அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்கும் திட்டம்
”…தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூரி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.” (திருக்குர்ஆன்.73:20)
”இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார்.
கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.
பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!” என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!” என்று கூறினேன்.
அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!” என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார்.
அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார்ஸஎன்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2291)
”அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தல்”
ஏக இறைவன் தன் திருமறையில் மனிதகுலத்திற்கு தேவையான அனைத்து விதமான ஏவல் – விலக்கல் சட்டங்களை கூறி இருக்கின்றான்.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட மனிதகுலத்திற்கு தேவையான அனைத்து விதமான ஏவல் – விலக்கல் சட்டங்களையும் அதிகப்பட்சம் இறைத்தூதர் வாழும் காலத்திலேயே அவர்களும், அவர்களுடைய உறவினர்களையும், உயிருக்கு உயிரானத் தோழர்களைக் கொண்டும் நடமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
திருக்குர்ஆனிலும், இறைத்தூதருடைய வாழ்க்கையிலும் உலகம் முடியும் காலம்வரை மனிதகுலம் பின்பற்றியொழகுவதற்கு போதுமான அம்சங்கள் அடங்கி இருந்த போதிலும் திருக்குர்ஆனுக்கு முந்தைய காலத்தில் ஏகத்துவத்தின் அடிப்படையில் இறைவனை பயந்து வாழ்ந்த நன்மக்களின் நற்செயல்களில் தனக்கு விருப்பமான சில சம்வங்களையும் இக்கால மக்கள் இறையச்சத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தனது இறுதித்தூதர் அவர்களுக்கு எடுத்துக்கூறினான்.
அதில் ஒன்று தான் மேற்காணும் இறைவனை சாட்சியாகவும், பொறுப்பாளருமாக்கி கடன் கேட்டவருக்கு மறுக்காமல் கடன் கொடுத்தவருடைய நற்செயலும், அல்லாஹ்வின் பெயரைக்கூறி கடன் பெற்றவர் குறிப்பிட்ட தவனையில் அதைத் திருப்பிக் கொடுத்த நற்செயலுமாகும்.
சாட்சிகளையும், பொறுப்பாளரையும் கொண்டு வந்தால் மட்டுமே கடன் தருவேன் என்று உறுதியாகக் கூறியவரிடம் அவைகளைக் கொண்டு வரமுடியாதவர் அவைகளுக்காக இறைவனை சாட்சியாக்கியதும் பதில் கூறி தப்பித்துக் கொள்வதற்காக காரணங்களைத் தேடாமல் தாமதமின்றி நீ சொல்வது தான் சரி என்றுக்கூறி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அல்லாஹ்வுக்காக அவர் கோரியக் கடனை அழகிய முறையில் கொடுத்து விடுகிறார்.
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட அவருடைய நற்செயல் நம் அனைவருக்கும் வரவேண்டும் அதற்காகவே அந்த சம்பவத்தை இறைவன் தனது தூதருக்கு சொல்லிக் காட்டினான்.
படிப்பினைகள்
நில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்களை உடையவர்கள் அவர்களுக்கு திடீரென பண நெருக்கடி ஏற்பட்டால் மேல்படி நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பிணையாக்கி எளிதில் கடன் பெற்று அதன் மூலம் தனது நெருக்கடித் தீர்ந்ததும் தாமதமின்றி அவைகளை மீட்டிக்கொள்வார்கள்.
நில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்கள் இல்லாதவர்கள் எதைப் பிணையாக்குவார்கள் ? வசதி இல்லாதவர்களுக்கு யார் சாட்சியாகுவார்கள் ?
அவர்கள் அல்லாஹ்வைத் தவிற வேறெவற்றையும் பிணையாக்க முடியாது ! வேறெவரையும் சாட்சியாக்க முடியாது !
வேறெந்த வழியுமில்லாத ஒருவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் கோரினால் தாமதமின்றி அல்லாஹ்வுக்காக அழகிய முறையில் தவணை விதித்து கடன் கொடுக்க இறைநம்பிக்கையாளர்கள் முன் வர வேண்டும்.
இவரிடம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது, திரும்பப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு ஈடாகப் பெறுவதற்கு அவரிடம் எதுவும் கிடையாது என்று கடன் பெறுபவருடைய பேக்ரவுண்டைப் பார்க்கக் கூடாது.
அவ்வாறுப் பார்த்தால் அல்லாஹ்வின் அழகிய கடன் வழங்கும் திட்டம் இறைநம்பிக்கையாளர்களால் நிறைவேற்ற முடியாமல் போகும். இறைநம்பிக்கையாளர்கள் இறைவனின் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப் படாவிட்டால் இறைமறுப்பாளர்கள் நிறைவேற்றுவார்களா ? என்பதை இறைநம்பிக்கையாளர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
கஷ்டப்பட்டு ஈட்டியப் பொருளாதாரத்தை கடன் என்றப் பெயரில் ஒருவார் வாங்கிக் கொண்டு திரும்பத் தராவிட்டால் என்ன செய்வது ? அதற்காகவா இத்தனை கஷ்டப்பட்டு பொருளீட்டினோம் ? என்ற சிந்தகைனகள் எழுவது இயல்பு.
