இன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)
ஒருவர் தனது சமீபத்திய சாதனைகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் சமீபத்தில் வெளியான மிகப் பிரபலமான பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பார், அடுத்து இன்னுமொருவர் புகைத்துக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் இன்னொருவரைத் திட்டிக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் பிறரை வஞ்சித்துக் கொண்டிருப்பார்.
இப்படி ஏகப்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளில் வாழக் கூடியவரும், இன்னும் பேசினால் புறமும், கோள் சொல்லுதலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டும், விளையாட்டு போட்டிகளின் முடிவுகள் எப்படி இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று புலம்பிக் கொண்டு பந்தயங்களைக் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய மக்களின் கூட்டத்தில் வாழக் கூடிய ஒருவருக்கு எப்படி ஈமானின் வேகம் அதிகரிக்கும்.
இத்ததைகய சூழ்நிலையில் வாழக் கூடிய ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையின் அம்சங்கள் தான் ஞாபகம் வருமே ஒழிய, இறை நம்பிக்கையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும் எவ்வாறு ஞாபகத்திற்கு வரும்?! இன்றைக்கு நாம் வாழக் கூடிய சூழ்நிலைகள் இவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன. இருவர் சந்தித்து விட்டால் வியாபாரம், வேலை, பணம், முதலீடு, வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சம்பள உயர்வு, சம்பள வெட்டு, பதவி உயர்வு, திட்டங்கள் போன்றவற்றைப் பற்றித்தான் அதிகம் பேசக் கூடியவர்களாகவும், அவர்களது சம்பாஷனைகள் யாவும் இதனைச் சுற்றியே தான் அமைந்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
இன்றைய முஸ்லிம்களின் வீடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றால் ஷைத்தானிய சக்திகளின் பிடியில் தான் இன்றைய முஸ்லிம்களின் வீடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அசிங்கமான பாடல்கள் ஒலிக்கக் கூடிய இல்லங்களாகவும், இன்னும் வக்கிரமான சினிமாப் படங்கள், ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் காட்சிகளைக் கொண்ட படங்கள், பாடல்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் அகப்பட்டு விடக் கூடிய முஸ்லிம்களின் இல்லங்களில் எவ்வாறு இஸ்லாமியத் தாக்கம் இருக்கும். மாறாக, ஈமானை இழந்து விட்ட, ஷைத்தானின் பிடியில் சிக்கிச் சீரழியக் கூடிய, மனநோய் கொண்ட சமுதாயமாகத் தான் அது இருக்கும். இந்த உலகமே கதி என்று வாழக் கூடிய ஒருவனது இதயம், இந்த உலகத்திற்கும் இந்த உலகத்தின் ஆதாயங்களுக்கும் அடிமைப்பட்டதாகத் தான் இருக்கும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் :
தீனாரின் அடிமைகள் மற்றும் திர்ஹத்தின் அடிமைகள், (இவர்களுக்கு) அவனுக்கு அழிவுதான். (புகாரி,).
இந்த உலக வாழ்க்கைக்கு குறைந்த அளவு வளங்களே போதுமானதாக இருப்பினும், இந்த மனிதன் இந்த உலக வாழ்வே கதி என்று எண்ணம் கொண்டதன் காரணமாக, அவன் எப்பொழுதும் ஷேர் மார்க்கெட், உற்பத்தி, வியாபாரம் என்று ஓடி ஓடித் திரிகின்ற அவலத்தை நாம் கண்டு வருகின்றோம். இது இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றை மெய்பிப்பதாக உள்ளது. மனிதன் இறைவனை வணங்குவதற்காகவும் இன்னும் ஸகாத் வழங்குவதற்காகவும் தான் நாம் வளங்களை இறக்கி வைத்தோம், ஆனால் ஆதத்தினுடைய மகன் ஒரு சமவெளியைப் பெற்றிருந்தால், அவன் தனக்கு (இதைப் போல)இன்னொன்று இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான், இன்னும் அவனுக்கு இரண்டு சமவெளிகள் இருந்தால் மூன்றாவதாக ஒன்று நமக்கு இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான். ஆதத்தினுடைய மகனது வயிற்றில் மண் தான் நிறைந்திருக்கின்றது (அதாவது அவன் என்றைக்கும் திருப்தி அடையவே மாட்டான்), இன்னும் யார் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டார்களோ அவர்களது பாவத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். (அஹமது)
செல்வமும், மனைவி மக்களும்
”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு”” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை உலக வாழ்வின் சடப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (3:14)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் வருகின்ற இந்த உலகத் தேவைகளான மனைவி மக்கள் செல்வங்கள் ஆகிய யாவும், இறைவனின் மீதுள்ள அன்பைக் காட்டிலும் மிகைத்து விடக்கூடிய அளவில் சென்று விடக்கூடாது.. அவ்வாறு செல்லும் பொழுது தான் இறைவனுக்குக் கீழ்படியாமையை அது உருவாக்கி விடுகின்றது. அவ்வாறில்லாமல், இஸ்லாமியச் சட்டங்களின் வரையறைக்குள், இன்னும் இறைவனுக்குக் கீழ்படிகின்ற தன்மையிலிருந்து அவனை வழி தவறச் செய்யாத விதத்தில் அமைந்து விடுமானால், இத்தகைய செல்வங்களும், உறவுகளும் அவனுக்கு மிகப் பயன்தரக் கூடியதாக அமைந்து விடும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் :
இந்த உலகத்தில் பெண்களும், நறுமணங்களும் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தும் கூட, இவை அனைத்தைக் காட்டிலும் தொழுகை தான் எனக்கு மிக மிக விருப்பமானதாக இருக்கின்றது என்றார்கள்.
