அன்பளிப்பை அழகுபடுத்துவோம்
ஒருவர் நாம் வழங்கிய அன்பளிப்பை முறைகேடாக பயன்படுத்தினாலோ, அல்லது உரிய முறையில் பராமரிக்காதவராக இருந்தாலோ நாம் வழங்கிய திரும்ப பெறலாமா எனில் கூடவே கூடாது.
உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்டபொருளைக்குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கேஉரியது” என்று தீர்ப்பளித்தார்கள். (புகாரி 2625)
முஸ்லிம்களாகிய நமக்கு முஸ்லிமல்லாதவர்களுடன் நட்பும் நல்லுறவும் இருக்கிறது. நமது நண்பர்களான அவர்கள் நமக்கு ஒரு அன்பளிப்பை தந்தால் அதை நாம் ஏற்கவேண்டும்.
மனிதர்களின் உணர்வோடு இரண்டற கலந்தவை ஒருவருக்கொருவர் செய்யும் அன்பளிப்புகள். இந்த அன்பளிப்புகள் ஒருவர் மற்றவர்மீது தமக்குள்ள அன்பை வெளிப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுவதோடு, சம்மந்தப்பட்டவரின் கஷ்டத்தை போக்கும் வகையிலும் உள்ளதாகும்.
இன்றைக்கு பல்வேறுவகையான அன்பளிப்புகள் நடைமுறையில் உள்ளன. அவைகளில் பல விஷயங்கள் மார்க்கம் அனுமதித்தவையாக இருந்தாலும், சில விஷயங்கள் மார்க்கம் தடுத்தவையாகவும் உள்ளது.
பிறந்தநாள் விழா, பெயர்சூட்டு விழா, காதணி விழா, பூப்புனித [?] நீராட்டு விழா, மணிவிழா போன்றவைகளில் வழங்கப்படும் அன்பளிப்புகள் பித்அத்தாகும். ஏனெனில், மேற்கண்ட விழாக்கள் மாற்றார்கள் இடமிருந்து நம்மவர்கள் காப்பியடித்தவையாகும். இதுபோன்ற விழாக்களில் பங்கெடுப்பதோ, அதில் அன்பளிப்புகள் வழங்குவதோ பித்அத்தாகும். மேலும், திருமணம் முடித்த தம்பதிகளுக்கு ஹலாலான பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம்.
அபூ உஸ்மான் அல்ஜஅத் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்கள்:
(பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ் ரளியல்லாஹு அன்ஹு எங்களைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் ரளியல்லாஹு அன்ஹா என்னிடம், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘(அவ்வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன். எனவே, அவர்கள் பேரிச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள்.
அதை என்னிடம் கொடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன். [ஹதீஸ் சுருக்கம். நூல்;புஹாரி 5163 ]
இந்த ஹதீஸ் திருமணத்தில் அன்பளிப்பு செய்யலாம் என்பதை விளக்குகிறது. இன்றைய திருமணத்தில் செய்யப்படும் அன்பளிப்புகளில் இருவகை உண்டு. ஒன்று மக்கள் அவர்களாக விரும்பி செய்வது. மற்றொன்று ‘மொய்’ என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வது. இதில் நாமாக விரும்பி செய்யும் அன்பளிப்பு ஆகுமானது. அதே நேரத்தில் வழங்கப்படும் பொருட்களும் மார்க்கம் அனுமதித்தவையாக இருக்கவேண்டும். சிலர் தங்களின் நண்பர்களின் திருமணத்தில் மதுவகைகளை அன்பளிப்பு செய்கிறார்கள். அதோடு பல்வேறு உருவங்கள் அடங்கிய பரிசு பொருட்களை அன்பளிப்பு செய்கிறார்கள். இவை இரண்டும் மார்க்கத்தில் கண்டிப்பாக தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டாம்;.அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் -நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (5:2)
மேலும் திருமணத்தில் தம்பதிகளை பரிகாசம் செய்யும் வகையில் சிலர், பெரிய பார்சலை கொண்டு வருவார்கள். பல அடுக்குள்ள அந்த பார்சலை பிரித்து பார்த்தால் இறுதியில் ஒரு பால் குடிக்கும் நிப்பிலோ, அல்லது ஒரு காண்டமோ இருக்கும். நிப்பிளும்-காண்டமும் மார்க்கம் தடுத்த பொருளல்ல என்றாலும், இந்த அன்பளிப்பில் ஏமாற்றமும் பரிகாசமும் உள்ளது. இந்தவகை பரிகாசம் தவிர்க்கப்படவேண்டும்.
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُواْ بَقَرَةً قَالُواْ أَتَتَّخِذُنَا هُزُواً قَالَ أَعُوذُ بِاللّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
இன்னும் (இதையும்நினைவுகூறுங்கள்;) மூஸாதம்சமூகத்தாரிடம், “நீங்கள் ஒருபசுமாட்டை அறுக்கவேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக்கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள்; “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது)அவர், “(அப்படிப்பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுகிறேன்” என்று கூறினார். (2:67)
பரிகாசம் செய்வது அறிவீனர்களின் செயல் என்பதை இந்த வசனம் மூலம் நாம் விளங்கமுடிகிறது. எனவே நாம் வழங்கும் அன்பளிப்புகள் ஒன்று இம்மை தேவையை நிறைவேற்றும் பொருளாதாரமாகவோ, அல்லது பயனுள்ள பொருட்களாகவோஇருக்கலாம். அல்லது இம்மை-மறுமைக்கு வழிகாட்டும் மார்க்க விளக்க நூல்களாகவும் இருக்கலாம் இதுதான் சிறந்ததாகும்.
