Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கற்றதனால் ஆய பயன்…

Posted on July 28, 2009 by admin

கற்றதனால் ஆய பயன்…

[ அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை.

அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்

கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி! ]

ஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.

ஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன

வேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.

ஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.

ஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

இரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.

இதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.

மேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.

இதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்பில் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.

கல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.

இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.

உதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.

அதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா? மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.

அடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.

அதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், “ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா?” எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.

”பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்” எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, “அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்” எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட் எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது – 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்”.

இதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி!

நன்றி: கட்டுரையாசிரியர் – என். முருகன், தினமணி

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb