பறப்பதற்கே சிறகுகள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
M U S T R E A D
[ ஆண்பெண் உறவு மனித வாழ்வில் எவ்வாறு அமைந்து வந்துள்ளது என்பதை நாம் வரலாற்றில் ஆராய்ந்து பார்த்தோமானால் ஒன்று அது முற்றலட்சியப் (Negligence) படுத்தப்பட்டு வந்துள்ளது. இல்லையென்றால் அதிதீவிர பக்கச் சார்பு (Exaggeration) உடையதாக இருந்துள்ளது,
ஒரு பக்கம் எந்த பெண் தாயாக இருந்து மனிதனைப் பெற்றெடுத்து ஆளாக்குகிறாளோ மனைவியாக இருந்து களிப்பையும் மகிழ்வையும் அவனுக்கு அளிக்கிறாளோ, அதே பெண், பணிப்பெண்ணாக அல்ல, அடிமையாக ஆக்கப்படுகிறாள்.
விற்கவும் வாங்கவும் செய்யப்படுகிறாள். சொத்துரிமையும் வாரிசுரிமையும் அவளுக்கு அறவே தரப்படுவதில்லை, குற்றத்தின் வடிவாக, அவமானத்தின் உருவமாக அவள் கருதப்படுகிறாள். அவளுடைய தனித்துவமும் ஆளுமையும் வளர்ந்தோங்க எந்த விதமான விதமான வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை. ]
அறிவின் சிகரங்களையெல்லாம் எட்டிப் பிடித்து விட்டதாக என்னதான் மனிதன் மார்தட்டிக் கொண்டாலும், தன்னைப் பற்றிய பௌதிக உண்மைகளைக் கூட அவன் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும். மனித மூளை எவ்வாறு இயங்குகின்றது? என்பதைக்கூட அவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
மரபணுக்களின் செய்திப்பதிவை வெறுமனே வாசித்துப் பார்க்கும் முயற்சிகள் தாம் நடைபெற்று வருகின்றன. அப்படி இருக்கும் போது ஆன்மிக இருப்பையும் அதன் நோக்கங்கள், தேவைகளையும் அவனால் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும்? வரையறுக்கப்பட்ட, குறுகிய, குறைபாடுகள் கொண்ட மனித அறிவின் மூலம் தன்னிடம் உள்ள மிகக் குறைவான கல்வியின் மூலம் ஆன்மிக, ஒழுக்க நிலை குறித்த போதுமான ஞானத்தைப் பெற்றுக் கொள்வது சாத்தியமே இல்லை. வழி காட்டுதல், மறைக்கல்வி கண்டிப்பாக அதற்குத் தேவை.
மானுட சமூகத்தில் ஆண்பெண் இரு பாலரின் நிலை என்ன? அவர்களுக்கிடையேயான உறவு என்ன? என்பது தொடர்பான சிக்கல் இப்பேருண்மைக்கான எடுத்துக்காட்டு ஆகும், சமூக வாழ்வின் அடிப்படை ஆதாரமாக ஆண்பெண் உறவே அமைந்துள்ளது. சற்றேனும் விரிசல் இதில் ஏற்பட்டால் கூட எல்லாமே அடியோடு நிலைகுலைந்து விடும்.
ஆண்பெண் உறவு மனித வாழ்வில் எவ்வாறு அமைந்து வந்துள்ளது என்பதை நாம் வரலாற்றில் ஆராய்ந்து பார்த்தோமானால் ஒன்று அது முற்றலட்சியப் (Negligence) படுத்தப்பட்டு வந்துள்ளது. இல்லையென்றால் அதிதீவிர பக்கச் சார்பு (Exaggeration) உடையதாக இருந்துள்ளது, ஒரு பக்கம் எந்த பெண் தாயாக இருந்து மனிதனைப் பெற்றெடுத்து ஆளாக்குகிறாளோ மனைவியாக இருந்து களிப்பையும் மகிழ்வையும் அவனுக்கு அளிக்கிறாளோ, அதே பெண், பணிப்பெண்ணாக அல்ல, அடிமையாக ஆக்கப்படுகிறாள். விற்கவும் வாங்கவும் செய்யப்படுகிறாள். சொத்துரிமையும் வாரிசுரிமையும் அவளுக்கு அறவே தரப்படுவதில்லை, குற்றத்தின் வடிவாக, அவமானத்தின் உருவமாக அவள் கருதப்படுகிறாள். அவளுடைய தனித்துவமும் ஆளுமையும் வளர்ந்தோங்க எந்த விதமான விதமான வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னோரு புறம், அதே பெண் மேலுயர்த்தப்படுவதையும், ஊக்கப்படுத்தப்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால், தீயொழுக்கமும் முயைறகேடுகளும் சேர்ந்தே உயர்கின்றன. மிருக இச்சைகளின் போகப்பொருளாக அவள் ஆக்கப்படுகிறாள். உண்மையிலேயே அவள் ஷைத்தானுடைய ஏஜெண்ட் ஆக ஆக்கப்படுகிறாள். அவளுடைய உயர்வோடு மானுடத்தின் வீழ்ச்சியும் தொடங்கிவிடுகின்றது. கிரேக்க நாகரீகத்திலும், ரோமானியப் பேரரசிலும், பண்டைக்கால இந்தியாவிலும் பெண்கள் எப்படி எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள், அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களில் விரிவாகவே நாம் காணலாம்,கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய தத்துவயியலாளர்கள் சமூகத்தை எதிர்த்து தனிமனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கலாயினர்.
