இறையருளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு..
[ எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து ‘வா!’ என்றாள். அதற்கவர் ”அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” எனக் கூறினார். திருக்குர்ஆன் 12: 23. ]
யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் சிறுவயதாக இருந்த பொழுது அவர்களுடைய தந்தை யாக்கூப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் அவர் மீது அதிகப் பிரியமுள்ளவராக இருந்தார்கள்.
இதை சகித்துக்கொள்ள முடியாத யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்களுடைய பிற சகோதரர்கள் அவரை அழைத்துச்சென்று கிணற்றில் இறக்கினார்கள்.
அவ்வழியே வந்தப் பயணிகளில் ஒருவர் தண்ணீருக்காக வாளியை கிணற்றில் விடவே கிணற்றுக்கடியிலிருந்து சிறுவர் யூஸூஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மேல்நோக்கி சப்தம் கொடுத்து அதை செவியுற்றப் பயணியின் மூலம் இறைவனின் பேருதவியால் வெளியே வந்து விடுகின்றார்கள்.
சிறுவர் யூஸூஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களை கிணற்றிலிருந்து வெளிக்கொண்டு வந்தப் பயணக்கூட்டம் எகிப்தில் ஒருவரிடம் அற்ப விலைக்கு விற்று விடுகின்றனர். அற்ப விலை கொடுத்து சிறுவர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்களை வாங்கியவர் தனது வீட்டில் வளர்க்கின்றார்.
சிறுவர் யூசுஃப்அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்ததும் அவர்களின் அழகின் மீது அவரின் மனைவி ஆசைப்பட்டு அவரை அடையத் துடிக்கின்றார்.
சிலர் (அதிகமானோர் அல்ல) இப்படித்தான் விளக்கொளியின் பிரசாசத்தில் விழும் விட்டில் பூச்சிகளைப் போன்று குணம், குலம், கோத்திரம், வயது வித்தியாசம் எதையும் தெரிந்து கொள்ளாமல் அழகில் மட்டும் மயங்கி விடுவார்கள்.
இவ்வாறு அவசரமாக மனதை பறிக் கொடுத்தவர்கள் அவசரமாக மானத்தையும் இழப்பதற்கு துணிந்த விடுவார்கள் ஏமாற்றப்பட்டதும் உயிரையும் மாய்த்துக் கொள்வார்கள். மிகச்சிலர் மட்டுமே இதில் விதிவிலக்காக இதை (மானமிழந்ததை) டேக் இட் ஈசி யாக எடுத்துக்கொள்வார்கள்.
இதில் பெரிய இடத்துப் பிள்ளைகள் செய்யும் சிஷ்மிஷன்கள் வெளியில் தெரிந்தால் பெரிய குடும்பத்து கௌரவம் காற்றில் பறந்து விடக்கூடாது என்பதற்காக எதிராளியை மாட்டிவிட்டு தப்பித்துக் கொள்வார்கள், அதற்காக முன்கூட்டியே சில திட்டங்களை செட்டப் செய்து வைத்துக் கொள்வார்கள். யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களின் அழகினால் கவரப்பட்டப் பெண்ணும் இதுப்போன்றதொரு மெகாசெட்டப்பை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தார்.
ஒருநாள் இன்று எப்படியாவது இவரை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து வாசல் கதவுகளையும் தாழிட்டு விட்டு வற்புருத்தத் தொடங்கினார் எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து ‘வா!’ என்றாள். … திருக்குர்ஆன் 12: 23
உடன் பிறந்தவர்களால் வஞ்சிக்கப்பட்டு பாலுங்கிணற்றில் வீசி எறியப்பட்டவரை வெளிக்கொண்டு வரச்செய்து அவர் வளர்ந்து ஆளாவதற்கு அழகிய தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஏகஇறைவனுக்கு நன்றி மறப்பதற்கும், இத்தனை வருடங்களாக வளர்த்தெடுத்த தனது எஜமானனுக்கு அநீதியிழைப்பதற்கும் துணிய மறுத்த யூசுஃப் (அலை) அவர்கள் முதலில் இறைவனிடம் பாதுகாப்புக் கோரி விட்டு அந்தப் பெண்ணுடைய மனதை மாற்றி விடுவதற்காக அந்த நேரத்தில் அழகிய சொற்களைக் கொண்டு உபதேசம் (தஃவா) செய்கின்;றார்.
