நினைவில் நின்றவை…
இறைவன் எங்கென்று என் குருவிடம் – கேட்டேன்
இதயத்துள் புகுந்து பாரென்று – சொன்னான்
உலகத்தை இறைவன் படைத்ததேன் – என்றேன்
அறியும் பொருட்டு தனைதான் – என்றான்
ஆதம் ஏன் குற்றம் செய்தார் – என்றேன்
இறைவன் அருளுக்கது வழிகோல – என்றான்
சாத்தானை இறைவன் படைத்ததேன் – என்றேன்
சாரற்ற கனிகளைப் பிரித்திட – என்றான்
தலைவிதி என்பது என்னவென்று – கேட்டேன்
தலை கனத்தாடுவோர்க்கு எச்சரிக்கை – என்றான்
வாழ்க்கை என்பது என்னவென்று – கேட்டேன்
வாண வேடிக்கை சில நொடி – என்றான்
மரணம் என்பது என்னவென்று – கேட்டேன்
முரணான செயலுக்கு முடிவுரை – என்றான்
அறிவு என்பதை விளக்குங்கள் – என்றேன்
அறியாமல் இருப்பதே முழு அறிவு – என்றான்
தெளிவு என்பது எப்போது – என்றேன்
தன்னையே அறிந்தபின் வரும் அது – என்றான்
இருவிழி பார்வையோ ஒன்று ஏன் – என்றேன்
இருப்பது யாவுமே ஒன்றெனச் – சொன்னான்
சோதனை என்பது என்னவென்று – கேட்டேன்
வேதனை அடங்கிய இறை நெருக்கம் – என்றான்
தண்டனை என்பது என்னவென்று – கேட்டேன்
கண்டித்து செயல்களை வழிமாற்ற – என்றான்
நல்லோர்க்கே நோய்நொடி அதிகமேன் – என்றேன்
நாவினில் அவன் பெயர் நிலைத்திருக்க – என்றான்
சான்றோர்க்கு பொருட்செல்வம் ஏனில்லை – என்றேன்
சீரழிக்கும் கருவிகள் நமக்கேன் – என்றான்
“கலிமா”வின் உட்பொருள் என்னவென்று – கேட்டேன்
இல்லாமல் உணர்தல் இருப்பதை – என்றான்
மெளனத்தில் மூழ்குவது எவ்வாறு – என்றேன்
கண்ணுடன் எண்ணமும் மூடிவிடு – என்றான்
பாவங்களில் மட்டுமேன் வசீகரம் – என்றேன்
பார்வைகள் பகட்டினில் பதிவதால் – என்றான்
இறைஞானம் கிட்டுவதில் சிரமமேன் – என்றேன்
விரைவாய்க் கிடைப்பது விரயமாகும் – என்றான்
இறைகிருபை இருந்தும் அச்சமேன் – என்றேன்
உயிருடன் கலந்து உடலிருப்பதால் – என்றான்
சொர்க்கம் நமக்குக் கிடைக்குமா – என்றேன்
சொர்க்க அதிபதியைப் பிடிக்க முயல் – என்றான்
தொழுகையின் அர்த்தம் என்னவென்று – கேட்டேன்
வாழ்வதற்குப் பயிற்சி தரணியில் – என்றான்
“ஜகாத்” ஏன் தரவேண்டும் – என்றேன்
ஜகத்தில் வறுமை இல்லாமலாக்க – என்றான்
நொன்பின் மாண்பை விளக்குங்கள் – என்றேன்
நாயனை நெருங்கும் நல்லருள் – என்றான்
“ஹஜ்” ஜின் அவசியம் சொல்லுங்கள் – என்றேன்
அனைவரும் ஒன்றென உணர்த்த – என்றான்
“கிப்லா”வை நோக்கியே தொழுவதேன் – என்றேன்
சக்கரம் சுழல ஒர் அச்சாணி – என்றான்
இறுதிநாள் தீர்ப்பின் பொருளென்ன – என்றேன்
தேர்வின் முடிவைத் தெரிவித்தல் – என்றான்
ஒன்றுக்கு ஒன்றேன் முரண்பாடு – என்றேன்
ஒவ்வொன்றிலும் ஒன்று இருப்பதால் – என்றான்
அலைமோதும் மனதைப் பெற்றதேன் – என்றேன்
வலைவீசும் உலகை விலை பேச – என்றான்
புலனைக் கொண்டு நாம் அறிவதென்ன – என்றேன்
புலன் கடந்து ஒன்றிருப்பதை உணர்த்திட – என்றான்
“Jazaakallaahu Khairan” திராவிட முஸ்லிம்