மனித ஆன்மாவை இயற்கைக்கு முரணான தளைகளால் இறுகிப்பிணைத்து, வளர்ச்சிக்கான அனைத்து கதவுகளையும் ஓங்கியறைந்து சாத்திவிட்டிருந்த கிறிஸ்துவ ஒழுக்கவியல், தத்துவம் மற்றும் பிற்போக்கு நிலமானிய முறை Fendel System அடிப்படையிலான ஒரு தவறான சமூக அமைப்பையே அவர்கள் எதிர்கொண்டனர். இவ்வமைப்பைத் தகர்த்து புதியதோர் அமைப்பைத் தோற்றுவிக்க நவீன ஐரோப்பிய சிற்பிகள் முன்வைத்த கோட்பாடுகளின் விளைவாக பிரெஞ்சுப் புரட்சி தோன்றியது. அதன்பின்பு மேற்குலகின் பண்பாடும் நாகரீகமும் தொடர் வளர்ச்சி கண்டு இன்று நாம் காணும் நிலையை அடைந்துள்ளது. அதன் அப்பட்டமான பிரதிபலிப்பை நம்முடைய இந்திய சமூக வாழ்விலும் நாம் கண்டு வருகிறோம்.
இந்நவீன யுகத்தின் தொடக்கத்தில் பெண்ணினத்தை முன்னேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக, சமூக அரங்கில் நல்ல பல விளைவுகள் தோன்றின. திருமணம், விவாக முறிவு போன்றவற்றில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய கடுமை குறைந்து போனது. ஒட்டு மொத்தமாக பறிக்கப்பட்டிருந்த பெண்களுக்கான பொருளியல் உரிமை திரும்ப வழங்கப்பட்டது. பெண்ணை இழிவான, கீழ்த்தரமான பிறவியாகக் கருதக் காரணமாயிருந்த ஒழுக்கவியல் கோட்பாடுகள் சீர்திருத்தப்பட்டன. பெண்கள் பணிப்பெண்களாக, அடிமைகளாக நடத்தப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்த சமூக நியதிகள் மாற்றம் பெற்றன.
ஆண்களைப் போன்றே பெண்களும் உயர் கல்வி, பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இத்தகு முயற்சிகளின் விளைவாக தவறான சமூக சட்டங்கள், அறியாமை மிகுந்த ஒழுக்கவியல் மரபுகளின் கீழ் அடங்கியொடுங்கிக் கிடந்த பெண்களின் திறமைகள் ஊக்கம் பெற்று எழுச்சியடைந்து வெளிப்படலாயின.
அவர்களால் இல்லங்கள் பொலிவடைந்தன. சமூகத்திற்கு சிறப்பையும் பொதுநலன்களுக்கான செயல்களில் தங்களுடைய பங்களிப்பையும் அவர்கள் வழங்கினர்.
நவீன பண்பாட்டின் விளைவாக ஆரோக்கியமான பொது நலனில் முன்னேற்றம், இளந்தலைமுறையினருக்கு சிறப்பான அருமையான பயிற்சி, நோயுற்றோருக்கான மருத்துவ சேவை, இல்லறக் கலையில் நுணுக்கம் போன்றவை துவக்க காலத்து பெண்களிடையே ஏற்றம் பெற்றன. ஆனால், இம்மாற்றங்களுக்கு எல்லாம் காரணமாயிருந்த கோட்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே அதி தீவிரத்தன்மை (Exaggeration) காணப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தன்மை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு இருபதாம் நூற்றாண்டை அடையும் போதே நடுநிலைமையைத் தாண்டி இன்னொரு மறுகோடி எல்லையை அடைந்து விட்டது.
