மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விழுந்த சந்தேகப்புள்ளி
ஓட்டுப்போடும் வேலையை சுலபமாக்கினாலும், சில வாக்காளர்கள் மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விழுந்த சந்தேகப்புள்ளி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே மின்னணு வாக்குப் பதிவு முறையைத் தீவிரமாக விமர்சித்து வருகிற ஜெயலலிதாவிடமிருந்து இம்முறை, “இரட்டை இலை சின்னத்துக்கு பட்டனை அழுத்துனா, உதயசூரியன் சின்னத்துல லைட் எரியுது” என காரசார புகார். “பா.ம.க. தோற்றதற்கு எண்பது சதவீதம், வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான் காரணம்” என்று இப்போது கூடுதலாக ராமதாஸிடமிருந்தும் காட்டமான அறிக்கை. “ஆரம்ப கட்ட அறிவிப்புகளின்படி, விருதுநகர் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதத்தைவிட, வைகோ பெற்ற வாக்குகளின் சதவீதம் அதிகமாக இருந்தாலும், அவர் தோற்றது எப்படி?” என்ற சில கட்சிப்புலம்பல்கள் அடங்கவில்லை. “சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதில் இவ்வளவு குழப்பங்கள் ஏன்?” என்னும் கேள்விக்குப் பதிலே இல்லை. மொத்தத்தில் இந்தச் சம்பவங்கள் `நல்லவரா, கெட்டவரா?’ ரேஞ்சுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் பெருத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கின்றன.
அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, செல்போன் போல சாஃப்ட்வேர் சமாசாரம்தான். யாரேனும் விரும்பினால் மின்னணு வாக்குப் பதிவில் தங்களுக்குச் சாதகமாகக் குளறுபடிகளை ஏற்படுத்த முடியுமா என சாஃப்ட்வேர் வட்டாரத்தில் விசாரித்தோம். கிரெடிட் கார்டுகளைச் செயல்படுத்துவதற்கான சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணியில் 15 வருடங்களாக உள்ள இன்ஜினீயர் சேவியரிடம் கேட்டபோது, “எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை இயக்குறவங்க நெனைச்சா நிச்சயம் அதைத் தங்கள் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஆபரேட் பண்ண முடியும்.
முதலில் விழுகிற ஆயிரம் ஓட்டுக்கள் அந்தந்த சின்னங்களில் ஒழுங்கா பதிவாகும்படியும் அதற்குப் பிறகு ஆயிரம் ஓட்டுக்கள் நாம் விரும்புற சின்னத்துக்கு விழும்படியும் பண்ணலாம். ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கான பட்டனை ஆன் பண்றப்போ அதற்கு நேராக லைட் எரிகிற மாதிரி செட் பண்ணிட்டுகூட, அந்த ஓட்டை வேறு வேட்பாளருக்கு விழ வைக்க முடியும். தேர்தல் முடிகிற நேரத்தில் மெஷினை `லாக்’ பண்றதுக்கு முன்னால், ஒரு சின்னத்துக்குப் பதிவான ஓட்டுக்களை இன்னொரு சின்னத்துக்குப் பதிவான ஓட்டுக்களா மொத்தமாக மாத்தவும் முடியும். சுருக்கமா சொன்னா, சில இடங்களில் பெட்ரோல் பங்க் மீட்டர் அளவு சரியா காட்டினாலும், பெட்ரோல் குறைவாக ஊத்துற அதே கோல்மாலுக்கு எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷினும் அப்பாற்பட்டது இல்லை. தேர்தல் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி அந்த மெஷின்களை பரிசோதிக்குறவங்க கையில்தான் எல்லாமே இருக்கு!” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். நடந்து முடிந்த தேர்தல் அன்று பழுது பார்க்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை 203. புதிதாகத் தரப்பட்ட இயந்திரங்கள் 187. “தேர்தலுக்கு முன்னால் வேட்பாளருக்கான விதிமுறைகளைக் கண்காணிப்பதில் கறார் காட்டுகிற தேர்தல் ஆணையம் தேர்தல் அன்னிக்கு வோட்டிங் மெஷின்களின் பராமரிப்பில் இவ்வளவு அலட்சியம் காட்டலாமா?” என்று சில தொகுதிகளில் கேள்விகள் எழாமல் இல்லை.
