மகிழ்ச்சியான, உறுதியான, அமைதியான உள்ளம் தான் அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகள் பிறக்கும்.
மகிழ்ச்சி என்பது ஒரு கலை. அதைக் கற்றுத்தான் அறிந்து கொள்ள முடியும் என்பவை அறிஞர்களின் கருத்து. எனவே மகிழ்ச்சிக்கலையைக் கற்றவர் மிகச் சிறந்த அருட்கொடையைப் பெற்றவர் ஆகி விடுவார். அவரது வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக அமையும்.
மகிழ்ச்சியை எவ்வாறு கற்பது? எதையும் தாங்கும் இதயமும், மன வலிமையும்தான் மகிழ்ச்சியின் ஆணி வேர். எனவே, உனது வாழ்க்கையில் எந்தப் புயல் வீசினாலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டாலும் நீ அசைந்துவிடாதே!அவற்றைக் கண்டு நடுங்கிவிடாதே! ஒரு மனிதனின் உறுதிமிக்க, தூய்மையான இதயத்தைப் பொறுத்து அவனது மனம் பிரகாசமடையும் மகிழ்வுறும்.
பயந்த சுபாவம், நடுங்கும் உள்ளம், பலவீனமான இதயம் இவைதாம் கவலையையும், துக்கத்தையும் நம் அருகே அழைத்து வருகின்றன. எனவே, பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் நீ பழக்கப்படுத்திக் கொண்டால் காயங்கள், வலிகள், துயரங்கள் எல்லாமே எளிதாகிவிடும். உன்னிடமிருந்து காணாமல் போய்விடும்.
ஒரு கவிஞர் பாடுகிறார்:
இயற்கையின் இடர்களைத் தாங்க
உன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால்
பேராபத்துகள் எளிதாகிவிடும்.
குறுகிய பார்வையும், சுயநலமும் மகிழ்ச்சியின் எதிரிகள் உலகையும் அதில் வாழும் பிற உயிர்களையும் மறப்பது கூட ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கெடுக்கும். இறைவன் தன் எதிரிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது மற்றொரு கூட்டத்தினரைக் கவலை பிடித்துக் கொண்டது. (அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தனர்) (அல்குர்ஆன், 31:54)
இத்தகைய குறுகிய மனம் படைத்தவர்கள் தாங்கள் தாம் உலகம் என எண்ணுகிறார்கள். பிறர் நலன் குறித்து இவர்கள் சிந்திப்பதுமில்லை. அக்கறை கொள்வதுமில்லை. எப்போதும் தம் வாழ்க்கையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக் கிறார்கள். பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற சிந்தனை இவர்களிடம் கொஞ்சமும் இல்லை.
எனவே, நீயும் நானும் நம்மைப் பற்றி மட்டும் சிந்திப்பதை கவலைப்படுவதை சில காலம் நிறுத்தி வைக்க வேண்டும். சில நேரங்களில் நம்மை நாம் மறக்க வேண்டும். நமது காயங்களையும், கவலைகளையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பிறரது இன்னல்களைப் போக்க முயல வேண்டும். இதன் மூலம் நமக்கு இரண்டு இலாபம்; நாமும் மகிழ்ச்சியாக வாழலாம். பிறரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம்.
மகிழ்ச்சிக் கலையின் மற்றொரு முக்கியமான அம்சம்:
சிந்தனைக்குக் கடிவாளமிட்டு அதை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது பிடியிலிருந்து தப்பிக்கவோ, ஓடவோ, சிதறவோ அதை அனுமதிக்கக் கூடாது. நமது சிந்தனையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது நமது பிடி தளரும்போது அது நம்மைக் கட்டுப்படுத்தும்; பலவந்தப்படுத்தும். அடங்க மறுத்து அது அதன் வழியில் செல்லும்.உனக்கு அடங்காத சிந்தனை கடந்த கால கவலைக் கோப்புகளைத் திறந்து பிறந்தது முதல் நீ வாழ்க்கையில் சந்தித்தப் பழைய துயரங்களையெல்லாம் உன்னிடம் வாசித்துக்காட்டும்; மறைந்து போன வேதனைகளை மீண்டும் நினைவுபடுத்தும்; வருங்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உன்னை ஆட்டம் காண வைக்கும்; உனது உணர்வுகளை சுட்டெரிக்கும். எனவே
, முழு முயற்சியுடன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி அதை உனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வா. அப்போது நல்ல பயனுள்ள ஆக்கப்பூர்வமான செயல்கள் உன்னிலிருந்து வெளிப்படும்.
