்: அஹ்மத்)
எனவே கயிறு கட்டுவது தாயத்து கட்டி தொங்க விடுவது போன்றவை நமது நற்கருமங்களை அழித்து நாசமாக்கி நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்பதால் அவற்றிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் ஓதிக் குடிப்பது சம்பந்தமாக ஸலபுகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் அவ்வாறு செய்வதிலிருந்து நாம் தவிர்ந்து கொள்வது சிறந்தது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி : மாதவிலக்கு சம்பந்தமாக ஸுனன் இப்னுமாஜாவில் உள்ள 264, 265, 267, 269 ஹதீஸ்கள் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் ”மாதவிடாயின் போது அவர்களை நெருங்கவும் வேண்டாம்” எனும் வசனத்துடன் முரண்பட வில்லையா?
நீங்கள் குறிப்பிடுவது போன்ற ஹீதீஸ் இப்னுமாஜாவில் இந்த எண்களில் இடம்பெற்றிருக்க வில்லை, மாறாக அவை அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. அந்த ஹதீஸ்களை அப்படியே தருகிறோம்.
”யார் தனது மனைவி மாதவிலக்காக இருக்கும் போது உடலுறவு கொள்கிறாரோ அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்வாராக!” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது 264)
ஒருவர் தன் மனைவியை மாதவிடாய் துவக்கத்தில் உடலுறவு கொண்டால் ஒரு தீனார்! அவளை மாதவிடாய் நின்று போகும் போது உடலுறவு கொண்டால் அரை தீனார்! (தர்மம் செய்ய வேண்டும்) என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: மிக்ஸம் அவர்கள், நூல்: அபூதாவூது 265)அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தனது மனைவியர்களில் மாதவிலக்காகி இருக்கும் மனைவியை அவர் மே(னியி)ல் பாதி தொடைகள் வரை அல்லது முட்டுகள் வரை மறைக்கின்ற ஆடையிருக்கும் போது கட்டி அணைப்பார்கள். (அறிவிப்பவர்: மைமூனா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூது 267) நான் மாதவிலக்காகி இருக்கும் போது நானும், அல்லாஹ்வுடைய திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (இடுப்பாடை அல்லாத) ஒரே மேலாடையில் (இருவரும் படுத்து) இரவைக் கழிப்போம். என்னிடமிருந்து எதுவும் (இரத்தம்) அதில் (அவ்வாடையில்) பட்டு விடும்போது அதனுடைய இடத்தை (மட்டும்) அ(து பட்ட இடத்)தை மட்டும் அவர்கள் கழுவுவார்கள். பிறகு அதை அணிந்தவாறு தொழுது கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூது 269)
நீங்கள் சொல்லும் குர்ஆன் வசனத்தை அப்படியே தருகின்றோம்:
”…ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:222)
மேலே உள்ள குர்ஆன் வசனமும் அபூதாவூது 267,269 ஹதீஸ்களும் முரண்படுவது போல் தோன்றினாலும் வேறு சில ஹதீஸ்கள் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளன. கீழே வரும் ஹதீஸ் இந்த குர்ஆன் வசனம் இறங்குவதற்குரிய காரணத்தையும் விளக்குகிறது.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, ”மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்” என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கும் போது, ”உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது) ”மாதவிடாய் பெண்களை விட்டு விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்” என்ற வாசகம் நேரடியாக உடலுறவைக் குறிப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் விளக்கம் அமைந்துள்ளதால் இந்த விஷயத்தில் எந்த முரண்பாடும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது குற்றம். அபூதாவூது 264,265 ஹதீஸ்கள் மறந்தோ அல்லது தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாத நிலையிலோ மாதவிடாய் சமயத்தில் உடலுறவில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஒரு தீனார் என்பது நாலரை கிராம் எடையுள்ள தங்க நாணயமாகும். அதையோ அல்லது கிரயத்தையோ தர்மம் செய்தாக வேண்டும். இந்த ஹதீஸ்கள் அந்த வசனத்தோடு முரண்படவே இல்லை.
இது கடமையான நோன்பிருக்கும் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அதற்கு பரிகாரமாக 60 நோன்பு வைக்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற குற்றப்பரிகாரத்தைப் போன்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
”Jazaakallaahu khairan” islamthalam.wordpress.com