ஒருவரின் ஓட்டு சரியான சின்னத்தில்தான் விழுந்துள்ளதா என அவர் தெரிந்துகொள்ள முடியாத மின்னணு வாக்குப் பதிவு ஓட்டுரிமைக்கே எதிரானது என்றும் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.
இயந்திரங்களோ, சீட்டுகளோ அவற்றைச் செயல்படுத்தும் மனிதர்களின் நேர்மை எல்லாவற்றையும் விட முக்கியம்..
மோசடி நடந்திருக்கிறது!
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இந்தியா முழுக்க பல இடங்களில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. நாடு முழுக்க குறைந்தபட்சம் 75 பாராளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி `தங்கள் கைவரிசையை’ காட்டி வெற்றி பெற்றுள்ளது. எலக்ட்ரானிக் மெஷின் பற்றிய என் ஆராய்ச்சியில் இன்னும் சில திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும்” என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி.
“எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை பயன்படுத்தலாமா என்று முதன்முதலா அமெரிக்கா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் யோசனை செய்துவிட்டு, ‘வேண்டாம்` என்று முடிவு செய்துவிட்டன. காரணம், `இதில் தில்லுமுல்லுகள் பண்ண சாத்தியம் உண்டு’ என்று அவர்களே தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். 1998-ல் நான் மதுரை பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நேரத்தில் ஊரில் எனக்கு ரொம்ப நல்ல பெயர். அடுத்த வருஷமே அதாவது, 1999-ல் தேர்தல் வந்தது. நான் மறுபடியும் போட்டியிட்டேன். தொகுதியில் இவ்வளவு நல்ல பெயர் வாங்கியும் தோற்றபோது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. காரணம், அந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முதலா எலக்ட்ரானிக் மெஷினை அறிமுகப் படுத்தினார்கள்.”
மொத்தமுள்ள 1500 வாக்குச்சாவடிகளில் ஐநூறு சாவடிகளில் எனக்கு ஒரு ஓட்டு, இரண்டு அல்லது சில இடங்களில் வாக்கே விழாமல் இருந்தது. ஒவ்வொரு பூத்திலும் என்னுடைய ஆட்கள் குறைந்தது 25 பேர் இருந்தார்கள். அவர்கள் ஓட்டுப் போட்டாலே அந்த ஐநூறு வாக்குச்சாவடியிலும் கணிசமா விழுந்திருக்கும்.
கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்களான என் மருமகன் சஞ்சய் சர்மா, மகள் கீதாஞ்சலி இருவரையும் அமெரிக்காவிலிருந்து வரவழைத்தேன். ஹைதராபாத் நிறுவனத்தில் தயாரான ஒரு எலக்ட்ரானிக் மெஷினை, அப்போதைய தேர்தல் கமிஷனர் கில் முன்பு கொண்டு வந்து அவர்கள் விளக்கம் தந்தார்கள். ஒரு `சிப்’பில் பாஸ்வேர்டு இல்லை. எப்ப வேணா மாற்றலாம். இதை நேரிடையா பார்த்துவிட்டு கில் ஒப்புக்கொண்டார்.
