இஸ்லாமியச் சட்டம் (13)
நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
[ திருமணத்தின் நோக்கம், முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம், (கருக்)கொலையும் – சட்டமும் ]
திருமணத்தின் நோக்கம்
திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள்.
திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.
கடலில் படகுப்பயணம் செய்பவர்கள் படகில் ஓட்டை ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே வராதிருப்பதற்கு அதை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சிகள் தோல்வியடைந்தால் வேறு படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியரிடையே சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சிந்திக்கத் திறனில்லாமை, ஆத்மீகப் பயிற்சியில்லாமை போன்ற காரணங்களினால் விவாகரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
தலாக் என்னும் திருமண முறிவுக்கு ஆல்குர் ஆனில் அத்தியாயம் 2 ; 4 58 ; 65 ஆகியவைகளில் அங்கீகாரமும் விளக்கங்களும் அருளப்பட்டிருக்கின்றன. அத்தியாயம் 4 வசனம் 35,128 ஆகிய இடங்களிலும்”அத்தலாகு” என்ற சொல் இரண்டு இடங்களிலும்”அல்முதல்லகாத்”என்ற சொல் இரண்டு இடங்களிலும் அல்குர்ஆனில் வருகின்றது.
பெண் சுதந்திரம், ஆண் பெண் சமம் என்று கூறிக் கொண்டே பெண்களை அடிமைகளாக சித்தரிக்கும் ”கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற இக்கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் நியாயமான காரணங்கள் இருந்தால் ஷரீஅத் சட்டத்தின்படி விவாகரத்து பெறலாம் என்று அனுமதிக்கிறது.
தகுந்த காரணமின்றி விவாகரத்து கேட்கும் ஒரு பெண் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியிருக்கிறார்கள். பெண்களுடைய உரிமை சம்பந்தமாக எழும் வழக்குகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெண் நீதிபதி இருக்க வேண்டும் என்று இமாம் அபூஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு ஆணைப்போல ஒரு பெண் விவாகரத்து சொல்வதற்கு உரிமைகள் குறைவாக தரப்பட்டிருப்பதின் காரணம் பெண்கள் பொதுவாக உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவு எடுப்பவர்கள், பிறகு அதற்காக வருந்துபவர்கள். எனினும் மற்ற மதங்களில் உள்ளது போன்ற விவாகரத்து காரணங்கள் இஸ்லாத்தில் மிக மிகக்குறைவு என்பதை மனதிற்கொள்ள வேண்டும். 1920ன் மிகப்பெரிய மார்க்க அறிஞர்மெளலானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் பெண்கள் அறிவாற்றலில் குறைவாக இருப்பதால் தன்னிச்சையாக அவர்கள் விவாகரத்து கேட்பதை அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.
அண்மையில் எகிப்து நாட்டின் ஜனாதிபதி பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமையைக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர முயற்சித்த போது, பெண்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், அவசரமான, முன்யோசனையற்ற முடிவு எடுப்பவர்கள் என்று கூறி உலமாக்கள் கடுமையாக எதிர்த்ததால் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் தன் முயற்சியைக் கைவிட்டார்.
உணர்ச்சி வசப்பட்டு விபரீத முடிவுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கருத்து மோதல்களும் சச்சரவுகளும் எல்லையத் தாண்டி ஏற்படும் போது நடுவராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் இருவரும் பிரிந்து செல்ல ஒப்புதல் தந்து செயல்படுத்துங்கள் என்று இறைவன் தன் திருமறையில் அறிவுரை தருகிறான். திருமறையின் அறிவுரையைத் தம்பதியார் ஏற்று செயல்படாவிட்டால் இஸ்லாமிய வட்டத்திற்கு அப்பால் தூக்கி எறியப்படும் நிலைமை ஏற்படும்.
முத்தலாக் செய்வதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலும் அது வெறுக்கத்தக்கது. ஒவ்வொரு மாதவிடாய் காலம் முடிந்த பின்னும் ஒருமுறை விவாகரத்துச் சொல்லி ஒற்றுமை/மறுமலர்ச்சி அடைவதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும். மூன்றாவது முறையும் வேற்றுமை நீடித்தால்தான் இறுதியாக ஒரு முறை சொல்லி விவாகரத்துச் செய்தல் வேண்டும். அதுதான் அழகிய தலாக் என்று சொல்லப்படுகிறது.