நிரந்தரமான மறுஉலக வாழ்க்கையை நம்பி அற்பமான இவ்வுலகில் வாழும் இறைநம்பிக்கையாளர்கள் தனக்கு கிடைத்ததையெல்லாம் தனக்குரியது என்று உரிமைக் கொண்டாட மாட்டார் அதிலிருந்து தேவையுடையோருக்கு கொடுத்து உதவ நினைப்பார் காரணம் கஷ்டப்பட்டுப் பொருளீட்டினாலும், கஷ்டமில்லாமல் பொருளீட்டினாலும், குறைவாகப் பொருளீட்டினாலும், நிறைவாகப் பொருளீட்டினாலும் அது அனைத்தும் இறைவனின் நாட்டப் பிரகாரமே மனிதர்களை வந்தடைகிறது என்று நினைத்து தங்களால் இயன்றவரை வாரி வழங்குவார்கள்.
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.(17: 30.)
பொருளாதாரமும் பெருகுகிறது நன்மையும் அதிகரிக்கிறது
அடிப்படை வசதி இல்லாத ஏழைகளுக்கு அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் கடன் கொடுத்து உதவுகின்றவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அவற்றிற்கான வெகுமதிகளேத் தனி.
கொடுத்தக் கடன் திரும்பக் கிடைத்து விடுகிறது.
பொருளாதாரம் பன்மடங்காகப் பெருகுகிறது.
நற்செயல் புரிந்ததற்கான நன்மை எழுதப்படுகிறது.
அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான கூலியும் உண்டு. (57:11.)
அல்லாஹ்வுக்காக கொடுத்தக் கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தவணையில் திரும்பப்பெற முடியவில்லை என்றால் இன்னும் அதன் தவணையை அல்லாஹ் அதிகப்படுத்தச் சொல்கின்றான். அல்லாஹ்வுக்காக பல தவனைகள் வழங்கியும் உண்மையிலேயே அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் அல்லாஹ்வுக்காக என்று கொடுத்தக் கடனை அவருக்கே தர்மமாக்கி விடும்படி கூறுகின்றான். 2:280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.73
அல்லாஹ்வுக்காக கொடுத்தக் கடன் திரும்பப் பெறமுடியவில்ல என்றால் அதை தர்மமாக்கி விடும்படி அல்லாஹ் சொல்வதன் நோக்கமென்ன ?
அல்லாஹ்வின் வழியில் செய்யப்படுகின்ற நற்செயல்கள் அனைத்தும் பத்திலிருந்து பல மடங்காக அதனதன் செயலுக்கேற்ப நன்மைகள் பல்கிப் பெருகுகின்றன இதில் அல்லாஹ்வின் வழியில் செலவிடப்படுகின்றப் பொருளாதாரம் (கடன், தர்மம், தஃவாப் பணிகள்) மட்டும் உலகிலேயே ஒன்று நூறு மடங்காகப் பல்கிப்பெருகி விடும். 2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன். ஏழைகளுக்குக் கொடுத்து திரும்பப்பெற முடியாத கடன் தொகையை தர்மத்தில் சேர்த்து விடும்படி அல்லாஹ் கூறுவதன் காரணம் அது அவருடைய பொருளாதாரத்தில் நூறு மடங்காகப் பெருக வேண்டும் என்பது தான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன்.
எந்த ஒரு அடியான் தனது பக்கம் முழுமையாகத் திரும்பி விடுகின்றானோ அவனை இறைவன் ஒருப் போதும் கை விடுவதில்லை என்பதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்கிக் ஏழைகளுக்கு கொடுத்த கடன் உதவியைக் கொண்டு அவருக்கு இவ்வுலகிலும், மறுஉலகிலும் வழங்கப்படும் வெகுமதிகள் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாலன் என்பதற்கு பெரிய எடுத்துக் காட்டாகும்.
அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் பெற்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்.
அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் பெற்ற அந்த இஸ்ரவேலர் தனது தேவை முடிந்ததும் குறித்த தவனையில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவதற்காக வாகணங்களைத் தேடியும் அது கிடைக்காமல் மரத்தைக் குடைந்து அதற்குள் கடனாகப் பெற்ற தங்கக் காசுகளை வைத்து அதற்கு இறைவனை பொறுப்பு சாட்டி அனுப்பியதும் தங்கக்காசுகளை சுமந்து சென்ற அந்த மரம் போய்ச் சேரவேண்டியவருக்கு முறையாகப் போய்ச் சேர்ந்து விடுகிறது.
அல்லாஹ்வை சாட்சியாக்கி வாங்கிய கடனை வாகனங்கள் கிடைக்காத காரணத்தைக் கூறி தவனைகளை அதிகப்படுத்தி அவரை இழுத்தடிக்காமல் உடனடியாக சேரத்து விடுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி கடன் பெறுபவர்கள் அனைவருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும் அதற்காகவே அந்த சம்பவத்தை இறைவன் தனது தூதருக்கு சொல்லிக் காட்டினான்.