மேலைச் சமூகத்தில் நிலை கொண்டுள்ள கோட்பாடுகளை மூன்று தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.
1. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை Equal Rights
2. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம். Economic Independence
3. இருபாலருக்கிடையிலான தடையற்ற கலப்பு.
இம்மூன்று அடிப்படைகளின் மீது சமூகத்தை கட்டமைப்பதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படவேண்டுமோ, அவை அப்படியே ஏற்பட்டது.
1. ஒழுக்க மதிப்பிலும், மனித உரிமைகளிலும் சமத்துவம் என்பதோடு சமூக வாழ்விலும் ஆணுக்கு நிகராக ஆணுக்கு உரிய வேலைகளை பெண்ணும் செய்ய வேண்டும் என்பதே சம உரிமை என்று புரிந்து கொள்ளப்பட்டது. எவ்வாறு ஒழுக்க விஷயங்களில் ஆண் மீதான கட்டுப்பாடுகள் முன்பிருந்தே தளர்த்தப்பட்டு வந்துள்ளனவோ, அவ்வாறே பெண்களுக்கும் தளர்த்தப்பட வேண்டும்.
சம உரிமை என்பது இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் பெண்களுக்குரிய இயற்தன்மைகள் எத்தன்மைகளின் மீது சமூகத்தின் இருப்பும், மனித இனத்தின் இருப்பும் நிலை கொண்டுள்ளனவோ அவை அலட்சியப்படுத்தப்பட்டன. புறக்கணிக்கப்பட்டன. பொருளாதர, அரசியல் மற்றும் சமூக வேலைப் பளுவானது அவளுடைய தனித்தன்மையை முழுமையாக உறிஞ்சிக் கொண்டது.
தேர்தல்களில் பங்கேற்பு, தொழிற்சாலை, அலுவலகங்களின் பணி, வணிகத்துறை, தொழிற்துறைகளில் தனித்து ஆண்களோடு போட்டி, விளையாட்டு, உடற்பயிற்சிகளில் கடும் முயற்சி, சமூகத்தின் மன மகிழ் நிகழ்வுகளில் மென்மையான பங்களிப்பு, கிளப்புகளிலும், மேடைகளிலும் நடனமும் நாட்டியமும், கல்லுர்ரிகளிலும் காம்ளெக்ஸ்களிலும் அழகு அணிவகுப்புகள், இன்னும் இவை போன்ற பல விஷயங்கள் சொல்ல இயலாத பல விஷயங்கள் அவள் மீது எந்த அளவு குவிந்து போயின என்றால் இல்லறக் கடமைகள், குழந்தை வளர்ப்பு, அவர்களுக்குரிய பயிற்சியளிப்பு, குடும்ப பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற பல விஷயங்கள் அவளுடைய செயல் திட்டத்திலிருந்தே வெளியேறி விட்டன. சிந்தையளவில் இவற்றை வெறுக்கக்கூடியவளாகவும் அவள் மாறிவிட்டாள்.
சமூகத்தின் அஸ்திவாரமாகக் திகழ வேண்டிய குடும்ப அமைப்பு மேலைநாடுகளில் இன்று சிதறி சின்னாபின்னமாகி விட்டது. இந்தியாவிலும் சிறுகச் சிறுக சீர்குலைந்து வருகின்றது. எங்கு அமைதி கொண்டால் மனித ஆற்றல் ஓய்வு பெற்று வளர்ச்சிக்கான வலிமையை திரட்டிக் கொள்ளுமோ அந்த குடும்ப வாழ்க்கை செயலளவில் செத்து விட்டது.
ஆண் பெண் உறவுக்கான முறையான வடிகாலாகிய திருமண பந்தம் சிலந்தி வலையை விடவும் பலவீனமாகி விட்டது. குடும்பக் கட்டுப்பாடு, கருக்கலைப்பு, மற்றும் சிசுக்கொலை போன்னறவற்றின் மூலம் இளைய தலைமுறை அழிக்கப்படுகின்றது, மட்டுப்படுத்தப்படுகின்றது. ஒழுக்கவியல், சமஉரிமை குறித்த தவறான புரிந்து கொள்ளல் காரணமாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் தீயொழுக்கம், துர்நடத்தைகளில் சம உரிமையை ஏற்படுத்தி விட்டது. ஆண்கள் செய்ய வெட்கப்படும் மானக்கேடான விஷயங்களைக் கூட பெண்களால் கூச்சமே இல்லாமல் செய்ய முடிகிறது.
