மனைவியை மகிழ்விப்பது எப்படி?
[ மீள்பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை, இவ்விணையத்தில் மட்டும் இன்று (12-29- 2018) வரை, 68,238 முறை பார்வையிடப்பட்டுள்ளது. -adm. N.I.]
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்)
அழகிய வரவேற்பு
– வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
– மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. – அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா” செய்யலாம்.
– வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
– நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.
– உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
– தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
– மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
– மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
– நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
– உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும்பொழுது மீட்டிப்பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின்பொழுது ஏற்பட்ட…)
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
– நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
– ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
– இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்.
– இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களை (சினிமா போன்றவற்றை) மறுத்து விடுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
– வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால்.
– கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
– குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள். ஹ{தைபியா உடன்படிக்கையின் பொழுது நபியவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நல்ல ஆலோசனை வழங்கியது அவர்களின் மனைவிதான்.
– அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
– மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
– மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
– ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரை காணச் செல்லும்பொழுது
– மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைக் கண்டியுங்கள்).
– அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
– அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
– மனைவிக்கு தேவையான நல்ல அறிவுரைகளை கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
– உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
– நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
– குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங்கள்.
– நீங்கள் வெளிய+ரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
– முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
– திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
– எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
– பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
– கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும் மாறாக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது)
– அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
– அவசிய தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
– நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
– எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
– அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
– மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல்நலக்குறைவோ அல்லது உங்களின் மனைவியின் அனுமதியோ இருந்தால் தவிர).
– பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
– அதற்கெனவே உள்ள முன்பக்கத்தின் வழியாக மட்டும் (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
– காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
– அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
– அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
– மாதவிடாய் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
– பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
– அவளுக்கு கஷ்டமான கோணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பருமனான ஆளாக இருந்தால் அவளின் நெஞ்சில் முழுமையாக சாய்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி சுவாசத்திற்கு கஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்.
– அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
– படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
– தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
– உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
– காலை மற்றும் மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ர் (இறைநினைவுகளை) அவளுக்கு போதியுங்கள். (நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்)
– இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
– ஹஜ் மற்றும் உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல்
– அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
– உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்பு கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
– அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
– பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
– உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) கொடுத்தது போல் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
– கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
– இஸ்லாத்தின் அடிப்படை
– அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
– படித்தல் மற்றும் எழுதுதல்
– இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
– பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
– வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
– வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
– மஹரம் இல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
அதிகப்படியான அக்கறையைத் தவிர்ந்து கொள்வது. உதாரணமாக :
– அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்ப+ர்வமாக இல்லாமல் வாய் தவறிக் கூட பேசியிருக்கலாம். –
அவசர விஷயத்திற்காக அருகாமையில் உள்ள இடங்களுக்குப் போவதை தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
– தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதை கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
– மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவைகள் ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் பிரச்சினைகளை பெரிதாக்குவதும் போன்றவைதான் திருமண பந்தத்தை முறித்துவிடுகின்றது.
– இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையை தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.
– உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளை திருத்துதல்
– முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
– அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
– அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
– மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் கணவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
– மனைவி (எந்த காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந்தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியை பயன்படுத்தலாம்.
– குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டது போல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் இந்த அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
– காயம் உண்டாகும் படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
– செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
– பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
– உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
– தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
– எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவைகளின் மன உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு)
– சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியை கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியை கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்படுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள் தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
– தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்கு முன் வேறுவழியில் நயமாக சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
– அவமரியாதை செய்யக்கூடிய வகையில் திட்டுவதை தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
– பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும் வரை பொருத்திருங்கள்.
– உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும் வரை சற்று பொறுமை கொள்ளுங்கள்.
Note: The above article is a summary of the book “How to make your wife happy” by Sheikh Mohammed Abdul Haleem Hamed. English Translator brother Abu Talhah, reviewer Brother Adam Qurashi of Muslim Students’ Association University of Alberta Edmonton, Canada. Tamil Translator (from English) : Mufti, K.S.A.