என்றும் நம் நினைவில் வாழ்கிற காயிதே மில்லத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்: ”தன்மானம் உள்ள முஸ்லிம் இளைஞன் தன் உழைப்பில் நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் இறைவன் அளிப்பது மட்டும் போதும் என்ற உணர்வுடன் ஏழை வீட்டில் பெண் எடுப்பான். அவன் கைக்கூலிக்கோ மற்ற எந்த அற்ப பொருளுக்கோ ஆசைப்படமாட்டான். நமது மார்க்கச் சட்டம் தெரியாத இளைஞன் பணத்திற்கும் கைக்கூலிக்கும் ஆசைப்படுவான். அவனை நமது பெரியோர்கள் திருத்த வேண்டும். இல்லையயன்றால் நமது சந்ததியினருக்கு ஆபத்து வந்து சேரும்.”
கைக்கூலிக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் கைக்கூலி பெறுவதற்காகவே, தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
படித்த இளைஞர்களும் பணத்திற்காக விலைப்போகும் கொடுமை இந்த நாட்டில் அதிகமாகி வருவது வேதனைக்குரியது. கணவன் மனைவி இருவரும் ஒப்புக் கொண்டு விவாகரத்து செய்வது ”முபர்ராத்” விவாகரத்து என்றும் மனைவி விரும்பி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றால் அதற்கு ”குலா” என்றும் கூறுவார்கள்.
முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939)
1939ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்(Dissolution of Muslim Marriage Act 1939)இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களைக் காட்டி முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.
1. நான்கு ஆண்டுகளுக்கோ அதற்கு மேற்பட்டோ கணவன் போன இடம் தெரியவில்லையயன்றாலும்
2. இரண்டு ஆண்டுகள் மனைவிக்கு குடும்பப் பராமரிப்பு செலவு கொடுக்க கணவன் தவறினாலும்
3. ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலோ மேல் முறையீடு செல்லும் உரிமையிழந்து கணவனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டாலும்
4. தகுந்த காரணம் இல்லாமல் மூன்று ஆண்டுகள் வரை கணவன் தன் கடமைகளை செய்யத் தவறினாலும்
5. கணவன் ஆண்மையற்ற தன்மை உடையவன் என்று நிரூபிக்கப்பட்டாலும்
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொழுநோய், பெண்சீக்கு நோய் ஆகியவை கணவனுக்கு இருந்தாலும்
7. பெண்ணுக்கு பருவ வயது எய்துவதற்கு முன்பெற்றோராலோ, காப்பாளராலோ திருமணம் செய்து வைக்கப்பட்டாலும் இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தவறுகளை கணவன் செய்தாலும் ஒரு பெண் விவாகரத்துப் பெறலாம்.
முஸ்லிம் சட்டப்படி கணவன் மதம் மாறினால் விவாகரத்து ஏற்பட்டுவிடுவது போல மனைவி இஸ்லாத்தை துறந்தாலும் திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் U.M.அபுல் கலாம் முஸ்லிம் சட்டம் என்ற நூலின் 203ம் பக்கத்தில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.