அடுத்து மார்க்கம் தடுத்த பொருட்கள் ஆண் பெண் இரு சாராருக்கும் பொருந்துபவைகளும் உண்டு. இப்படி இரு சாராரும் பயன்படுத்த தடுக்கப்பட்ட பொருட்களை யாரேனும் அன்பளிப்பு செய்தால் அதை நாம் பெறக்கூடாது. அதே நேரத்தில் ஆணுக்கு மட்டும் தடையுள்ள பெண்களுக்கு அனுமதியுள்ள ஒரு பொருள் நமக்கு அன்பளிப்பாக வந்தால் அதை நாம் என்ன செய்யவேண்டும்?
அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன். (புகாரி எண் 2614)
ஆண்களுக்கு பட்டாடை ஹராம் என்று சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். எனவே ஆண்களுக்கு பட்டாடையோ தங்கமோ அன்பளிப்பு கிடைக்குமானால் அதை மறுக்காமல் வாங்கிகொண்டு அதை அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு வழங்கிவிடலாம் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது. மேலும் ஆண்களுக்கு கிடைக்கப்பெற்ற பட்டாடையோ அல்லது தங்கத்தையோ விற்கவோ, அல்லது முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்கவோ செய்யலாம் என்பதற்கு கீழ்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும்;
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
உமர் ரளியல்லாஹு அன்ஹு ஒரு மனிதரின் (தோள்) மீது, விற்கப்படுகிற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘இந்த அங்கியை வாங்கிக் கொள்ளுங்கள். ஜும்ஆ நாளிலும் (குலங்கள் மற்றும் நாடுகளின்) தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்வீர்கள்” என்று கூறினார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள். பிறகு, ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (அதே போன்ற பட்டு) அங்கிகள் கொண்டு வரப்பட்டன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘இது குறித்துக் கடுமையான சொற்களைத் தாங்கள் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?’ என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காகத் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அதை மக்காவாசிகளில் ஒருவராயிருந்த தம் சகோதரருக்கு அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பி வைத்துவிட்டார்கள். (புகாரி எண் 2619)
முஸ்லிமல்லாதவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்கலாமா?
முஸ்லிம்களாகிய நமக்கு முஸ்லிமல்லாதவர்களுடன் நட்பும்-நல்லுறவும் இருக்கிறது. நமது நண்பர்களான அவர்கள் நமக்கு ஒரு அன்பளிப்பை தந்தால் அதை நாம் ஏற்கவேண்டும்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
யூதப் பெண் ஒருத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (நூல் புகாரி எண் 2617)
இந்த செய்தி முஸ்லிமல்லாதவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்கலாம் என்பதை நமக்கு விளக்குகிறது. அதே நேரத்தில் அவர்கள் அன்பளிப்பு செய்யும் பொருள் மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருந்தால் நாம் வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், மாற்று மதத்தவர்களுக்கு வழங்கிவிடலாம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை போன்று!
கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறலாமா?
நம்மில் சிலர் சிலருக்கு அன்பளிப்பு செய்வார்கள். நாளடைவில் அவர்களுக்கிடையில் பகைமை வந்துவிட்டால் நான் கொடுத்த அன்பளிப்பை கொடு என்று மல்லுக்கு நிற்பார்கள். எமக்கு தெரிந்து ஒருவர் தன் உறவினருக்கு ஒரு நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். பின்பு அவர்களுக்கு மத்தியில் பகை ஏற்பட்டவுடன் எனது நிலத்தை திரும்பத்தா என்றார். அன்பளிப்பு வாங்கியவர் தர மறுக்க இருவரும் கோர்ட் சென்றார்கள். இறுதியில் அந்த நிலம் இருவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரிசாக [பயனற்றதாக] ஆகி விட்டது. எனவே அன்பளிப்பை திரும்ப பெறலாகாது;
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். (புகாரி 2625)
அதே நேரத்தில், நாம் ஒருவருக்கு ஒரு நிலம் நிரந்தரமாக அன்றி இரவலாக அன்பளிப்பு செய்து அதில் ஒருவர் பாடுபட்டு தன்னிறைவு அடைந்த பின் நாம் தந்த நிலத்தை நம்மிடமே அவராகவே ஒப்படைத்தால் நாம் பெற்றுக்கொள்வதில் தடையில்லை.
அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விம்தத்தில்) கொடுப்பதாகவும் ‘எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். (புகாரி எண் 2630)
ஒருவர் நாம் வழங்கிய அன்பளிப்பை முறைகேடாக பயன்படுத்தினாலோ, அல்லது உரிய முறையில் பராமரிக்காதவராக இருந்தாலோ நாம் வழங்கிய திரும்ப பெறலாமா எனில் கூடவே கூடாது.
உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்க அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள். (புகாரி எண் 2623)
அன்பானவர்களே! நம்முடைய அன்பளிப்புகளை அழகானதாக, அன்பு நிறைந்ததாக, அல்லாஹ்வின் அருள் நிறைந்ததாக ஆக்க முயற்ச்சிப்போம்.
”Jazaakallaahu khairan” முகவை எக்ஸ்பிரஸ்