சில மருத்துவமனைகளில் சாதனைகள் என்று சொல்லி செய்யப்படும் சில அறுவை சிகிச்சை முடிந்ததும் ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத்தும் மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை பெற்ற அந்த நபர் ஓரிரு நாட்களில் மரணமடைந்துவிட்டால் அந்த மரணத்தை மூடி மறைப்பது ஏன் என்பது புரியவில்லை.
இந்தியாவிலே முதல் முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் இதய வால்வு அடைப்பு நீக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இளம் வயதிலேயே இதய வால்வுப் பகுதியில் 90 விழுக்காடு அடைப்பு ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சை நடந்து முடிந்த 2 நாட்கள் நலமாக இருந்த அந்த பெண், 25ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து சென்னை அரசு மருத்துவமனை எந்த அறிவிப்பையும், எந்த தகவலையும் வெளியிடாமல் உடனடியாக பெண்ணின் உடலை உறவினர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் – பத்மினி தம்பதிகளின் இளைய மகள் லாவண்யாவிற்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு தயாராகி வரும் நேரத்தில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல், மயக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட தொடங்கியது. இதை தொடர்ந்து அவரை அவரது பெற்றோர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இருதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வில் 90 விழுக்காடு அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதை தொடர்ந்து அவருக்கு சென்னை அரசு மருத்துவமனை இருதய பிரிவு துறை தலைவர் மருத்துவர் விஸ்வகுமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கடந்த 20-ந் தேதி இதய அறுவை சிகிச்சை செய்தனர்.
இதய அறுவை சிகிச்சையில் மிகவும் கடினமாக கருதப்படும் ரத்த வால்வு அடைப்பை நீக்கியது இந்தியாவிலே முதல் முறை என்றும், இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமாக இருப்பதாகவும், இனி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 4வது நாட்களிலேயே லாவண்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமாகியது. சிகிச்சை பலனின்றி அவர், 25-ந் தேதி உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவரது உடலை உறவினர்களிடம் கொடுத்து உடனடியாக எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இது குறித்த எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இது மருத்துவ உலகிற்கே ஒரு இழிவாகத்தான் அமையும். அறுவை சிகிச்சையின் போது உயிரிழப்புகள் என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால், அதனை மருத்துவமனை நிர்வாகம் எப்படி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், அந்த பெண்ணின் உயிரிழப்புக்குக் காரணம் என்ன? அறுவை சிகிச்சையில் குறைபாடா? அல்லது அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகளில் ஏதேனும் குறைபாடா என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய முனைப்புக் காட்டியிருக்க வேண்டும்.
அதனை விடுத்து, இறப்பை மறைக்கும் முயற்சியில் இரங்கியுள்ளது அவர்கள் மீதான சந்தேகத்தைக் கிளப்புகிறது.
இதுபோன்ற விஷயங்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டும் அல்ல தனியார் மருத்துவமனைகளிலும்தான் நடக்கின்றன. அறுவை சிகிச்சை முடிந்தவுடன், சாதனை படைத்துவிட்டோம் என்று படத்திற்கு போஸ் கொடுக்கும் மருத்துவர்கள், அந்த நபர் இரண்டொரு நாளில் உயிரிழந்துவிட்டால் அது பறறி நியூஸ் கொடுக்க மறந்தவிடுகிறார்கள்.
தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனான ஒருவருக்கு, அவரது இரைப்பையை வெட்டி சிறியதாக்கி அறுவை சிகிச்சை நடைபெற்றது.. இதுவும் இந்தியாவிலேயே முதல் முறை என்று மருத்துவக் குழு சாதனைப் பட்டியல் வெளியிட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அந்த நபர், ஒரு வாரத்திலேயே மரணமடைந்துவிட்டார். அந்த செய்தியை ஏதோ ஒரு நாளிதழில் ஒரு மூலையில் கட்டம் கட்டி போட்டிருந்தார்கள். இது தவறான வழிகாட்டலாகும்.
மருத்துவர்கள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளில் ஈடுபடுவதும், அதில் தோல்வி காண்பதும் இயற்கையே. ஆனால் அதனை செயற்கைத் தனமாக மூடி மறைப்பதுதான் பல பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களை பொதுமக்கள் பார்வையில் குற்றவாளிகளாக்குகிறது.
எனவே மருத்துவ சாதனைகள் தொடரட்டும், அதில் ஏற்படும் சில சறுக்கல்களை மூடி மறப்பதால் எந்த பயனும் இல்லை.
”Jazaakallaahu khairan” RAFEEQ ARAFATH