[ உலக அரங்கில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மாற்றாக பல நாடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் அவற்றுள் முக்கியமானவை. ஆனால், இவை வெறும் பொருளாதார ரீதியிலான மாற்றுகள்தான். சீனாவும் இந்தியாவும் மேற்கத்திய சிந்தாந்தங்களுக்கு எதிராக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை வேறு.
மேற்கூறிய எல்லா நாடுகளுமே ஒரே நட்பு வளையத்துக்குள் வந்துவிட்டன. அணுசக்தி கழகத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததே இதற்குச் சாட்சி. வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் என்று இந்தியாவும் பிரேசிலும் கூறிக்கொண்டிருப்பதுகூட நீண்டகாலத்துக்குப் பொருந்தாது. பொருளாதார சீர்திருத்தங்களால், உலகமே ஒரே மாதிரியான சித்தாந்தத்தின் கீழ் வந்துகொண்டிருக்கிறது. ஆசியாவிலும், மத்தியகிழக்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ]
தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் கிடையாது. அதுவும், வெற்றி பெறப் போவது உறுதி என பத்திரிகைகள் கூறிக் கொண்டிருக்கும்போது, தோல்வி வந்துவிட்டால்…? அதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் தேர்தல் நடைமுறைகளைக் குறை கூறுவார்கள். அல்லது எதிரணியினர் மோசடி செய்து ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகக் கண்டபடி குற்றம்சாட்டுவார்கள். சிலர் வன்முறையைக் கையிலெடுப்பார்கள். இன்னும் சிலர் மக்களின் துணையுடன் போராட்டம் நடத்துவார்கள். இதுபோன்ற உச்சகட்டப் போராட்டம்தான் ஈரானில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் நடந்த அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே அகமதிநிஜாத் தலைமைக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். ஆனால், தேர்தல் முடிவை முன்னாள் பிரதமரும் தோற்றுப்போன வேட்பாளருமான மெüசவி ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக தொடக்கத்திலிருந்தே அவர் கூறி வந்தார். முதல் சுற்றிலேயே அகமதிநிஜாத் 63 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதன் மூலம் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகிவிட்டது என்று அவர் வாதிடுகிறார். அவரும் அவரது கூட்டாளிகளும் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பச்சைப் புரட்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் இப்போது வன்முறையாக மாறி, பல உயிர்களைப் பலிவாங்கிவிட்டது. நடப்பது மத அடிப்படைவாதத்தை விரும்பாத மக்களின் எழுச்சியா அல்லது அரசியல்வாதிகளின் திட்டமிட்ட வன்முறையா என்பதைப் பற்றி விதவிதமான விளக்கங்கள் கூறப்படுகின்றன. இந்த விளக்கங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடியவில்லை.உலக அரங்கில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மாற்றாக பல நாடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் அவற்றுள் முக்கியமானவை. ஆனால், இவை வெறும் பொருளாதார ரீதியிலான மாற்றுகள்தான். சீனாவும் இந்தியாவும் மேற்கத்திய சிந்தாந்தங்களுக்கு எதிராக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை வேறு.
மேற்கூறிய எல்லா நாடுகளுமே ஒரே நட்பு வளையத்துக்குள் வந்துவிட்டன. அணுசக்தி கழகத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததே இதற்குச் சாட்சி. வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் என்று இந்தியாவும் பிரேசிலும் கூறிக்கொண்டிருப்பதுகூட நீண்டகாலத்துக்குப் பொருந்தாது. பொருளாதார சீர்திருத்தங்களால், உலகமே ஒரே மாதிரியான சித்தாந்தத்தின் கீழ் வந்துகொண்டிருக்கிறது. ஆசியாவிலும், மத்தியகிழக்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இப்படிப்பட்ட சூழலில், சித்தாந்த ரீதியாகவே உலகத்துடன் மாறுபட்டிருக்கும் ஒரு சில நாடுகளில் ஈரானும் ஒன்று. அதுவும் அகமதிநிஜாத் தலைமையிலான ஈரான், உலகத்தின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே கருதப்படுகிறது.