2. பொருளாதார சுதந்திரம் ஆணிடமிருந்து தன்னிறைவு பெற்றவளாக பெண்ணை ஆக்கி விட்டது. ஆண் சம்பாதிக்க வேண்டும், பெண் வீட்டை நிர்வகிக்க வேண்டும் என்கிற நடைமுறை பழங்கதை ஆகிப்போய் இன்று ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும், வீட்டு நிர்வாகத்தை சந்தையிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்கிற புதிய நடைமுறை தோன்றி விட்டது. இந்த புரட்சிக்குப் பிறகு ஆணும் பெண்ணும் சேர்ந்து கட்டுண்டு வாழ பாலியல் தேவையைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லாமற் போய்விட்டது.
பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வது என்பதொன்றும் பெரிய காரியமில்லையே? அதற்குப் போய் ஏன் தேவையில்லாமல் கல்யாணம் கட்டிக் கொண்டு வீட்டுச்சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டு மாரடிக்க வேண்டும்?
எந்தப் பெண்ணால் தனியாகச் சம்பாதிக்க முடிகிறதோ, தன்னுடைய தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதோ, தன்னுடைய வாழ்வில் பாதுகாப்புக்கோ, பக்க பலத்துக்கோ பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையோ அவள் எதற்காக உடல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டும் ஓர் ஆணோடு சேர்ந்து வாழ வேண்டும்? எதற்காகத் தன் மீது ஏகப்பட்ட ஒழுக்க, சட்டக் கட்டுப்பாடுகளைச் சுமந்து கொள்ள வேண்டும்? ஒரு குடும்பப் பொறுப்புகளை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அதுவும் ஒழுக்கவியல் சமவுரிமையானது, பாலியல் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அவள் மீது இருந்து வந்த எல்லா வகையான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்து விட்ட போது! தன்னுடைய இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள எளிய, இலேசான வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொறுப்புகள், தியாகங்கள் நிறைந்த பழங்கால, மரபு சார்ந்த வழிமுறையை அவள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
சமயம் வெளியேறிய போதே குற்றம் பற்றிய கருத்தாக்கமும் போய்விட்டது. சமூகத்தைப் பற்றிய பயமும் அகன்று விட்டது. தீய நடத்தையை மேற்கொண்டால் இன்று சமூகம் பழிக்காது, விரும்பி ஏற்றுக் கொள்ளும். விரும்பத்தகாத விஷயம் குழந்தைப் பிறப்பு ஒன்றே! அதற்கும் ஈதடுப்பு முறைகள் ஏராளமாய் உள்ளன. அப்படியிருந்தும் கருதங்கிவிட்டால் கருக்கலைப்பு செய்து கொள்வதில் எந்தத் தப்பும் கிடையாது. அதிலும் தோல்வியடைந்துவிட்டால் பேசாமல் குழந்தையையே கொன்று விடலாம். முட்டுக்கட்டையாக (எஞ்சியிருக்கும் இயற்தன்மையான) தாய்மையுணர்வு குறுக்கிட்டால் குழந்தையைக் கொன்று போட மனம் வராவிட்டால் குழந்தைக்குத் தாயாக இருப்பதிலும் தவறொன்றும் கிடையாது. கன்னித்தாய்களைப் பற்றியும் தவறான உறவினால் விளைந்த குழந்தைகளைப் பற்றியும் எந்தளவுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்றால் சமூகம் அதனை ஒரு போதும் வெறுப்போடு பார்க்கவே செய்யாது. அப்படிச் செய்தால் இருண்டகால வழிமுறையைப் பின்பற்றும் பழியை அது சுமக்க நேரிடும்!
மேலையுலகின் சமூகவேர்களை அழித்துவிட்ட விஷயங்கள் இவை தாம்! இன்று எல்லா நாடுகளிலும் இலட்சக்கணக்கான பெண்கள் தனித்து வாழ்கிறார்கள். சுதந்திர இச்சையுணர்வில் அவர்களுடைய வாழ்க்கை கழிந்து கொண்டுள்ளது. தற்காலிகமான காதல் உணர்வில் சிக்குண்டு இவர்களில் பெரும்பாலோனோர் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு பாலியல் தேவை தவிர்த்து வேறு எந்தத் தேவையும் காரணமும் இல்லாமற் போனதால் அவர்களுடைய திருமணங்கள் நிலைத்திருப்பதேயில்லை.
ஒருவரையொருவர் சார்ந்திருக்கத் தேவையே இல்லாத கணவணும் மனைவியும் பரஸ்பர தொடர்பு, இணைந்திருத்தலுக்காக எந்தவிதமான விட்டுக் கொடுத்தலுக்கோ, உடன்படிக்கைக்கோ compromise க்கோ தயாராக இல்லை. கலப்பற்ற பாறியல் இச்சையுணர்வு சில நாட்களில் நீர்த்துப் போய்விடுகின்றது. அதன் பின்பு, ஒரு சாதாரண சின்னஞ்சிறு விஷயம் கூட, உடன்பாடில்லாத ஒரேயொரு காரியம் கூட பிரிவுக்குக் காரணமாகி விடுகின்றது. இதன் காரணமாக பெரும்பாலான திருமணங்கள் விவாக முறிவிலும், பிரிவிலும் சென்றே முடிகின்றன.
கருத்தடை, கருக்கலைப்பு, சிசுக்கொலை, முறையான பிறப்புகளில் குறை, முறையற்ற உறவுகளினால் பிறக்கும் குழந்தைகளின் அதிகரிப்பு போன்றன எல்லாம் பெரும்பாலும் இந்தக் காரணத்தினாலேயே நிகழ்கின்றன. தீயொழுக்கம், வெட்கங்கெட்ட செயல், பாலியல் நோய்கள் போன்றன அதிகரித்துக்கொண்டே செல்வதிலும் இக்காரணத்துக்கு பெரும் பங்கு உள்ளது.
3. ஆண், பெண் கலப்பானது (Mingling) பெண்களிடையே அழகை வெளிப்படுத்தல், நிர்வாணம் மற்றும் ஆபாசம் போன்றன அசாதரண முறையில் பரவ வழிவகுத்தது. ஏற்கனவே இயற்கையான முறையில் அதுவும் மிகுந்த வீரியத்தோடு ஆண் பெண்ணிடையே இருந்து வந்த பாலினக்கவர்ச்சி (Sexual Attraction) சர்வ சாதாரணமாக ஈரினத்தாரும் கலந்து பழகும் நிலையில் மேலும் வீரியத்தோடு வளர்ச்சியுற்றது. இத்தகைய கலப்பு காரணமாக எதிர்பாலினரை அதிகமதிகம் ஈர்க்கும் வகையில் Attractive ஆக நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற மனோபாவம் சமூகத்தில் இயற்கையாகவே தோன்றியது. ஒழுக்கவியல் கோட்பாடுகள் மாறிப் போய்விட்ட காரணத்தினால் இவ்வாறு நடந்து கொள்வது தவறாகவும் கருதப்படவில்லை. மாறாக, வெளிப்படையாக மனம் கவரும் வகையில் நடந்து கொள்வது ஆராதிக்கப்பட்டது. விளைவாக, அழகையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்துவது நாளடைவில் எல்லாவகையான வரம்புகளையும் உடைத்துக் கொண்டே சென்றது, செல்கின்றது. நிர்வாணத்தின் இறுதி எல்லைக்கே சென்று சேர்ந்து விடும்!
எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் ஆர்வம் பெண்ணிடம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது, வளர்ந்து கொண்டே செல்கிறது என்றால் நவீன நாகரிக நயத்தக்க ஆடைகள், அலங்காரங்கள், நறுமணப்பூச்சுகள், பவுடர்கள் என்று எதுவுமே போதவில்லை அவளுக்கு! வேறுவழியின்றி தன் உடைகளை விட்டே வெளியே வந்து விட்டாள் அவள்! இன்னொரு பக்கம் ஆண்களின் நிலையோ, எந்நேரமும் எப்பொழுதும் ஹல் மிம் மஜீத்? இன்னும் ஏதேனும் இருக்கின்றதா? (அல்குர்ஆன் 50:30) என்று கேட்டுக் கொண்டேயுள்ளனர். ஏனென்றால், உணர்ச்சிகளில் பற்றிக் கொண்ட தீ உடைகளைக் கழற்றக் கழற்ற தணிவதேயில்லை. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியவே செய்கின்றது.
