[ ஈரானின் வெளியுறவுக் கொள்கை அணுசக்தி திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது. இது மேற்கத்திய நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் மூலம் அணுஆயுத கட்டமைப்பை வலுப்படுத்திவிடுமோ என்ற பயம் மேற்கத்திய நாடுகளை கவ்விக்கொண்டுள்ளது.
வரும் காலத்திலும் ஈரானின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையே தொடரும். இதில் எவ்வித மாற்றமும் இருக்காது – அஹமதிநிஜாத் ]
தெஹ்ரான்: அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து அடிபணியமாட்டோம் என்று ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் தெரிவித்தார்.
அஹமதிநிஜாத் ஈரானின் அதிபராக இரண்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையின் போது அஹமதிநிஜாத் மேற்கண்டவாறு அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆதிக்க சக்திகளால் சர்வதேச அளவில் பாகுபாடு நிலவுகிறது. இந்த பாகுபாட்டைக் கலைந்து அனைத்து நாடுகளும் பயன்பெறும் வகையிலான முயற்சிகளை ஈரான் மேற்கொள்ளும்.
ஈரானின் வெளியுறவுக் கொள்கை அணுசக்தி திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது. இது மேற்கத்திய நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் மூலம் அணுஆயுத கட்டமைப்பை வலுப்படுத்திவிடுமோ என்ற பயம் மேற்கத்திய நாடுகளை கவ்விக்கொண்டுள்ளது. வரும் காலத்திலும் ஈரானின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையே தொடரும். இதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார் அஹமதிநிஜாத்.
உங்கள் வாழ்த்து யாருக்கு வேண்டும்? நான் பதவியேற்றுக்கொண்டதற்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர்கள் (அமெரிக்கா) வாழ்த்துத் தெரிவிப்பார்கள் என்று ஈரான் எதிர்பார்க்கவில்லை என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார்.
முன்னதாக, அஹமதிநிஜாத் பதவியேற்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் மாளிகை தரப்பு, அஹமதிநிஜாத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்தான். ஆனால் அவர் அதிபராகப் பதவியேற்பதற்கு வாழ்த்து சொல்ல அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிவித்தது. !!!!!
இந்நிலையில் அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் அஹமதிநிஜாத் தெரிவித்துள்ளார். பதவியேற்கும் விழா தெஹ்ரானில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களும், மதக் குருக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
அந்நாட்டின் மொத்த 290 எம்.பி.க்களில் 240 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தில் வேலை செய்யும் வெளிநாட்டினர்
குடிஉரிமை பெறுவதில் சிக்கல்
லண்டன்: இங்கிலாந்தில் வேலை செய்யும் வெளிநாட்டினர் இதுவரை தொடர்ந்து 5 ஆண்டுகள் தங்கி இருந்தால் அவர்களுக்கு தானாக குடிஉரிமை கிடைத்து விடும். இப்போது இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய முறைப்படி, இங்கிலாந்தில் வேலை செய்யும் வெளிநாட்டினர் மொத்தம் 20 புள்ளிகள் பெற்றால் மட்டுமே அவர்களுக்கு தற்காலிக குடிஉரிமை வழங்கப்படும். இந்த புள்ளிகள் அவர்கள் திறமை மற்றும் சம்பாத்தியம், தகுதி ஆகியவற்றின் அடிப்படையிலும், இங்கிலாந்து மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.
நிரந்தர குடிஉரிமை பெறவேண்டுமானால் அவர்கள் இங்கிலாந்து வாழ்க்கை அறிவு பற்றியோ அல்லது ஆங்கில மொழி அறிவு பற்றியோ தேர்வு எழுதி வெற்றி பெறவேண்டும்.
12-ந் தேதி முதல் சென்னையில் ”மகளிர் மட்டும்” ரெயில்!
மகளிர் மட்டும்’ ரயில் சேவை, சென்னையில் 12-ந் தேதி தொடங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் `மகளிர் மட்டும்’ ரெயில் சேவை தொடங்க ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, இது பற்றிய அறிவிப்பை மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதன் முன்னோட்டமாக நேற்று மாலை டெல்லியில் இருந்து பால்வால் பகுதி வரை செல்லும் புறநகர் `மகளிர் மட்டும்’ ரெயில் சேவையை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
டெல்லி, மும்பை, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தென்னக ரெயில்வேயில், சென்னையில் வரும் 12-ந் தேதி `மகளிர் மட்டும்’ ரெயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த `மகளிர் மட்டும்’ ரெயில் சேவை தாம்பரம்-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, அரக்கோணம்-சென்னை கடற்கரை ஆகிய 3 வழித்தடங்களில் வரும் 12-ந் தேதி முதல் ஓடத் தொடங்கும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.