பிற மதத் தம்பதிகளில் ஒருவர் முஸ்லிமாக மாறிவந்த மற்றவரை முஸ்லிமாக மாறும்படி அழைக்கவும் அதை அவர் மறுக்கவும் செய்த காரணத்தை மட்டிலும் வைத்து வேறு மத சட்டஅடிப்படையில் நடந்த திருமணத்தை முஸ்லிம் சட்ட விதிப்படி திருமண முறிவு செய்து கொள்ள உரிமைக் கோருவது இந்திய நாட்டுச் சட்டத்திற்கு ஒத்துவராது என்று கூறி நூர்ஜஹான் பேகம் வழக்கில் (Noorjahan Vs Enggene Tishence 1941 45 CWN 104)கூறப்பட்டுள்ள முடிçப் பின்பற்றி ரொபஸ்ஸாகான் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சரளா முத்கல் வழக்கில்(Sarala Mudgal Vs Union of India and others 1995 (3) SCC 635 – 1995 AIR SC 1531)இந்து கணவன் முஸ்லிம் மதத்திற்கு மாறிவந்தால் இந்து முறைப்படி நடந்த திருமணம் முறிந்து விடாது என்றும் இந்து திருமணச் சட்டத்தின்படி நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை அச்சட்ட முறைப்படியே முறிக்க வேண்டும் என்றும், மதம் மாறி வந்து முஸ்லிம் முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் முந்தி திருமணம் ரத்தாகி விட்டது என்றும் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்கு பிரிவு 494 இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மூன்று மாத காலமோ அல்லது மூன்று மாதவிடாய் காலமோ முடியும் வரை கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம். இந்த காலம் முடிந்தவுடன் அவள் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்று விடுகிறாள். அதனால் தான் விவாகரத்திற்கு ஆளான முந்திய கணவனிடமிருந்து அவள் ஜீவனாம்சம் பெறுவதை இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்க வில்லை. என்றாலும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு தகப்பனின் கடமை. வயது அடைவது வரையில் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.
1973ம் ஆண்டு குற்ற விசாரணை முறை சட்டம் மத்திய சட்டம் 2/1974ன் படி இச்சட்டத்தின் கீழ் 125 முதல் 128 வரை உள்ள பிரிவுகள் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு ஜீவனாம்சத்திற்கு வழிவகை செய்கின்றன. உடனடியாகவும், விரைவாகவும் நிவாரணம் கிடைக்க வழி செய்கிறது. இவ்விதித் துறைகள் சட்ட சிக்கல்களில் மூழ்காமல் குறுக்கு விசாரணை முறையில் (Summary Trails) முடிவுகட்ட வழி செய்கிறது. சிவில் வழக்கிலுள்ள நுட்பமும், திட்டமும், எதிர்ப்பும், மறுப்பும், விசாரணைகளும் குறுக்கு விசாரணைகளும் இங்கு உன்னிப்பாக பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. சிவில் வழக்கு மூலம் முடிவு கட்டப்பட்ட பின்னர் அத்தீர்ப்பைக் காண்பித்து இப்பிரிவின் கீழ் நிவாரணம் கேட்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் (Air 1968 Madras 79)தீர்ப்பளித்துள்ளது.
தேவை : முற்றுப்புள்ளி!
சமுதாயத்தின் பாதுகாப்புக்காக இயற்றப்படுபவையே சட்டங்கள், பல்வேறு சமுதாயங்கள் இணைந்து வாழ்வதற்கும் கொடுமைகள் களையப்படுவதற்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் நீதியை நிலை நிறுத்துவதற்கும், பன்னாட்டு உறவுகளை இணைப்பதற்கும் சட்டத்தின் துணை அவசியமாகிறது.
ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை, அவருடைய சம்மதமின்றி நாணயமற்ற முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதைத் திருட்டு என்று கூறுகிறோம்.
குற்றவியல் சட்டங்களில், திருட்டுக் குற்றம் மிக மோசமானது. இந்தியக் குற்றவியல் சட்டத்தில் 378-ம் பிரிவு அது பற்றிய விளக்கத்தைத் தருகிறது. உதாரணமாக ஒருவனுக்கு சொந்தமான மரத்தை அவனுடைய அனுமதியில்லாமல் வெட்டி தன்னுடைய அனுபவத்துக்காக அதை எடுத்துச் சென்றால் அது திருட்டு எனப்படும்.
மற்றொருவன் வீட்டிற்குச் செல்கின்ற ஒருவன் அவனது மேசையில் ஒரு மோதிரத்தைப் பார்க்கிறான். வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல், அவன் அந்த மோதிரத்தை எடுத்துச் சென்றால் அது திருட்டு தான்.