இன்று நாம் பார்க்கின்றோம் ஹவுஸ் பாய், ஹவுஸ் டிரைவர், போன்றவர்களை தொழிலாளியாகப் பார்க்காமல் உறவினர் போல் கருதி தங்களுடைய வீடுகளில் குடியமர்த்திக் கொள்ளும் எஜமானர்களுடைய வீடுகளில் இதுபொன்றதொரு வெறுக்கத்தக்க சம்பவம் நிகழுமானால் நான் என் இறைவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன், என் எஜமானனுக்கு அநீதியிழைக்க விரும்பவில்லை என்றுக் கூறி யாராவது விலகிக் கொள்கின்றனரா ? இதை விடக் கொடுமை அங்கே ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் கூட நடந்ததைப் போன்று வெளியில் வந்து தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களையேப் பார்க்கின்றோம். இறையச்சமும், மறுமை நம்பிக்கையும் அற்றுப் போனதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்கள் செய்த உபதேசத்தை அந்த நேரத்தில் அந்தப் பெண்ணால் ஜீரணிக்க முடியவில்லை அதனால் அவைகளைப் புறக்கனித்து விட்டு அவரை மயக்கும் கலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
பெண்கள் பருவம் அடைவதற்கு முன்னரே முடிந்தளவு ஏக இறைவனின் ஏவல் – விலக்கல் சட்டங்களை எத்தி வைத்து விடவேண்டும் முத்தி விட்டால் எத்தி வைப்பது எடுபடாமல் போய்விடலாம் என்பதற்கு மேற்காணும் யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களை விடாமல் விரட்டிய அந்தப் பெண் ஒருக்கெட்ட உதாரணமாகும்.
யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்கள் செய்த உபதேசங்கள் எடுபடாமல் போனதுடன் நேரம் ஆக ஆக அவர்களுடைய மனநிலையில் அப்பெண்ணின் மயக்கும் கலைகளால் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார்… பெரும்பாலும் இப்படி நடக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன காரணம் அன்னிய ஆண் – பெண் இருவர் தனித்திருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுடன் ஷைத்தான் மூன்றாவதாகி விடுவான். என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் (திர்மிதீ 1091)
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் மட்டுமே அனைத்து விதமான குற்றங்களுக்கும் அப்பாற்பட்டவன் சாதாரண மனிதர்களிலிருந்து, அவனுடையத் தூதர்கள், நேசர்கள் வரை அனைவரும் தவறிழைக்கக்கூடியவர்களே அல்லாஹ் நாடினால் மட்டுமே அவனுக்கு விருப்பமானவர்களை பாவத்தில் நெருக்கி வைக்கும் குற்றச் செயலிலிருந்து காப்பாற்றுவான்.
யார் அவனுக்கு விருப்பமானவர்கள் ?
இத்துடன் முடிந்து விட்டது இனிநடக்கப் போவது ஒன்றுமில்லை என்ற அதிருப்தி அடையாமல் துன்பமே நிகழப்போகின்றது என்று உறுதியாகத் தெரிந்தாலும் இறைவன் எம்மைக் காப்பாற்றுவான் இறைவன் எமக்குப் போதுமானவன் என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோருபவர்கள்.
இங்கில்லை என்றாலும் இதற்காக இருமடங்கு நன்மையை மறுமையில் தருவான் என்ற மனவலிமை மிக்கவர்கள் அவனுக்கு விருப்பமானவர்கள் !
