இதுவல்லவோ பிள்ளைப்பாசம்!
உலக நலனில் கவனம் செலுத்தும் பெற்றோர் அக்குழந்தையின் மறுமை நலனை பற்றி கவலைப்பட்டதுண்டா?
திருமணமான ஒவ்வொரு தம்பதியரும் அவர்களின் வாரிசு வயிற்றில் கருவானவுடன் அந்த தம்பதியர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவதில் தொடங்கி அந்த குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அக்கறை செலுத்துகிறார்கள். எல்.கே.ஜி. சீட்டு தன் குழந்தைக்கு கிடைத்த்துவிட்டால் சொர்க்கத்தின் அனுமதிச்சீட்டு கிடைத்தது போன்று ஆனந்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த பிள்ளைக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறார்கள். இதுபோக அந்த பிள்ளையின் வருங்கால நலனுக்காக, இஸ்லாம் அனுமதிக்காத பல்வேறு பாலிசிகளையும் சேர்த்து வைக்கிறார்கள். தன் பிள்ளைக்கு சிறு நோய் என்றால் துடித்துப்போகிறார்கள்.
அந்த நோய் நீங்கும் வரை இரவு-பகல் கண்விழித்து கடமை செய்கிறர்கள். இவ்வாறெல்லாம் தன் பிள்ளைமீது பாசம் காட்டும் பெற்றோர், அக்குழந்தையின் உலக நலனில் கவனம் செலுத்தும் பெற்றோர் அக்குழந்தையின் மறுமை நலனை பற்றி கவலைப்பட்டதுண்டா?
கணக்கிட்டு பார்த்தால் சொற்பமான அளவுக்குத்தான் பிள்ளையின் மறுமை நிலையை பற்றி கவலைப்படும் பெற்றோர் உள்ளனர். ஆனால் நமது ஆதித்தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நரகம் செல்லும் தம் சந்ததிகளை எண்ணி கண்ணீர் வடித்தார்கள்;
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்: ”நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இறங்கி வந்தார். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை “ஸம்ஸம்” நீரால் கழுவினார்.
பிறகு ஞானமும் இறைநம்பிக்கையும் நிரம்பிய, பொன்னாலான தாம்பாளத்தோடு என்னிடம் வந்து, அதிலிருந்து என் நெஞ்சினுள் ஊற்றி மூடினார்.பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு விண்ணில் ஏறினார். பூமியின் (முதல்) வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானக் காவலரிடம், “திறப்பீராக!” என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார். “யார் அது?” எனக் காவலர் கேட்டார்.
அவர் “(நான்)ஜிப்ரீல்” என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார். “உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?” என்று காவலர் கேட்டார். “என்னுடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்திருக்கிறார்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “அவருக்கு ஆளனுப்பப் பட்டிருந்ததா?” என்று காவலர் கேட்க, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்”ஆம்” என்று பதிலளித்தார்.
முதல் வானக் காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்துக்குள் உயர்ந்து சென்றபோது அங்கு தமக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் (பிரிந்து) புடைசூழ்ந்திருக்க ஒருவர் இருந்தார். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (என்னைப் பார்த்ததும் அவர்,) “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார்.
“யார் இவர் ஜிப்ரீலே?” என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டேன். “இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் அலைஹிஸ்ஸலாம். இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள், அன்னாரின் வழித்தோன்றல்கள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடப்பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப்பக்கம் பார்க்கும்போது சிரிக்கிறார். இடப்பக்கம் பார்க்கும்போது அழுகிறார்” என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்பதிலளித்தார். [ஹதீஸ் சுருக்கம். நூல்; முஸ்லிம்]
நபிகளாரின் இந்த பொன்மொழி உணர்த்துவதென்ன? நம்மை பார்த்திராத ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நாம் அவர்களின் சந்ததி என்ற ஒரே காரணத்திற்காக நம்மில் ஒரு பிரிவினர் நரகம் செல்வதை எண்ணி கண்ணீர் வடித்து கைசேதப்படுகிறார்கள் எனில், பத்து மாதம் சுமந்து, பாலூட்டி பாராட்டி சீராட்டி வளர்த்த நம் பிள்ளை நாளை நரக நெருப்பில் கருகாமல் இருக்க நாம் செய்த காரியம் என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்கவேண்டும். வல்ல இறைவன் கூறுகின்றான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
”முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.” (அல்குர்ஆன் 66:6)
இனியேனும் நம் பிள்ளைகளின் மறுமை வாழ்க்கையில் கவனம் செலுத்துவோமா…?
”Jazaakallaahu khairan” முகவை எக்ஸ்பிரஸ்.