அரசுக்கு சொந்தமான மின்சாரத்தை அரசு அனுமதியில்லாமல் அந்த மின்சாரத்தை தன் வீட்டுக்கு உபயோகப்படுத்தினால் அதுவும் திருட்டு தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
குற்றவியல் சட்டம் 379 ம் பிரிவில் திருட்டுக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவாளி, திருடினான் என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று வருடங்கள் வரை தண்டனையோ, அல்லது அபராதமோ, அல்லது சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்தோ தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.
D.K.K.முதலியார் என்பவர் மீது தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்த வழக்கில் I.P.C 378ம் பிரிவில் கூறப்பட்டிருப்பது போல் மின்சாரம் என்பது அசை பொருள் என்று இல்லா விட்டாலும் 1910ம் ஆண்டு மின்சார சட்டம், பிரிவு எண்.39. பிரிவு எண்.50, ஆகியவற்றை இணைத்து, I.P.C. 379ம் பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல் பிரதிவாதி, மின்சாரத்தை தன் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதால், திருடியதற்கான தண்டனை பெற்றார்.
இதேபோல், நகராட்சி வினியோகிக்கும் தண்ணீரை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகித்தாலும் திருட்டு குற்றம் செய்ததாகி விடும்.
பந்தே அலிஷேக் என்பவர் மீது கல்கத்தா நீதிமன்றத்தில் 1939ல்(Bande Ali Shaikh 1939-2 CAL 419)தரப்பட்ட தீர்ப்பில் சொந்த நிலத்திலேயே ஒருவர் திருடினார் என்பதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் (குற்றவாளி) மற்றவருக்குக் கொடுக்க வேண்டிய கடன் பாக்கிக்காக அவருடைய நிலத்தை வழக்கு மன்றம், அவர் அறுவடை செய்யக் கூடாது என்று ஆணையிட்டு, வழக்குமன்றத்தின் அனுபவ பாத்யதையில், குற்ற விசாரணைச் சட்டம்- 145ன்படி தன் வசத்தில் வைத்திருந்தது. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு மன்றத்தின் அனுமதியில்லாமல் அறுவடை செய்து தானியங்களை எடுத்துச் சென்று விட்டார். அதனால் அவர் மீது திருடினார் என்பதற்கான தண்டனை வழங்கப்பட்டது.Obayya (1898) 22 MAD 151என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இது போன்ற ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது அனுமதியில்லாமல், அறுவடை செய்து தானியங்களை எடுத்துச்சென்று திருட்டு ஆகாது என்றும், குற்றவியல் சட்டம், பிரிவு 403, 424ன் படி இது மோசடியும், ஏமாற்றமும் ஆகும் என்றும், அதற்கு தண்டனை இரண்டு வருட சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பந்தமாக இங்கிலாந்து நாட்டு குற்றவியல் சட்டத்திற்கும், இந்திய நாட்டு குற்றவியல் சட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. இங்கிலாந்து சட்டத்தில் அனுமதியின்றி நிரந்தரமாக ஒரு பொருளை எடுத்துச் சென்றால்தான் திருட்டு என்று கூறப்படுகிறது. ஆனால் இந்திய குற்றவியல் சட்டத்தில், தற்காலிகமாக எடுத்துச் சென்றாலும் அது திருட்டு ஆகிவிடும்.
இஸ்லாம் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் என்ற தண்டனை வழங்குகிறது. அதேசமயம், வறுமை என்பது இறை மறுப்பு என்ற நிலைக்கு இழுத்துச் சென்று விடும் என்பதற்காக ஒருவன் தனது பசிக்காகவோ, அல்லது அவசிய, அவசர தவிர்க்க முடியாத தேவைக்கோ திருடியிருந்தால் தண்டனை வழங்குவதில் கருணை காட்டுகிறது.
இஸ்லாமிய தண்டனை முறையின் குறிக்கோள் சீர்திருத்தமேயாகும். அதைத்தான் திருமறையின் விரிவுரையில் அல்லாமா யூசுஃப் அலி அவர்கள் “The Chief object of Islamic punishment in the first instance is reformation. Elimination from society of the offender is to be used as a last resort”என்று கூறுகிறார்கள்.