”மரணமற்றஎன்றும் நிரந்தரமான இறைவன் மீது முழு நம்பிக்கை வையுங்கள்” (அல்குர்ஆன், 25:58)மகிழ்ச்சிக் கலையின் இன்னொரு அடிப்படையான கூறு: வாழ்க்கையை அதற்குரிய இடத்தில் நீ வைக்க வேண்டும் அதன் தகுதிக்கேற்ற மரியாதையை மட்டுமே அதற்கு வழங்க வேண்டும். இந்த உலக வாழ்க்கை அற்பமானது. அது உன்னிடமிருந்து எதையும் உரிமை கொண்டாட நீ இடம் தராதே! ஏனெனில் இவ்வாழ்க்கை இடர்கள்
, காயங்கள், துயரங்கள் ஆகியவற்றின் பிறப்பிடம். இந்த உலக வாழ்க்கையின் இயல்பே இதுதான் என்றாகிவிட்ட பிறகு இந்த வாழ்க்கையை நினைத்து நீ ஏன் கவலைப்பட வேண்டும்? இழப்புகளுக்காக ஏன் வருந்த வேண்டும்? இந்த வாழ்க்கையின் மிக நல்ல பாகம் கூட கறைபடிந்திருக்கிறது. அதன் மின்னல் ஏமாற்றுகிறது. அதன் வாக்குறுதிகள் வெறும் கானல் நீராகக் காட்சி தருகின்றன. அதன் செல்லக் குழந்தை தவறிவிடுகிறது. வாழ்க்கையின் தலைவன் பொறாமைக் கொள்ளப்படுகிறான். வாழ்க்கையை அனுபவிப்பவன் அச்சுறுத்தப்படுகிறான். வாழ்க்கையின் காதலன் காதலியின் சதியினாலேயே கொலைசெய்யப்படுகிறான்.
கற்றுக்கொள்வதன் மூலமாகவே கல்வியைப் பெறமுடியும். பொறுமையைக் கடைபிடிப்பதன் மூலமாகவே பொறுமை யாளனாக ஆகமுடியும். ( நபிமொழி )
மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியைப் பெற முடியும். எனவே முதலில் சிரிக்கப் பழகு. மகிழ்ச்சியின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்து. மகிழ்ச்சி உன் இயல்பாக மாறும்வரை மகிழ்ச்சியுடன் இருக்க தொடர்ந்து உன்னை நீ கட்டாயப்படுத்து. இத்தகைய வழிமுறைகள் மூலம் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என மனிதப்பண்புகள் பற்றிய கலை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
எனவே, இந்த உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இடர்களைக் கண்டு வெறுப்போ, வேதனையோ அடையக் கூடாது.
ஒரு கவிஞர் பாடுகிறார்:
பூமியில் மரண ஆட்சி நடக்கிறது
இந்த உலகம் நிரந்தரம் அல்ல
சேறோ, அழுக்கோ அற்ற
தூய வாழ்க்கையை நீ விரும்புகிறாய்
ஆனால், வாழ்க்கை
சேற்றில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
இயற்கைக்கு மாறாக ஒவ்வொரு நாளும்
துன்பங்களை அனுபவிப்பவன்
தண்ணீரில், எரி கொள்ளியைத் தேடுகிறான்
கிடைக்காததற்கு ஆசைப்படுவது
பள்ளத்தாக்கின் விளிம்பில்
ஆசை எனும் வீட்டை
கட்டுவதற்குச் சமம்.
வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது
இரண்டுக்குமிடையே மனிதன்
கற்பனையில் நடமாடிக் கொண்டிருக்கிறான்.
எனவே
உங்கள் இலக்கை
விரைவில் அடைந்துகொள்ளுங்கள்
உங்கள் ஆயுள் ஒரு புனித நூல்; இரவல் பொருள்
அதை மீட்க
இளமைக் குதிரையில் வேகமாகச் செல்லுங்கள்
அமைதியாக வாழ
நீ பேராசை கொண்டாலும்
காலம் அமைதியானது அல்ல
சுதந்திரத்திற்கு எதிர்ப்பு என்பது
காலத்தின் இயல்பு
உண்மையில் எல்லா கவலைகளிலிருந்தும் உன்னால் விடுபட முடியாது. வாழ்க்கை இவ்வாறு தான். படைக்கப் பட்டிருக்கிறது.
”மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கின வனாகவே படைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன், 90:4)
”(ஆண், பெண்) கலந்த இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற் காகவே செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.” (அல்குர்ஆன், 76:2)”உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும் வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான்).” (அல்குர்ஆன், 11:7)
எனவே இயன்றவரை கவலையை, துக்கத்தைக் குறைக்க முயற்சிமேற்கொள்ள வேண்டும் இதுதான் நமது நோக்கம். முற்றிலும் கவலையில்லாத வாழ்க்கை சொர்க்கத்தில்தான் கிடைக்கும். எனவேதான் சொர்க்கவாசிகள் ”எங்களை விட்டும் எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட இறைவனுக்கே எல்லாப் புகழும்” (அல்குர்ஆன்இ 35:34) என்று கூறுவார்கள். சொர்க்கத்தில் நுழைவது வரை நமது கவலை, வெறுப்பு முழுமையாக நம்மை விட்டு மறையாது என்பதை இந்த வசனத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.ஆகவே
, இந்த உலக வாழ்க்கையின் இயல்பை தன்மையை அறிந்துகொள்பவர் உலக வாழ்க்கை வறட்சியானது சூழ்ச்சிமிக்கது என்பதைப் புரிந்து கொள்வார். இது வாழ்க்கையின் இயற்கைப் பண்பு என்பதையும் அவர் உணர்ந்து கொள்வார்.
ஒரு கவிஞர் உலக வாழ்க்கையைப் பற்றி பாடுகிறார்:
உடன்படிக்கைக்குத் துரோகம்
செய்யமாட்டேன் என
வாழ்க்கை நம்மிடம் சத்தியமிட்டு கூறியது
இது வாக்குறுதியைக் காப்பாற்றமாட்டேன் என
சத்தியம் செய்வதைப் போல உள்ளது.
ஆகவே, இந்த உலக வாழ்க்கை பற்றி நாம் கூறியவற்றைக் கொண்டு வாழ்க்கையை விவேகத்துடனும் விழிப்போடும் எதிர்கொள். அதன் சூழ்ச்சியில் சிக்கிவிடாதே. துன்பம், துக்கம், கவலை ஆகியவற்றைக் கண்டு பயந்து ஓடாதே. அவற்றிற்கு அடிபணிந்து வாழ்க்கையின் சதிக்கு நீ உதவிசெய்யாதே. உன்னால் முடிந்தவரை அவற்றை எதிர்த்துத் துணிவுடன் போராடு.
”அவர்களை எதிர்ப்பதற்காக பலத்தையும், லாயத்தில் ( திறமையான ) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் ( எந்நேரமும் ) தயார்படுத்தி வையுங்கள். இதன் மூலம் இறைவனுடைய எதிரிகளையும் உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் அச்சுறுத்தலாம்.” ( அல்குர்ஆன் 8:60 )
”அவர்கள் இறைவனது பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட்த்தின் காரணமாக அவர்கள் தங்களது தைரியத்தை இழந்திடவுமில்லை. பலவீனமாகிவிடவுமில்லை.” (அல்குர்ஆன் 3:146 )
நன்றி : முதுவை – ஹிதாயத் & சமரசம் ( 1 -15 மே 2009 )