அநேக ஆண்கள் தங்களது மனைவிமார்களின் விருப்பங்களைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும், அந்த விருப்பங்கள் ஹராமான வழியில் இருந்தாலும் அவற்றைத் தடுக்க இயலாமலும், தங்களது குழந்தைகளை தொழுகை போன்ற இறைவணக்கங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டாமல், அவர்களை பள்ளிவாசல் பக்கமே ஒதுங்கவியலாத அளவுக்கு வளர்க்கின்ற பழக்கத்தையும் நாம் கண்டு வருகின்றோம்.
இறைத்ததூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் :
அச்சத்திற்கும், கபடத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இன்னும் கஞ்சத்தனத்திற்கும் காரணமாக உங்களது குழந்தைகள் உங்களை ஆளாக்கி விடுவார்கள். (தப்ராணி, அல் ஜாமீஈ ).
கஞ்சத்தனம் என்பது என்னவென்றால், இவன் அல்லாஹ்வினுடைய பாதையில் ஒரு பொருளைச் செலவு செய்ய எண்ணியிருப்பான். அப்பொழுது ஷைத்தான் குறுக்கிட்டு அல்லாஹ்வின் பாதையில் இந்தப் பொருளை நீ செலவழித்து விட்டால், உன்னுடைய குழந்தைகளின் கதி என்னாவது என்பதை நினைவூட்டுவதன் மூலம், அந்தப் பொருளை இறைவனுடைய பாதையில் செலவழிக்க இயலாதவானாக அந்த மனிதனை ஆக்கி விடுகின்றான்.
அறியாமை என்பது என்னவென்றால், இவன் அறிஞர்களின் உரைகள் மற்றும் கல்வியைத் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்யும் பொழுது, குழந்தைகள் குறுக்கிட்டு அறிவைத் தேடிச் செல்வதனின்றும் இவனைத் தடுக்கக் கூடியதாக இருந்து விட்டால், அதுவே அவனது அறியாமையைக் காரணமாகி விடும்.
கவலை என்பது என்னவென்றால், அவன் செல்லமாகப் போற்றி வளர்க்கக் கூடிய அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டு விட்டால் அதற்காகக் கவலை கொள்ளக் கூடியவனாகவும், இன்னும் தன்னுடைய குழந்தை பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கும் பொழுது அதனை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றால், அதற்காகக் கவலைப்படக் கூடியவனாகவும் மனிதன் மாறி விடுகின்றான். இன்னும் தான் வளர்த்த அந்தக் குழந்தை பெரியவானாக ஆகி விட்டதும், தன்னைப் பராமரிக்காமல் விட்டு விட்டால், தான் கஷ்டப்பட்டு அவனை எவ்வாறெல்லாம் வளர்த்தோம், இந்த வயதான காலத்தில் நம்மை இப்படி வெறுமனே தவிக்க விட்டு விட்டுச்சென்று விட்டானே என்று புலம்பக் கூடிய நிலைக்கு விட்டு விடக் கூடியவனாகவும் அவன் மாறி விடுகின்றான்.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, திருமணமே செய்து கொள்ளாமல், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதல்ல, மாறாக, செல்வங்களும், மனைவி மக்களும் இறைவனது நினைவை விட்டும் ஒருவனை மாற்றி விடக் கூடிய விதத்தில் அமைந்து விடக் கூடாது என்பதும், மனைவி மக்கள் அந்த மனிதனை ஹராமான வழியில் அவர்களின் நலன்களுக்காக பொருளீட்டத் தூண்டுகோளாக அமைந்து விடக் கூடாது என்பதே இதன் கருத்தாகும்.