இப்படிப்பட்ட இறைநம்பிக்கையாளர்கள் ஒருநாள் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்வதற்கு தயாராகும் போது, அல்லது செய்வதறியாது திகைத்து நிற்கும்போது அவர்கள் சரியான முடிவை மேற்கொள்வதற்காக உள்ளுணர்வை ஏற்படுத்தி இறைவன் அதிலிருந்து தப்பிக்கச் செய்து விடுவான். தன்னை அஞ்சி நல்லறங்கள் செய்வோருடனே அல்லாஹ் இருக்கிறான். அவள் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 16:128
யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களை அப்பெண் தவறான வழிக்கு அழைத்ததும் இன்று நாம் தொலைந்தோம் இவளுடையப் பிடியிலிருந்து தப்பிப்பது சிரமம் என்று நினைத்து அவநம்பிக்கை அடையாமல் ”அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோரினார்கள்.யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்கள் பாதுகாப்புக் கோரியப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இன்னும் சிறிதே நேரத்தில் யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களுடைய எஜமானர் வீட்டுக்கு வரவிருப்பதையும், மேற்படி விஷயத்தில் மாட்டிக் கொண்டால் பழியை யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மீதேப்போட்டு விடுவது என்று அப்பெண் முடிவு செய்து வைத்திருந்ததையும் முன்கூட்டியே அறிந்திருந்ததால் தனது அத்தாட்சியை யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு காண்பிக்கச் செய்து அதிவேகத்தில் அங்கிருந்து அவரை இறைவன் ஓடச்செய்து விடுகின்றான், அவர் ஓடத் தொடங்கியதும் அப்பெண்ணும் அவரைப் பின் தொடர்ந்து ஓடி அவருடைய சட்டையைப் பிடித்து இழுக்க சட்டைக் கிழிந்து விடுகிறது.இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள்…… (திருக்குர்ஆன் 12:25 அப்பெண்ணிடமிருந்து தப்பித்து ஓடியவர் வெளியில் ஓடுவதற்காக வாசலை நெருங்கிய பொழுது அவருடைய எஜமானன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து விடுகிறார் 12:25 அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர்…. திருக்குர்ஆன் 12:25
மாட்டிக் கொண்டால் இவரையே மாட்டி விடுவது என்று ஏற்கனவே அப்பெண் திட்டமிட்டிருந்தப்படி தனது கணவனை கண்டதும் உடனே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ”பிடியுங்கள் அவரை நீங்கள் இல்லாதபோது என்னை மானபங்கப் படுத்த முயற்சித்ததற்காக சிறையில் அடைத்து சித்ரவதை செய்ய உத்தரவிடுங்கள்” என்று கர்ஜிக்கின்றார் . ”உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள். (திருக்குர்ஆன் 12:25)
அப்பெண்ணை விட்டு அவர் ஓடுவதில் சிறிதேனும் காலதாமதமாகி இருந்தால் எஜமானனுடைய பார்வையில் யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களே குற்றவாளியாக தெரிந்திருப்பார்கள் ஏன் என்றால் இவர் தான் என்னைக் கட்டாயப்படுத்தினார் என்று அப்பெண் கூறினால் அதுவே எடுபடுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
யூசுஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவரது எஜமானன் உறுதிபடுத்திக் கொள்வதற்காக இறைவன் அவரது சட்டையின் பின்புறத்தை அப்பெண்ணின் கைகளில் சிக்கி கிழியச்செய்து விடுகிறான். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது,”இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது” என்றார். திருக்குர்ஆன் 12:28
நடந்து முடிந்த வெறுக்கத்தக்க நிகழ்வுக்கு யார் காரணம் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட அவரது எஜமானர் அவரை நிரபராதி என்றுக் கூறி விட்டு தமது மனைவியின் சூழ்ச்சியை எடுத்துக்கூறி இறைவனை பயந்துகொள்ளும் படி உபதேசிக்கின்றார். ”யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!” (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்). திருக்குர்ஆன் 12:29
துன்பமே நிகழப்போகின்றது என்று உறுதியாகத் தெரிந்தாலும் இறைவன் எம்மைக் காப்பாற்றுவான் இறைவன் எமக்குப்போதுமானவன் என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோரிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் பொறுப்பேற்றுக்கொள்வான் என்பதற்கு மேற்காணும் இறைநம்பிக்கையாளராகிய யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் தனது அருளால் அவர் மீதுப் பாவக்கரைப் படிவதற்கு முன் மீட்டெடுத்தச் சம்பவம் இறையருளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார். திருக்குர்ஆன் 12: 24.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
-“Jazaakallaahu khairan” அதிரை ஏ.எம்.பாரூக்