B பிரேஸில் R ரஷ்யா I இந்திய C சைனா
அமெரிக்காவும் அதன் டாலரும் இன்னும் நீண்ட காலத்துக்கு உலகின் முதன்மைகளாக இருக்கப் போவதில்லை. உலகப் பொருளாதார வல்லரசுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி-6 குழுவுக்கு மாற்றாக பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டணியான “ப்ரிக்’ தயாராகிவிட்டது. 2003-ம் ஆண்டில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலேயே இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. 2011-ம் ஆண்டிலிருந்து இந்த நால்வரணியின் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும்; 2025-ம் ஆண்டிலேயே ஜி-6 நாடுகளுக்கு இணையான பொருளாதார வலுவை எட்டும்; 2039-ம் ஆண்டில் ஜி-6 அணியை இந்த மாற்று அணி முந்திச் செல்லும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
2050-ம் ஆண்டில் இந்த உலகம் முழுவதுமாக மாறியிருக்கும். அப்போது, உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக சீனா விளங்கும். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் ரஷியாவும் அணிவகுக்கும் என அந்த அறிக்கை சொன்னது. இந்தக் கருத்துதான் “ப்ரிக்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டணி உருவாக வித்திட்டது.
கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னவையெல்லாம் நடக்கத்தான் போகிறது என்பது உலகப் பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலானோர் ஒப்புக் கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனா 9.75 சதவிகிதத்தையும், இந்தியாவும் ரஷியாவும் 7 சதவிகிதத்தையும் பிரேசில் 3.5 சதவிகிதத்தையும் எட்டியிருக்கின்றன. இந்த வேகத்தில் இன்னும் 20 ஆண்டுகளைக் கடந்தால், “ப்ரிக்’ அணியின் கனவு நனவாகிவிடும்.
ஏற்கெனவே, ஐ.நா.பாதுகாப்பு அவையிலும், ஜி-8 அமைப்பிலும் உறுப்பினராக உள்ள ரஷியாவுக்கு அரசியல் ரீதியாக இழந்த செல்வாக்கை மீட்பதற்கு ப்ரிக் கூட்டணி பயன்படும் எனக் கருதப்படுகிறது. வளரும் நாடுகளின் பிரதிநிதிகளாகக் கருதப்படும் பிரேசிலும் இந்தியாவும் “ப்ரிக்’ செல்வாக்கு மூலமாக ஐ.நா. பாதுகாப்பு அவை, உலக வங்கி உள்ளிட்ட முக்கிய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். மற்ற மூன்று நாடுகளின் கூட்டுப் பொருளாதாரத்தைவிட மிக வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுக்கு ப்ரிக் அமைப்பால் பெரிய அளவில் நன்மை ஏதும் இல்லை. எனினும், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு இந்தக் கூட்டணி சீனாவுக்கு உதவும்.
இருந்தபோதும், ப்ரிக் அணியை விமர்சிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த 4 நாடுகளுக்கும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான ஒற்றுமை ஏதும் கிடையாது. அதனால், தனிப்பட்ட நோக்கங்கள் நிறைவேறியதும் 4 நாடுகளும் பிரிந்துபோகவே விரும்பும் என சிலர் கூறுகின்றனர். அரசியல் ரீதியாக இந்த நாடுகள் அனைத்துக்கும் ஏதாவது ஒருவகையில் பெரிய பிரச்னை இருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால், பாகிஸ்தானுடனான மோதலும், சீனாவுடனான எல்லைப் பிரச்னையும் எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நக்சலைட் பிரச்னையும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம்.
அதேபோல், ஒரு கட்சி ஆட்சி முறையைப் பின்பற்றும் சீனாவில், முழுமையான ஜனநாயகம் கோரி நடைபெறும் போராட்டங்கள் இன்னும் சில ஆண்டுகளில் வலுவடையும் எனக் கருதப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதிகளும் தைவானும்கூட சீனாவுக்குப் பெரிய தொல்லைகளாக இருந்து வருகின்றன. இவைகளால் அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாப்பிருப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.
ரஷியாவின் பொருளாதாரம் எண்ணெய் வளங்களைச் சார்ந்தது. அண்மைக்கால எண்ணெய் விலை வீழ்ச்சியால் அந்த நாடு பெரும் பாதிப்புக்குள்ளாகியது. இதுபோக, ஜார்ஜியா போன்ற நாடுகளுடனான அரசியல் பிரச்னையும் இருக்கிறது. இவைகள் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடைகளாக அமையும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒப்பீட்டளவில் வலுவான பொருளாதார அமைப்புடைய சீனா, அமெரிக்காவுடன் கைகோர்த்து ஜி-2 அணியை உருவாக்க விரும்பினால் ப்ரிக் அமைப்பு சிதைந்து போகும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
எது எப்படியோ, வரும் 16-ம் தேதி இந்த நாடுகளின் தலைவர்கள் ரஷியாவில் கூடிப் பேசப் போகிறார்கள். உலகை மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் புதிய அணி புறப்பட்டு விட்டது. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இந்த நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இலக்கை எட்ட வேண்டும் என்பதில் இந்த நாடுகளுக்கு இருக்கும் தீவிரம் தெரிகிறது. வெற்றியை எட்டுவதற்கு எல்லோருமே நாசூக்காக நடந்து கொள்ள வேண்டும். காலமும் ஒத்துழைக்க வேண்டும். ஆகட்டும், பார்க்கலாம்…!
நன்றி: பூலியன், தினமணி