சென்னை: பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியதில் இருந்தே மத்திய அரசு உஷாராக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டரை மாதங்களாக விமான நிலையங்களில் 42 லட்சம் பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் 558 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 470 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர். இதன்மூலம் பன்றி காய்ச்சல் மருந்து, 100 சதவீதம் சரியாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.
பன்றிக் காய்ச்சல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், பன்றிக் காய்ச்சல் குறித்த செய்திகளை தங்களது மாணவ, மாணவியரிடம் எடுத்துக் கூறி வருகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துக் கூறப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பரிசோதனைகள் நடத்தும்படியும் பல்வேறு பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியோர் அல்லது அடிக்கடி வெளிநாடு செல்லும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரைக் கொண்டுள்ள மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுத்து பரிசோதனைகளைச் செய்ய சில பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளனவாம்.
இதுகுறித்து சூளைமேட்டில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வசந்தா பாலசுப்ரமணியன் கூறுகையில் நோய் பாதிப்பு குறித்து நாங்கள் தினசரி காலை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு விளக்கி வருகிறோம்.
நோய் வேகமாக பரவி வருவதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து விளக்கிக் கூறி, அதுபோன்று ஏதாவது தென்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் கூறி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இவை தவிர பள்ளிகளில் அவசரத் தேவைக்காக மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
குழந்தைகளை அதிகம் தாக்கும் ஸ்வைன்…
இதற்கிடையே, 10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளைத்தான் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக தாக்கி வருவதாக சுகாதாரத் துறை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 10 முதல் 39 வயது வரையிலானவர்களையே பெரும்பாலும் பன்றிக் காய்ச்சல் அதிகம் தாக்கியுள்ளது.
இதுவரை நோய் தாக்கியவர்களில் 558 பேரில் 350 பேர் இந்த வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 179 பேர். 20 முதல் 29 வயது வரையிலானவர்கள் 96 பேர்.
மேலும் பன்றிக் காய்ச்சல் தாக்கியவர்களில் 48 சதவீதம் பேர் பள்ளிக்கூட சிறார்கள் ஆவர். அதாவது பள்ளிச் சிறார்கள் 245 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களைப் பொறுத்தவரை 20 முதல் 29 வயதுகுட்பட்டவர்கள் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை, அதிக அளவில் (62 பேர்) பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
அதிக அளவில் இளைஞர்கள், இளம் பெண்கள் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட முக்கிய காரணம், அவர்கள்தான் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதால்.
முஸ்லிம்களின் தாடிக்கு தடை கூடாது!
முப்படைகளுக்கு ராணுவ அமைச்சர் உத்தரவு!
தாடி வைப்பது தாலிபானிசம் என கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, நாடு தழுவிய எதிர்ப்பிற்குப் பிறகு தனது கருத்துக் களுக்காக வருத்தம் தெரிவித்தார். மத அடையாளங்கள் குறித்த விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் பாரபட் சம் காட்டப்படுகிறது என்ற வினா முஸ்லிம்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களின் உள்ளத்திலும் எதிரொலித்ததைத் தொடர்ந்து சில முக்கிய மாற்றங்கள் சமீபகாலமாக ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு இந்திய வான் படையில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர் தாடி வைக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பு வெளியிடப் பட்டு இந்தியாவை சூடாக்கியது. இந்நிலை யில் கட்ஜு அவர்கள் வருத்தம் தெரிவித்த நிகழ்வு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. சான்றாக, இந்திய சட்ட வாரிய தலைவர் மவ்லவி முஹம்மதலி ரஹ்மானி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து, விமானப் படையில் தாடி வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலை நீடிப்பது குறித்து தங்களது காட்டமான கருத்தை தெரிவித்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், இந்திய வான் படையில் தனது ‘தாடி உரிமையை‘ நிலைநாட்டுவதற்காக வான் படை வீரர் இளைஞர் முஹம்மது சுபைர் தொடுத்த வழக்கில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெயசிங், தாடி உரிமை குறித்து வான் படை தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யும் என தெரிவித்தார். விமானப் படை சட்ட விதிகளின்படி பணியில் முதன்முதலில் சேரும்போது தாடி வைக்காமல் இருந்தால், பின்னர் தாடி வைக்க சட்ட விதிகள் அனுமதிக்காது என்ற விதி தளர்த்தப்படக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகளில் பணிபுரியும் முஸ்லிம் வீரர்களோ அதிகாரிகளோ தாடி வைத்தால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இந்திய ராணுவத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவரத் அமைப்பைச் சேர்ந்த தூதுக்குழுவினர் இதுதொடர்பாக ராணுவ அமைச்சரை சந்தித்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.