[ கடந்த ஆண்டு இறுதியில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து பஸ் நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ]
புகையிலைப் பொருள்கள் மீது நுரையீரல் மற்றும் தேள் படங்களை எச்சரிக்கையாக பிரசுரிக்க வேண்டும் என்ற அரசின் புதிய சட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். புகையிலைப் பழக்கம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் புகையிலைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் மரணமடைகின்றனர். மேலும் 1.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புகையிலை ஒழிப்புப் பிரசாரத்தில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிகரெட் மற்றும் பீடி பாக்கெட்டுகளில் பெரிய அளவில் மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டு பிரசுரிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இச் சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், சிகரெட் தயாரிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக டிச. 1-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அச்சட்டம் அப்போதும் அமலுக்கு வரவில்லை. சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு, எலும்புத் துண்டு படத்தைப் பிரசுரிப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து அது நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நுரையீரல் படமும், தேள் படமும் இடம்பெற்றுள்ளது. சிகரெட் பாக்கெட்டுகளின் மொத்தப் பரப்பில் 40 சதவீத இடத்தில் இந்த எச்சரிக்கைப் படம் பிரசுரிக்கப்படும்.
இந்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள அதேசமயம் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாவது உடலுக்குத் தீங்கானது, புற்று நோய் வரும் அபாயம் உள்ளது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிக அளவில் ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். புகையிலைப் பொருள்களால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆகும் செலவு, புகையிலைப் பொருள்கள் விற்பனையால் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமானதாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து பஸ் நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த எச்சரிக்கை எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது தெரியவில்லை. புகைப்பிடிப்பவருக்கு அதனால் ஏற்படும் தீமை என்ன என்பது நன்றாகத் தெரியும். ஒரு சிகரெட் புகைப்பதைக் கைவிட்டால் ஒருவரின் ஆயுளில் 6 நிமிடம் கூடுகிறது. ஆனால் புகைப்பவருக்கு, நீண்ட ஆயுளைவிட சிகரெட்டே முக்கியமாகப்படுகிறது. உலக அளவில் புகைப்பிடிப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுக்க ஒரே வழி சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் உற்பத்திக்கு தடை விதிப்பதுதான். இதைச் செய்யாமல் புகையிலையைப் பயன்படுத்துவோர் மீது குறை சொல்வதில் பயன் இல்லை.
இந்த எச்சரிக்கை மூலம் நகர்ப்புறங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் அதை முழுமையாக விட்டுவிட முடியாவிட்டாலும், அதன் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளக்கூடும். ஆனால், கிராமப்புற பகுதிகளில் இதனால் பலன் ஏற்படுமா என்பது சந்தேகமே.
கிராமப்புறங்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சற்று வசதி குறைவானவர்கள். அவர்கள் சிகரெட்டுகளை பாக்கெட்டுகளாக வாங்கிவைத்து புகைக்க மாட்டார்கள். அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளாக வாங்கி புகைப்பார்கள். எனவே சிகரெட் பாக்கெட்டுகளின் மீதான எச்சரிக்கையை அவர்கள் அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.
புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது, புகையிலைப் பொருள்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது,
புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை மறக்க சிகிச்சை அளிப்பது, புகைப்பிடிக்காத இடங்களை உருவாக்குவது,
புகையிலைப் பொருள்களை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறுவது
ஆகியவற்றின் மூலம் ஓரளவு பலன் கிடைக்கும். அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும்.
நன்றி: ஜெ. ராகவன், தினமணி