மவ்லானா மவ்லவி K.செய்யிது முஹம்மது மதனீ D.P.S
களா கதர்
[ அல்லாஹ்வுடைய ”களாகதர்” என்று சொல்லக்கூடிய ”விதி”யை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.]
ஈமானின் ஆறாவது பர்ளு களாகதர் பற்றி ஈமான் கொள்வதாகும். களாகதர் என்ற அரபி வார்த்தைக்கு நிர்ணயம் என்றோ விதி என்றோ தமிழில் விளக்கம் கூறலாம். இன்னும் இதைப்பற்றி தெளிவாகக் கூறுவதென்றால் அல்லாஹ் தஆலாவால் அவனியி;ல் படைக்கப்பட்ட அனைத்திற்கும் ஒரு நிர்ணயத்தை(விதியை) வரையறுத்துவிட்டான்.
மனிதர்கள் முதல் உலகில் வாழும் ஜீவராசிகள் வரை அனைவற்றிற்கும் பிறப்பு முதல் இறப்புவரை அவற்றிற்கு வழங்கப்படும் ரிஜ்கு, ஏற்றத்தாழ்வுகள்,வெற்றிதோல்விகள், அவன் ஈமான் கொள்வது அல்லது ஈமான் கொள்ளாமலிருப்பது மற்றும் ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் நிகழ்வுகள் அனைத்தைப்பற்றியும் அல்லாஹ் ஒரு நிர்ணயத்தை(விதியை) தெளிவாக விதித்துவிட்டான். இதனையே களாகதர் என்று அரபியில் கூறுகிறோம்.
எனவே ஒரு மனிதன் அல்லது மற்ற உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தி;ல் பிறக்கும் அல்லது இறக்கும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இன்ன நாளில் பரம ஏழை ஒருவன் பணக்காரனாகிவிடுவான் என்றோ அல்லது பணக்காரன் பரம ஏழையாகிவிடுவான் என்றோ அல்லாஹ் விதித்து விட்டால் அச்செயல் நடப்பதை எத்துனை பெரிய சக்தியாலும் மாற்ற இயலாது. அது நடைபெற்றே தீரும்.
எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் முதன்முதலில் எழுதுகோலைப் படைத்து எழுது என்று அதற்குக் கட்டளையிட்டபோது எதை எழுத என் ரப்பே? என்று வினவியது பேனா.
கியாமத் நாள் வரை தோன்றும் அனைத்து வஸ்த்துக்களின் விதியை எழுது என்று கட்டளையிட்டான் என்று கூறியிருப்பதுடன் ஒன்று ஒருவனுக்குக் கிடைக்க வேண்டுமென்று (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்டிருந்தால் (இருவேறு தொலைதூரத்திலுள்ள) இரு மலைகளுக்கிடையில் இருப்பினும் அது அவனுக்குக் கிடைத்து விடும்;. (ஆனால்) ஒன்று ஒருவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்டிருந்தால் இரு உதடுகளுக்கு மத்தியில் (மிகச் சமீபத்தில்) இருப்பினும் அது அவனுக்குக் கிடைக்காது என்று அல்லாஹ் விதித்த விதியை மனிதன் உறுதியாக நம்பிச் செயலாற்றிட மானிடர்களின் மனதை தமது மணிமொழிகளால் தட்டி எழுப்புகிறார்கள்.