பராக் ஒபாமா பதவிக்கு வந்த பிறகு ஹுகோ சாவேஸ் போன்றோரே அடக்கி வாசித்துக் கொண்டிருக்கையில், அகமதிநிஜாத் மட்டும் தமது மேற்கத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். அவர் அதிபராகத் தொடரும் வரையில் ஈரானின் அணுஆயுதத் திட்டங்களையோ தன்னிச்சையான போக்கையோ முடக்கவே முடியாது என்பதை மேலைநாடுகள் உணர்ந்திருக்கின்றன. இதற்காகவே மக்கள் போராட்டம் என்ற போர்வையில் ஈரானைச் சிதைக்கும் நடவடிக்கையில் மேற்கு இறங்கியிருப்பதாக ஒருசாரார் நம்புகின்றனர். மெüசவி மேற்கத்திய ஆதரவாளர் என்பது இந்த நம்பிக்கைக்கு கூடுதல் வலுச் சேர்க்கிறது. வழக்கம்போல் பிரிட்டன் தரப்பு இதை மறுத்திருக்கிறது. இன்னொருபக்கம், போராட்டத்தை தாம் தூண்டிவிடவில்லை என மெüசவி கூறுகிறார். மத அடக்குமுறை, பெண் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கி அகமதிநிஜாத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர். ஈரானில் மேற்கத்திய சிந்தனை பெருகிவிட்டதே மக்கள் எழுச்சிக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவோர், சீர்திருத்தம் தேவை என்கிறார்களே தவிர, இஸ்லாமுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பதில்லை. அதனால்தான், மக்கள் மத்தியில் இந்தப் போராட்டத்துக்கு பலமான ஆதரவும் கிடைத்திருக்கிறது.
தேர்தலில் முறைகேடு நடந்ததா என்பதும், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் நியாயம் உள்ளதா என்பதும் விவாதத்துக்கு உரியவை. ஆனால், போராட்டத்தை அடக்குவதற்கு அகமதிநிஜாத் அரசு கையாண்டு வரும் அடக்குமுறை, நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கது. பொறுப்பற்றது. போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கொல்வதால், பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை.
எதிரணியின் போராட்டத்துக்குப் பிரிட்டன்தான் காரணம் எனக்கூறி, அந்நாட்டின் ராஜாங்க அதிகாரிகளை அகமதிநிஜாத் நிர்வாகம் வெளியேற்றியிருக்கிறது. ஜிம்பாப்வேயில் இனவெறி அரசுக்கு எதிராக அந்நாட்டுக் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் நடத்தியதைப்போல, ஈரான் கால்பந்து வீரர்கள் சிலரும் அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தென் கொரியாவுக்கு எதிராக சியோலில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர்கள் தங்கள் கைகளில் பச்சைப் பட்டைகளைக் கட்டியிருந்தார்கள். இப்படி அமைதியாகப் போராடிய வீரர்கள் அனைவருக்கும் அகமதிநிஜாத் தடை விதித்திருக்கிறார்.
இதுபோன்ற தடாலடியான, தேவையற்ற நடவடிக்கைகள் மக்களைச் சலிப்படையச் செய்திருக்கின்றன. ஈரானின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு, மேம்பட்ட கருத்துச் சுதந்திரம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நாடுகளுக்கு இது ஒரு வாய்ப்பாகியிருக்கிறது. ஈரானில் பெருங் கலவரத்தைத் தூண்டி ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு அவை காத்துக் கொண்டிருக்கின்றன. ஈரான் நிலைமை குறித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைக் கவனித்தாலே இந்த உண்மை புரியும். போராட்டம் தொடங்கி சில நாள்கள்வரை மௌனமாக இருந்துவந்த அமெரிக்காவும் பிரிட்டனும் அகமதிநிஜாத் நிர்வாகத்தை இப்போது விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இவற்றைப் பார்க்கும்போது, ஒரு சதிவலை பின்னப்பட்டிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது அகமதிநிஜாத்தைச் சுற்றியா அல்லது ஒட்டுமொத்த ஈரானைச் சுற்றியா என்பதுதான் தெரியவில்லை.
நன்றி: தினமணி