செல்வங்கள் மனிதனை எவ்வாறெல்லாம் நிலைமாறச் செய்யும் என்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
ஒவ்வொரு உம்மத்திற்கும் ஒவ்வொரு ·பித்னாக்கள் (குழப்பங்கள், கோளாறுகள்) உண்டு. என்னுடைய உம்மத்தைப் பொறுத்தவரை செல்வம் தான் அந்த ·பித்னவாக இருக்கும். (திர்மிதி 2336)
செல்வத்தை அதிகம் சேகரிக்க வேண்டும் என்ற ஆசையானது, ஆட்டிற்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஓநாய் எவ்வாறு ஆட்டை வெகு சீக்கிரத்தில் கபளீகரம் செய்து விடுமோ, அதைப் போல செல்வத்தின் மீதுள்ள ஆசை ஒருவனது மார்க்கத்தையே அழித்து விடும். இதைத்தான் இறைத்தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டிருக்கின்ற ஒருவனது பொருளாசையானது, இரண்டு பசி கொண்ட ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். (திர்மிதி)
எனவே தான் இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள், உங்களது தேவைகளுக்கு எவ்வளவு போதுமானதாக இருக்குமோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேவைக்கு மிஞ்சக் கூடிவைகள் இறைவனது நினைவை விட்டும் உங்களை பராக்காக்கி விடும்.
தான தர்மம் செய்யாமல், பணத்தைச் சேகரித்து வைப்போரை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்திருக்கின்றார்கள்.
என்னுடைய செல்வம் இங்கிருக்கின்றது, இங்கிருக்கின்றது. இங்கிருக்கின்றது என்று கூறி, தனக்கு முன்னாலும், பின்னாலும், வலப்புறமும், இடப்புறமும் (தான தர்மங்களுக்காக) செல்வத்தை வாறி வழங்குகின்றாரே அத்தகையவரைத் தவிர, செல்வத்தைச் சேகரித்து வைக்கின்றார்களே அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். (இப்னு மாஜா).
உலகமே கதி
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (15:03)
அலி ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறினார்கள் :
நீங்கள் உங்கள் மன இச்சையைப் பின்பற்றுவது குறித்து நான் பயப்படுகின்றேன் இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும், மன இச்சையைப் பின்பற்றுவதும் சத்தியத்தை மறக்கச் செய்துவிடும், இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையானது மறுமையை மறக்கச் செய்துவிடும். (·பத்ஹுல் பாரி 11·236)
ஒருவரது ஈமானின் உறுதியை இழக்கக் செய்யக் கூடிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், அதிகமாக உண்பது, இரவில் மிக நீண்ட நேரம் விழித்திருப்பது, அதிகமாகப் பேசுவது மற்றும் அதிகமான நேரங்களை மற்றவர்களுடன் கூடியிருந்து (அரட்டைகளில்) கழிப்பது. யார் அதிகமாக உண்கிறார்களோ அவர்களது உடம்பு பெருத்து விடும், இத்தகைய தன்மைகள் இறைவனை நினைவு கூர்வது மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனத்தை உண்டாக்கி விடுவதோடு, இத்தகைய நபர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் ஷைத்தானுக்கு மிக எளிதாகவும் இருக்கும்.
எவரொருவர் அதிகமாக உண்கிறாரோ, குடிக்கின்றாரோ இன்னும் தூங்குகின்றாரோ அத்தகையவர்கள் இறைவனது வெகுமதியை இழந்து விடுகிறார்கள். அதிகமாகப் பேசுவது இதயத்தை இறுகச் செய்து விடுகின்றது, அதிகமான மக்களுடன் வீணாகத் தன்னுடைய நேரங்களைக் கழிப்பவர்களுக்கு தனியாக இருந்து தன்னுடைய நிலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காது.
அதிகமாகச் சிரிப்பது ஒருவனது இதயத்தின் வாழ்நாளையை பாழடித்து விடும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் : அதிகமாகச் சிரிக்காதீர்கள், அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச் செய்து விடும். (இப்னு மாஜா)
ஒருவனது நேரங்கள் வணக்க வழிபாட்டுடன் கூடியதாக இறைவனுடைய ஞாபகத்தை அதிமதிகம் நினைவு கூரத்தக்க விதத்தில் கழியவில்லை என்றால், அவன் குர்ஆனை உதறித் தள்ளி விட்டுச் செல்லக் கூடியவனாகவும், இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் அறிவுரைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவும் மாட்டான்.
ஈமானைப் பலவீனப்படுத்தக் கூடிய அம்சங்கள் ஏராளமாக இருந்தும், இங்கே நாம் அவற்றில் சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படாத சில அம்சங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களை பாதித்திருக்கலாம், அதனை நீங்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம். நமது இதயங்களை அல்லாஹ் சுத்தப்படுத்தி, கெட்ட செயல்பாடுகளிலிருந்து நம்மைக் காத்தருளப் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!