தாயின் கருவறையில் சேர்ந்துவிட்ட இந்திரியத் துளி நாற்பது நாட்களுக்குப் பின் இரத்தக் கட்டியாக மாறி மேலும் நாற்பது நாட்களுக்குப் பின் சதைத் துண்டாக மாறி உயிர் ஊதப்படும் நிலைக்குத் தயாரான உடன் அல்லாஹ் வானவர் ஒருவரை அங்கு அனுப்பி அவ்வுயிருக்குத் தேவையான ரிஸ்குகளையும் அதன் வயதையும், அதன் செயல்களையும் அதன் முடிவையும் (விதியாகப்) பதியச் செய்த பின்னரே அதற்கு உயிரையே ஊதச் செய்கிறான் என்று ஒரு மனிதனின் விதி பதியப்படும் விதத்தை தெளிவு படுத்தியுள்ளனர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மேலும் அல்லாஹ்வின் நியதியில் ஒரு மனிதனுக்கு நலவே ஏற்பட வேண்டுமென்று எழுதப்பட்டிருந்தால் உலகிலுள்ள அனைவரும் சேர்ந்து அவனுக்குத் தீங்கிழைத்துவிட முயற்சித்தாலும் நிச்சயம் முடியாது. அவ்வாறே அல்லாஹ்வின் நியதியில் ஒருவனுக்கு தீமை ஏற்பட வேண்டுமென்று எழுதப்பட்டிருப்பின் உலகிலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அவனுக்கு நன்மை செய்திட முயர்ச்சித்தாலும்; முடியாது. ஏனெனில் நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் நிர்ணயப்படியே ஏற்படுகின்றன. எனவே எது…? எங்கே…? எப்படி…? நடக்க வேண்டுமென்று அல்லாஹ்; விதித்து விட்டானோ அது… அங்கே… அப்படியே நிச்சயம் நடைபெறும்.
இதைப்பற்றியே அருள் மறை அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பின்வருமாறு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
1. நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) நிர்ணயப்படியே அதனைப் படைத்துள்ளோம்.(அல் குர்ஆன் 54:49)
2. எனினும் அகிலத்தோரின் ரப்பாகிய அல்லாஹ் நாடினாலன்றி (நல்லுபதேசம் பெற) நீங்கள் நாடமாட்டீர்கள். (அல் குர்ஆன் 81:29)
3. எந்தப்பொருளும் அதனுடைய பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர (வேறு எவரிடத்திலும்) இல்லை. அதனைக் குறிப்பிட்ட அளவைக் கொண்டே தவிர நாம் இறக்கி வைப்பதில்லை (அல் குர்ஆன் 15:21)
4. எத்துன்பத்தையும் (உலகில்) நாம் உண்டாக்குவதற்கு முன்னதாகவே (லவ்ஹ{ல் மஹ்பூல் என்னும் ) பதிவேட்டீல் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் எத்துன்பமும் ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு (மிக) இலேசானதாகும்.(அல் குர்ஆன் 57~22) 5. எத்துன்பமும் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டே தவிர உண்டாகுவதில்லை.(அல் குர்ஆன் 64:11)
6. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய (நல்ல-தீய) செயலை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டிள்ளோம்.( அல் குர்ஆன் 17:13)
7. (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத்தவிர (வேறொன்றும்;) எங்களுக்கு உறுதியாக ஏற்படாது. அவன் (தான்) எங்களின் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் முழுநம்பிக்கை வைக்கவும்.(அல் குர்ஆன் 9:51)
8. மறைவானவற்றின் திறவுகோள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)
மேற்கூறிக்காண்பிக்கப்பட்ட அருள்மறை அல்குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் அல்லாஹ் தஆலாவின் விதியைப் பற்றி விரிவாகவே பறைசாட்டுகின்றன.
எனவே அல்லாஹ்வுடைய களாகதர் என்று சொல்லக்கூடிய விதியை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
இதுவரை அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், ரஸ_ல்மார் களையும், இறுதி நாளையும், களாகதர் என்ற விதியையும் ஈமான் கொள்வது பற்றி விரிவாகப் பார்த்தோம். மேற்கூறப்பட்ட இந்த ஆறு விஷயங்களில் எந்த ஒன்றையும் யாராவது ஒருவன் சந்தேகித்தாலும் அல்லது நம்ப மறுத்தாலும் அவனை முஃமின் என்று ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே மேற்படி ஆறு விஷயங்களையும் சிறிதும் சந்தேகமின்றி உறுதியாக நம்பவேண்டும்.
”Jazaakallaahu khairan” Fatimatu Al-Zzahra