முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரவலாக வாழ்கிறார்கள். அதாவது கொழும்பு, குருநாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா, அநுராதபுரம், காலே, பொலனறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, கண்டி, கேகாலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுணியா, முல்லைத்தீவு பகுதிகளில் 41 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை வாழ்கின்றனர்.
கொழும்பு முதல் மொனறாகலை வரையிலுள்ள 11 மாவட்டங்களில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், கண்டி முதல் இரத்தினபுரி வரையுள்ள மாவட்டங்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேரும், வடக்கில் உள்ள 6 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேரும் வசிப்பதாக 1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு உறுதி செய்கிறது.
குருநாகல், கண்டி, புத்தளம் பகுதிகளில் தென்னந்தோப்பு உரிமையாளர்களாக, விவசாயம் சார்ந்த பண்ணை அதிபர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் கீழ்த்தட்டு வர்க்கத்தினராகவும், தெற்கிலோ நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பினராகவும் உள்ளனர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் தமிழ் மற்றும் தமிழரோடும், தெற்குப் பகுதி மக்கள் வாழ்நிலை, வசதி காரணமாக சிங்களவரோடும் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்பகுதி முஸ்லிம்களின் குழந்தைகள் சிங்களத்தையே கல்வி கற்கும் மொழியாகத் தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி என்னவோ தமிழ்மொழிதான்.
இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது வெறும் வியாபாரத் தொடர்போடுதான் அவர்கள் இருந்தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வது 9, 10, 12 ஆம் நூற்றாண்டுகளில்தான் தொடங்கியது. இதை ** இரண்டாவது நகரமயமாதல் என்று குறிப்பிடுகிறார்கள். மூன்றாவது நகரமயமாதல் என்பது நவீன மத்தியதர வாழ்க்கை நிலையை உருவாக்கிய காலனி ஆட்சிக் காலமாகும்.
இவர்களில் பெரும்பான்மையோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பாராளுமன்ற, ஜனநாயகப் பங்களிப்பவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
அம்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நல்ல கவித்திறன் உண்டு. இவர்கள் கழனிகளில் வேலை செய்யும்போது பெண் கவி புனைந்து பாடும்போது, ஆண் எதிர் வரியைப் பாடுவதும் ரொம்ப இனிமையாக இருக்கும். இந்தக் காட்சியைக் கண்டு புல்லரித்துப் போன உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் முஸ்லிம் ஆண்-பெண்களின் கவித்திறமையை சிலாகித்து அழகான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார்.
முஸ்லிம்களையும், தமிழர்களையும் தனியாகப் பிரிக்க எண்ணிய சிங்கள அரசு, வானொலி நிகழ்ச்சியில் கூட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்ற ஒரு பிரிவையே ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி தமிழில்தான் வழங்கப்படுகிறது.
1981 கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 11,34,556 ஆகும்.
இங்குள்ள முஸ்லிம்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இலங்கை வாழ் முஸ்லிம்கள், “”மூர்கள்” என்று இவர்களை குறிப்பிடுகிறார்கள்.
2. இந்திய அல்லது பாகிஸ்தானி முஸ்லிம்கள்.
3. மலேயா முஸ்லிம்கள்.
”மூர்கள்’ இந்தியாவில் இருந்தும், அரேபிய நாட்டில் இருந்தும் வந்தவர்கள். இவர்கள் வியாபாரிகளாக இலங்கை வந்து பின்னர் இங்குள்ள மக்களோடு திருமணத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.
தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய (காயல்பட்டணம், கீழக்கரை) முஸ்லிம்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழாகும்.
இவர்கள் பெரும்பாலும் சன்னிப் பிரிவு மற்றும் சாஃபிப்பிரிவைச் சார்ந்தவர்கள்.
இரண்டாவது பிரிவான இந்திய-பாகிஸ்தானி முஸ்லிம்கள் என்பவர் பெரும்பாலும், “”மேமோன்” “”போக்ராஸ்” மற்றும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் இருந்துவந்து குடியேறிய வியாபாரிகள் ஆவர்.
இவர்கள் பெரும்பான்மையோர் “”சாஃபி” பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் மேமோன் முஸ்லிம்கள் மட்டுமே “”ஷியா” பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
மேமோன் மற்றும் போக்ராஸ் பிரிவினர் உருது மற்றும் குஜராத்தியைப் பேசக் கூடியவர்கள்.
மூன்றாவது பிரிவான மலேயா முஸ்லிம்கள் சமீப காலத்தில் வந்து குடியேறியவர்கள்.
இவர்கள் டச்சுக்காரர்கள் காலத்தில் ஜாவாவில் இருந்து வியாபார நிமித்தமாக குடியேறியவர்கள். தாய்மொழி மலேயா மொழியாக இருந்தபோதிலும் தமிழையே பேசுகின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மற்ற பிரிவினரைப்போல் அல்லாது திருமணங்களை சிலோன் மூர்களோடும் கூட நடத்திக் கொள்கின்றனர்.
1. இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 34,195 பேர்.
2. மலேயா முஸ்லிம்கள் 43,378.
3. மூர்கள் 10,56,972.
ஆக்கிரமிப்பாளர்களைப் போலன்றி இம்மூன்று குழுக்களும் படையெடுப்பால் வந்து குடியேறியவர்கள் அல்ல. இவர்கள் இலங்கையில் தங்களுக்கெனத் தனியான ஆட்சி முறையையும் நிலைநாட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவர்களது மதம் அரசாங்கத்தால் ஒடுக்கக் கூடியதாகவும் இல்லை.
சிலர் விவசாய சமூகத்தில் இருந்தபோதும் பெரும்பான்மையான சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வைர வியாபாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.
நகர முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வர்த்தகர்களாகவும் சிறுபான்மையோர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.
இதில் மேல்தட்டு சக்திகள் கொழும்பில் தங்கி உள்ளன. மொத்த முஸ்லிம்களின் அரசியல் தன்மை கொழும்பு வாழ் முஸ்லிம்களால் தீர்மானிக்கப்படுகிறது.
பெரும்பாலான முஸ்லிம்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் விவசாயிகளாகவும் மற்றவர் சிறு வியாபாரம், நில உரிமையாளர், மீனவர் மற்றும் கூலிகளாகவும் உள்ளனர். கிராமப்புற சமூகத்தில் சிங்களவர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் கல்வியறிவு மிகக் குறைவு.
இவர்கள் புத்த இனவெறி கலாசாரத்தால், அடிக்கடி இனவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். முதன் முதலில் போர்த்துக்கேயர் உள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களே.
எல்லாக் காலனிவாதிகளுடனும் கடுமையான எதிர்ப்பினைக் காட்டியவர்கள். வியாபாரத்தில் போட்டி நிமித்தமாக அந்நிய ஆட்சியாளர்களும் இவர்களை ஒடுக்கி உள்ளனர். 1613இல் “மதாரா’ என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் இதற்குச் சான்றாகும்.
நன்றி: தினமணி “ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’- 12: முஸ்லிம் தமிழர்கள்