தமிழ்த் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் வரும் காவல்துறையினர் போல, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துமுடிந்த பின்னர்தான் தமிழக அரசு விழித்துக் கொள்கிறது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து, தற்போதைய குழந்தைகள் கடத்தல் சம்பவம் என பல உதாரணங்களைச் சொல்லலாம்.
கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகுதான் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான அனுமதி குறித்த விதிமுறைகளை அரசு தூசுதட்டி எடுத்தது. மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அத்துடன்சரி, தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாததால், தற்போதும் ஏராளமான பள்ளிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இப்போது குழந்தைகள் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபிறகு மீண்டும் விழித்துக் கொண்டுள்ளது அரசு. திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தைகள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் விற்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இதுபோன்ற இல்லங்களின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இருப்பினும், இதுகுறித்து அரசின் சமூகநலத் துறை தீவிர அக்கறை காட்டாதது வியப்புக்குரியது.
தெருக்களில் கண்டெடுக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அரசின் அங்கீகாரம் பெற்ற சேவை இல்லங்கள் உள்ளன. இந்த இல்லங்களுக்கு மட்டுமே குழந்தைகள் நலக் குழுமத்தின் அனுமதியுடன் குழந்தைகளை தத்துக் கொடுப்பதற்கு உரிமை உள்ளது. இங்குள்ள குழந்தைகளின் பராமரிப்புக்காக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
இதுதவிர, ஆதரவற்ற குழந்தைகளை அரசின் அங்கீகாரம் பெறாத இல்லங்களும் பராமரித்து வருகின்றன. குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மட்டுமே இந்த இல்லங்களுக்கு உரிமை உண்டு. யாருக்கும் தத்துக் கொடுப்பதற்கு உரிமை இல்லை. ஆனால், இதையெல்லாம் மீறி தத்து என்ற பெயரில் குழந்தைகள் விற்பனை அமோகமாக நடந்து வந்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆதரவற்றோர் இல்லங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியபோது, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இல்லங்கள் அனுமதி பெறாதவை என்பது தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கானதாக இருக்கக்கூடும். இத்னை காலமாக இவற்றின் செயல்பாடுகள் குறித்து காவல்துறையினரோ, சமூகநலத் துறையினரோ கண்காணிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தாது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஆதரவற்ற குழந்தை தெருக்களில் கண்டெடுக்கப்படும்போது, போலீஸôர் அந்தக் குழந்தையை குழந்தைகள் நலக் குழுமத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும். அந்தக் குழந்தை ஆதரவற்ற குழந்தைதான் என நன்னடத்தை அலுவலர் சான்று அளித்த பிறகு, அந்தக் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரசின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் நடத்தும் இல்லத்தில் சேர்க்க குழந்தைகள் பாதுகாப்புக் குழுமம் நடவடிக்கை எடுக்கும்.
அதன்பிறகு அக் குழந்தையின் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் தொண்டு நிறுவனம் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் குழந்தைக்கு உரிமை கோரி யாரும் வராதபட்சத்தில் குழந்தையைத் தொண்டு நிறுவனமே தொடர்ந்து பராமரிக்கும்.
இவ்வாறு இல்லங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளைத் தத்துக் கொடுப்பதற்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. தத்து எடுப்பவர் 25 வயது முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குழந்தையைப் பராமரித்து வளர்க்கும் அளவுக்கு பொருளாதார நிலைமை நன்றாக இருக்க வேண்டும்.
ஆனால், இதுபோன்ற விதிமுறைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் சந்தைப் பொருள்போல குழந்தைகள் விற்கப்படுவது தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கிறது.
சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும், அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் காவல்துறையில் சிறார் பாதுகாப்புப் பிரிவு என தனிப் பிரிவு உள்ளது. மேலும், சமூகநலத் துறை அதிகாரிகளுக்கும் இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அரசுத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
இறுதியாக ஒன்று… “”குழந்தைகள் நாட்டின் கண்கள்; அவை விற்பனைக்கல்ல”.
நன்றி: தினமணி