இன்னும் அதிகமாக கழற்றிக்காட்டச் சொல்லித் தூண்டுகின்றது. பற்றியெரியும் இச்சைத்தீயை அடக்கித் தணிக்க எந்நேரமும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் நிம்மதியைத் தொலைத்து தீக்கிரையாக்கிக் கொண்டேயுள்ளனர். இந்த நிர்வாணப்படங்கள், அறைகுறை ஆடை விளம்பரங்கள், ஆடை உரி நடனங்கள், பாலுணர்வைத் தும்ண்டும் பத்திரிக்கைகள், நிர்வாண, கலப்பான ஆட்டபாட்டங்கள், சினிமாக்கள் இவையனைத்தும் என்னதான் செய்கின்றன? இவையனைத்தும் இந்தத் தீயை அணைக்கின்ற ஆனால், உண்மையில் கொழுந்து விட்டு எரியச் செய்கின்ற விஷயங்கள் ஆகும்! தவறான தீய சமூகம் இதைத்தான் தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டுள்ளது. தன் இயலாமையை மறைக்க அதற்கொரு பெயரையும் சூட்டியுள்ளது. கலை (Art).
இன்றோ நிலைமை படுமோசம். திரை அரங்குகளிலும், பத்திரிக்கை படங்களிலும், மேடைகளிலும் நாம் முன்பு பார்த்து வந்த இத்தகைய கண்றாவி கலைக் காட்சிகளையெல்லாம் இன்று வீதிகளிலும், கடைகளிலும் ஏன், காய்கறி வாங்கும் போதும் காண முடிகின்றது இந்தக் கரையான் வெகு வேகமாக நம் சமூகத்தின் உயிர் வலிமையை தின்று கொண்டுள்ளது. இக்கரையான் பிடித்த சமூகங்கள் ஒன்று கூட இன்று வரை மிஞ்சியதில்லை. வாழ்வின் முன்னேற்றம், மற்றும் வளர்ச்சிக்கென்று மனிதனுக்கு இயற்கை வழங்கியுள்ள எல்லா வகையான சிந்தனை, உடல் வலிமைகளையும் இது தின்று தீர்த்துவிடுகின்றது. மிகவும் வெளிப்படையான விஷயம் இது!
எந்த மக்களை நாலாபுறமும் இச்சைகள் சூழ்ந்துள்ளனவோ, எவர்களுடைய உணர்வுகள் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய தும்ண்டலை, புதிய இயக்கத்தை எதிர்கொள்கின்றனவோ, உணர்ச்சிகளை தூண்டியெழச் செய்யும் சூழலில் எவர்கள் சிக்சியுள்ளனரோ, நிர்வாணப் புகைப்படங்கள், பாலியல் காட்சிகள், வெப்சைட்டுகள், எம் எம் எஸ் (M M S) படங்கள், மனதை தயக்கும் காமக் களியாட்டப் பாடல்கள், காதல் கூத்துக்கள், நிலைமறக்கச் செய்யும் நடனங்கள் கள்வெறி கொள்ள வைக்கும் சினிமாக்கள், மனதைச் சுண்டியிழுக்கும் நடமாடும் உயிருள்ள காட்சிகள், சர்வ சாதாரணமாக எதிர்பாலினரை சந்திக்க வைக்கும் வாய்ப்புகள் போன்றவை எவர்களுடைய இரத்தத்தை எந்நேரமும் சூடாக கொந்தளிப்பு நிலையிலேயே வைத்துள்ளல்வோ ஆக்க வேலைகளுக்கும். படைப்புச் செயல்களுக்கும் இன்றியமையாத் தேவையான அமைதியையும், நிம்மதியையும், திருப்தியையும் அவர்களால் எங்கிருந்து தான் பெற முடியும்??
இக்கள் வெறி கொள்ள வைக்கின்ற சூழலிடையே ஒழுக்கத்துக்கும் சிந்தைக்கும் வலு சேர்ந்து வளர்த்தெடுக்கின்ற அமைதியான நிம்மதி மிகுந்த சூழல் அவர்களுக்கும் அவர்களுடைய இளந்தலைமுறையினருக்கும் எவ்வாறு கிட்டும்?
உணர்ந்து தெளிந்து கொண்டால் சரி! இல்லையென்றால் இச்சைகளின் தேவன் அவர்களை இழுத்து மூழ்கடித்து விடுவான். அவனுடைய வலையில் அகப்பட்ட பிறகு தப்பித்து வருவதென்றால் எப்படி?