மனிதனின் சிந்தனையைத் தூண்டி உள்ளத்தைப் பண்படுத்தி, ஒழுக்க நெறிகளை வளர்த்து, மனிதாபிமானம் சிறக்கவும், அனைத்து சமுதாயத்தினரையும் வளப்படுத்தவும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் உதவுகின்றன.
கையை வெட்டுதல் மிகக் கொடூரமானதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை சிந்திக்கும் காலை திருட்டு அதைவிடக் கொடூரமானது என நம்மை உறுதிப்படுத்தும்.
சமீபத்தில் வேலூரில்”நாகா ஜூவல்லரி”என்ற நகைக் கடையில் புகுந்து 3 பேரைக் கொன்று விட்டு நகைகளை திருடி எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் தமக்கு இடையூறாக இருந்தவர்களையும் கொன்று விட்ட சம்பவத்தை நாம் அறிவோம்.
அதே ஊரில் ஒரு வீட்டில் உரிமையாளரைக் கொன்று விட்டுத் திருடிய சம்பவமும் தெரிந்ததே. இவைகள் திருடுவதற்காக செய்யப்பட்ட கொலைகள். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டுமானால் இஸ்லாமிய குற்றவியல் தண்டனையே தீர்வாகும்.
(கருக்)கொலையும் – சட்டமும்
பெண் பிறந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்காக கருவிலேயே கொன்று விடும் கொடுமை நாட்டில் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கருவிலேயே கொலை செய்யும் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
பெண்கள் படும் துன்பத்தை தொலைக்காட்சியில் காணப்படும் தொடர் நாடகங்களில் மிகைப்படுத்தி காண்பித்து வருகிறார்கள். இதனால் பெண் குழந்தையே பெறக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து விடுகிறார்கள், என்று பிரபல தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஒரு அறிக்கையில் கூறுகிறார்.
1961-ல் ஆண்கள் ஆயிரம் என்றால் பெண்கள் 995 பேர் இருந்தார்கள். 2000ல் 1000 ஆண்டுகளுக்கு 939 பெண்கள் இருந்தார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1000 ஆண்களுக்கு, பெண்களின் எண்ணிக்கை 900க்குக் கீழே சென்று விட்டது. வறுமையின் காரணமாகவும், நெசவாளர்களும், விவசாயிகளும், ஏழைகளும், குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் 312 : ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அன்றி, வேறு எவ்விதத் காரணத்திற்காகவும், கருவைச் சிதைத்தல் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
கருவுரும் நிலையில் கருச்சிதைவு செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
ஒரு பெண் தனக்குத் தானே அத்தகைய கருச்சிதைவைச் செய்து கொள்வதும் இந்தப் பிரிவின் கீழ்க் குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 313-படி கர்ப்பிணியின் சம்மதத்தைப் பெறாமல் கருக்கலைப்புச் செய்தால் செய்தவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டப்படி (314) கருவைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் போது அந்தப் பெண்ணுக்கு மரணம் சம்பவித்தால், அதற்கு காரணமானவருக்குப் பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும், தண்டனையாக விதிக்கப்படும்.
இதே செயலை, அந்தப் பெண்ணுடைய சம்மதமின்றிச் செய்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது மேலே குறிப்பிட்டுள்ளபடி தண்டனை வழங்கப்படும். குற்றம் புரிந்தவர், தம்முடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் அதற்காகக் குற்றப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு எண் 315, 316, 317, 318 வரையில் இந்தக் கருக்கொலை தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது. மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் குற்றங்களைப் பற்றி விளக்கம் அளிக்கும் இந்திய தண்டனை சட்டத்தில் முக்கியமான பிரிவுகள் 299ம், 300ம் ஆகும்.
பிரிவு எண் 299 என்பது மரணம் விளைவிக்கும் குற்றம் என்றும், பிரிவு எண் 300 கொலைக்குற்றம் என்றும் விவரித்துள்ளது. ஒருவனை கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு துப்பாக்கியால் எட்டோ, ஆயுத்தத்தால் வெட்டியோ, அல்லது ஏதாவது ஒரு பொருளால் அடித்தோ உயிரைப் போக்கினால் தான் பிரிவு எண் 300 என்ற கொலைக்குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.
