பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை.
நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ்! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி.
கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.
பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது!
ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.
பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ண மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான்.
எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?
பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.
சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.
வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.
பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.
15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.
டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.
இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?
கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.
ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.
இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.
15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.
ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.
பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.
மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.
துபாய் போனால் குறுகிய காலத்திலேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது!
குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறையிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?
எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் !
உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர் உழைப்பாளி !!
ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
[ துபாய்க்கு சென்ற எல்லோருடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும் என்பதல்ல. அதே வேளையில் இக்கட்டுரையை ஒரு எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம் – ADM. ]