இரண்டு மாசம் முன்பு ஒரு பொதுத்துறை நிறுவன விஞ்ஞானி ஒருவர் சொன்னார்… `ஒரு `சிப்’பில் இரண்டு பாஸ்வேர்டு இருக்கலாம்’ என்று. இதற்கு அர்த்தம், மெஷினை ஓட்டுச் சாவடிக்கு அனுப்புவதற்கு முன்பே வேண்டியவர்களுக்குத் தேவையான ஓட்டுக்களை போட்டுவிட்டு பூட்டிவிடலாம். மெஷின் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பு வேறு பாஸ்வேர்டை பயன்படுத்தினால் பாதி வேலை முடிந்தது. வாக்குச்சாவடிக்கு அனுப்புவதற்கு முன் `0000 பார்’ என்று எல்லா வேட்பாளர்களுக்கு முன்பும் காட்டுவார்கள். ஓட்டுச் சாவடியில் எல்லோரும் வாக்களித்தபின்பு மெஷின் வாக்கு எண்ணும் இடத்திற்கு வருகிறது. ஒருநாள் கழித்து எண்ணும் நேரத்தில் முதல் பாஸ்வேர்டு தருவார்கள்.சோனியாவின் வெளிநாட்டு ஆலோசகர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ளனர். நான் சொன்ன இந்த தில்லுமுல்லை அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்கள். இதை நடைமுறைப்படுத்தியது, அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி
`ஜீரோ கிரைமில்’ மாட்டி ஜெயிலுக்குப் போனவர்கள்! அவர்கள். மேலிட உத்தரவுப்படி இங்கு வந்து இப்படி நிறைய மெஷினை ரெடி பண்ணியுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 130 சீட்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பே இல்லை. பின் எப்படி 206 வந்தது? தேர்தலன்று மதியம் மூன்றுவரை, 35 சதவிகிதம் வாக்குப்பதிவு என்பார்கள். ஐந்து மணிக்கு 65 அல்லது 70 சதவிகிதம் என்பார்கள். எப்படி சாத்தியம்? மெஷினில் ஒவ்வொருவரும் ஓட்டுப் போட்டவுடன், நாம் யாருக்கு ஓட்டுப் போட்டது என்பதை தெரிவிக்கும் ரசீதும் கூடவே வந்துவிட்டால் ஓரளவு தில்லுமுல்லுகளைத் தவிர்க்க முடியும்!” என்றார் சுவாமி..
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவைச் சந்தித்தோம். “தேர்தல் ஆரம்பிக்குறதுக்குக் கொஞ்சம் நேரம் முன்னாடி வோட்டிங் மெஷினின் சரியான செயல்பாட்டை எல்லா கட்சிக்காரர்களுக்கும் காட்டுறதுக்காக ஒரு சின்ன சாம்பிள் தேர்தல் (mock poll) நடத்துவோம். மெஷினின் ஆபரேஷனில் எல்லாரும் திருப்தி ஆன பிறகுதான் தேர்தலைத் தொடங்குவோம். ஒரு சின்னத்துக்கு பட்டனை அழுத்துனா இன்னொரு சின்னத்தில் லைட் எரிஞ்ச சம்பவம் எல்லாம் இந்த சாம்பிள் தேர்தலில் நடந்ததுதான்.அதை உடனே சரி செஞ்சாச்சு. ஒரு வேட்பாளர் சர்ச்சைக்குரிய முறையில் ஜெயிச்சதாகச் சொல்லப் படுற புகாரைப் பொறுத்தவரை, அந்தத் தொகுதிக்குப் பொறுப்பு வகிச்ச `ரிட்டர்னிங் ஆஃபீஸர்’ எனக்குத் தர்ற தகவலைத்தான் நான் சொல்ல முடியும்” என்ற நரேஷ் குப்தாவின் பேச்சில் எக்கச்சக்க கோபம்.
ஆபரேட் பண்றவங்க நினைச்சா…
தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து தேசிய அளவில் முக்கிய நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர் டெல்லியைச் சேர்ந்த ரவி விஸ்வேஸ்வரய்யா பிரசாத். ஐஐடி, கார்னகி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படித்த சாஃப்ட்வேர் நிபுணரான இவர் “எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷினுக்கு அதன் சாஃப்ட்வேரும் சர்க்யூட்டும்தான் அடிப்படை. மெஷினை ஆபரேட் பண்றவங்க நினைச்சா, சர்க்யூட் வடிவமைப்பு, டேட்டா பேஸ், சாஃப்ட்வேர் கோட் எல்லாவற்றையும் நம்ம விருப்பத்துக்கு ஏற்றபடி பயன்படுத்தி, தவறான ரிசல்ட்டைத் தர முடியும். பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாதபடி கூட தில்லுமுல்லு பண்ண முடியும்” என ஆணித்தரமாகச் சொல்கிறார்.