ஒருவனை விரோதிகள் சிலர் சேர்ந்து கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு விரட்டிச் செல்லும் போது, விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் வழியில் இருந்த ஒரு கிணற்றில் குதித்தான். அதனால் அவனுக்கு மரணம் ஏற்பட்டது.
Nirbhai Singh 1972 CrLJ 1474 (MP)என்ற வழக்கில் தானாகக் கிணற்றில் விழுந்ததால் இது கொலைக்குற்றம் ஆகாது என்று குற்றவாளிகள் கீழ்க்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது குற்றவாளிகளான ஜோகிந்தர் சிங்கும், பல பிந்தர் சிங்கும் அல்லது 20 அடி தூரத்துக்குள்ளாக இறந்தவனை விரட்டிக் கொன்றுள்ளார்கள். கிணறு மட்டும் அங்கு இல்லையயனில் முடிவு வேறு விதமாக இருந்து இருக்கும் என்று குறிப்பிட்டது.
எந்தெந்த செயல்களின் காரணமாக மரணம் ஏற்படுத்தியும் கொலைக்குற்றமாக ஏற்கப்படாது என்பதை கவனிப்போம்.
ஒருவன் மற்றவனின் தாயை தரக்குறைவாகப் பேசியோ, எதைப் பேசினால் அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆவேசமடைந்து, நிதானம் இழந்து கோபத்தைத் தூண்டியவனை தாக்கியதன் காரணமாக மரணம் விளைவித்தால் அது கொலைக் குற்றம் ஆகாது.
ஆனால் ஒருவன் கோபத்தைத் தூண்டினான் என்பதற்காக அவன் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரைக் கொன்றால் அது கொலைக்குற்றம் ஆகிவிடும்.
கோபத்தின் காரணமாக துப்பாக்கியால் சுடும் போது குறிதவறி அருகில் இருந்த ஒருவன் மீது குண்டுப்பட்டு அவன் இறந்தால் அது கொலைக்குற்றம் (பிரிவு எண் 300) ஆகாது என்றாலும் மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கு (பிரிவு எண் 299) ஆளாக வேண்டும்.
கைது செய்ய வந்த அரசு அதிகாரியின் மீது கோபப்பட்டு அவரை ஒருவன் கொன்றால் அது கொலைக் குற்றமாகும்.
துன்புறுத்தப்படுகிற ஒருவர் வன்முறையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரியைத் தாக்கினால் அது கொலைக்குற்றம் ஆகாது. மரணம் விளைவிக்கும் குற்றத்தில் சேர்க்கப்படும்.
பிரிவு எண் 302-ல் கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவன் சிறை அதிகாரியையோ, சக கைதியையோ கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை தான் விதிக்கப்படும் என்பதை பிரிவு எண் 303 விளக்குகிறது.
கொலைக் குற்றவாளிகளில் பலர் சாட்சிகள் இல்லாததால் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். இன்றைய உலக சட்டம் உயிருக்கு பதில் உயிர் என்ற தண்டனை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது. கொல்லப்பட்டவனின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுப்பதற்கோ குற்றவாளியை மன்னிக்கவோ வகை செய்யவில்லை.
1918 ம் ஆண்டு அறிக்கையின்படி அமெரிக்காவில் 24 நிமிடங்களுக்கு ஒரு கொலை செய்யப்படுவதாகவும், பத்து விநாடிகளுக்கு ஒரு வீடு சூறையாடப்படுவதாகவும், ஏழு விநாடிகளுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாகவும், 13 விநாடிகளுக்கு ஒரு கைத்துப்பாக்கி விற்பனையாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அகண்ட இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இந்த வன்முறைக் கலாச்சாரம் பரவுவது வேதனை அளிக்கிறது. அறப்போர் நடத்திய மகாத்மா காந்தியடிகள் இந்த நாட்டில் தான் கொல்லப்பட்டார்.
யாரையும் நேசிப்பதில் அவசரப்பட்டு விடுவதோ, யாரையும் விரோதிப்பதில் துரிதப்பட்டு விடவோ கூடாது.
[ கட்டுரைநிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ். ]