இன்று நாம் மரத்தைக் குடைந்து அதில் வைத்து அனுப்ப யாதொரும் அவசியமும் இல்லை கண் இமைக்கும் நேரத்தில் பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களுடைய கைகளில் கிடைக்கும் அளவுக்கு கண்யூனிகேஷன் வளர்ச்சி அடைந்து விட்டது அதனால் சாக்குப் போக்குகள் கூறி கடன் கொடுத்தவரை இழுத்தடிக்காமல் செல்போனை ஃவிட்ச் ஆஃப் செய்து போடாமல், அல்லது அதைப்பார்த்துக் கொண்டே எடுக்காமல் விட்டு விடாமல் அல்லாஹ்வை சாட்சியாக்கி வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுத்து விடவேண்டும்.
இன்று கடன் கொடுப்பவர்கள் குறைந்துப் போனதற்கு கடன் வாங்கியவர்களின் நாணயமில்லாத்தனமும் ஒரு முக்கியக் காரணமாகும்.
எதையாவது சொல்லி கடனை வாங்கியப் பிறகு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அல்லாஹ்வுக்காக தவனையை இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் நம்மைத்தேடி வருவதற்கு முன் நாமே சென்றுக் கேட்பதில்லை,
கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டப்பிறகும் பொய்யான பலக் காரணங்கள் தினந்தோறும் சொல்வதற்கு பதிலாக அல்லாஹ்வுக்காக அதை விட்டுக் கொடுங்கள் என்றும் கேட்பதில்லை.
அதற்காக தினந்தோறும் ஒருப் பொய் சொல்லி சமாளிப்பது.
இதற்கெல்லாம் முக்கியக் காரணம் கொடுப்பவர் அல்லாஹ்வுக்கென்ற சிந்தனையில் கொடுப்பதில்லை, வாங்குபவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி வாங்குவதில்லை,
கடன் பெறுபவர் தன்னைப் போன்றே இன்னும் தேவையுடைய மக்கள் அதிகம் இருப்பதால் நாம் முறையாக நடந்து கொண்டால் இதைக் கொண்டு பிறரும் பயணடைவார்கள் என்றுக் கருதி அல்லாஹ்வை முன்னிருத்தி கடன் பெற வேண்டும், தவனை கடந்து விட்டால் தாமே சென்று தவனையை நீட்டிக்க வேண்டும், கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அல்லாஹ்விற்காக இதை விட்டுக் கொடுங்கள். அதை எனக்கு தர்மமாக்கி விடுங்கள் வேறு வழி எனக்கில்லை என்றுக் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் அழகிய கடன் திட்டம் புறக்கனிக்கப்படுவதால்….
அழகும் வனப்பும் இருந்தும் வசதி வாய்ப்பு இல்லாதக் காரணத்தால் வாழ்க்கையின் வசந்தத்தை நுகர முடியாமல் படி தாண்டிப் போன ஏழைக்குமருகள் எத்தனையோப் பேர் ?
அறிவும், சிந்தனைத் திறனும் அமையப்பெற்றும் கல்லூரி வாசலில் கால் வைக்க முடியாமல் கஞ்சா, அபின் வியாபாரியாக மாறிப் போன இளைஞர்கள் எத்தனையோப் பேர் ?
தொழில் துறையில் சிறு வயதிலிருந்தே பழுத்த அனுபவம் இருந்தும் ஒருக்கடை முதலாளி ஆக முடியாமல் கடைசி வரை கடைகளில் பொட்டலம் மடித்தவர்கள் எத்தனையோப் பேர் ?
மேற்காணும் இரு இஸ்ரவேலர்களுனுடைய நற்பன்புகளை உலகம் முடியும் காலம் வரை கடன் கொடுப்பவரும்,கடன் வாங்குபவரும் பின்பற்றியொழுகினால் உலகில் வறுமைத் தாண்டவமாடாது, வறுமையினால் உருவாகும் பிச்சை எடுத்தல், திருடுதல், படித்தாண்டுதல் போன்ற மனிதகுலத்திற்கு கேடுவிளைவிக்கும் வெறுக்கத்தக்க நிகழ்வுகள் அறவே நிகழாது. வறுமையைத் துடைத்தெறிந்து குழப்பங்கள் முற்றிலும் நீங்குவதற்காக மனித குலத்திற்கு இறைவன் தொகுத்து வழங்கிய ”அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தல் திட்டம்” இறைநம்பிக்கையாளர்களால் அவசியம் நிறைவேற்றியாக வேண்டும்
கடன் அதிகரித்திடாதிருக்க அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய துஆ :
”இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள்.
‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ஆதாரம் புகாரி 2ஃ832) மேற்காணும் துஆவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையின் அத்தஹயாத் இருப்பில் ஓதிவந்தார்கள், நாமும் அவ்வாறே ஓதவேண்டும்.
– அதிரை ஏ.எம்.பாரூக்