எண்ணமே முகவரி
டாக்டர் அ. ஜாஹிர் ஹுஸைன் பாகவி
[கட்டுரையாசிரியர் சென்னை பல்கலைக் கழகத்தில் “டாக்டர்” பட்டம் பெற்ற முதல் பாகவி ஆவார்.]
எண்ணங்களை தூய்மைப்படுத்தாமல் புண்ணியங்கள் செய்வதால் பலன் ஏதும் இல்லை. எண்ணங்கள் தூய்மையானால் எல்லாமே துலங்கும்.
நல்ல எண்ணமும் உளத்தூய்மையும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் அடிப்படையானவை ஆகும். இவ்வுலக வாழ்க்கை மட்டுமின்றி, மறு உலக வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமைவதற்கு இவைதான் அடித்தளமாகும்.
இவ்விரு தன்மைகளும் மனிதனை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். தனி மனித வாழ்வும் சமூகமும் சீர்பெற வேண்டுமென்றால் இத்தன்மைகள் மனிதனை ஆள வேண்டும். இவற்றின் அடித்தளத்தில் அமைக்கப்படாத அறப்பணிகளும், அறிவுரைகளும் அர்த்தமற்றவையே!
இதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன” (நூல்: புகாரி, முஸ்லிம்)
“உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீரடைந்து விட்டால் முழு உடலும் சீரடைந்து விடும். அது சீரழிந்து விட்டால் முழு உடலும் சீரழிந்து விடும். அறிக! அதுதான் இதயம்.” (நூல்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஒருவர் எண்ணத்தை பொருத்தே அல்லாஹ் அவரை நல்லவராகவோ கெட்டவராகவோ தீர்மானிக்கின்றான். “உங்கள் உடல்களையோ உருவங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே அவன் பார்க்கின்றான்” என மற்றொரு நபிமொழி சுட்டிக்காட்டுகிறது. (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
எதார்த்தத்தில் நல்லவன் தன்னை நல்லவன் என்று விளம்பரப்படுத்த மாட்டான்.
அவ்வாறு விளம்பரப்படுத்துபவன் நல்லவன் அல்லன்.
நல்லவன் பிறரைக் கெட்டவனாகக் கருதமாட்டான். அவ்வாறு கருதினால் அவன் நல்லவன் அல்லன்.
நல்லவன் கெட்டவனைக்கூட கெட்டவனாக பார்க்க மாட்டான்.
நல்லவன் தனக்கும் பிறருக்கும் அறிவுரை கூறுவான். பிறருக்கு மட்டும் அறிவுரை கூறுபவன் நல்லவன் அல்லன்.
பிறருக்கு அறிவுரை கூறுபவனெல்லாம் நல்லவனும் அல்லன்.
ஒருவன் வழிபாடுகளிலும், அறப்பணிகளிலும் ஈடுபடுவதால் மட்டும் நல்லவன் ஆகிவிட மாட்டான். அவன் அவனது மனத்திலும் அல்லாஹ்வின் பார்வையிலும் நல்லவனாக ஆக வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார். அவர் அல்லாஹ்விடம்; கொண்டு வரப்படும்போது அவருக்கு தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை அல்லாஹ்; எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். (அதற்கு) அவர், (இறஇவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரை தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார். (அதற்கு) அல்லாஹ், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை) மாறாக, ‘மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதை பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (அல்லாஹ்விடம்) கொண்டு வரப்படுவார். அவருக்கு தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை அல்லாஹ் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு ‘அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’ என்று அல்லாஹ் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று பிறருக்கும் அதைக் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார். அதற்கு அல்லாஹ், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை, கற்பிக்கவுமில்லை). ‘அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்: ‘குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படவேண்டும் என்பதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு அவரும் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு அல்லாஹ்;; தாராளமான வாழ்க்கை வசதிகளும், அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரும் செல்வந்தர் ஒருவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அவருக்கு, தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை அல்லாஹ் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டு விடாமல் அனைத்திலும் உனக்காக நான் எனது பொருளை செலவிட்டேன்” என்பார். அதற்கு அல்லாஹ், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். ‘இவர் ஒரு புரவலர்’ என்று (மக்களிடையே பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது எண்ணம் நிறைவேறி விட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைப்படி அவரும் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் வீசி எறியப்படுவார். (அறிவிப்பாளர்: அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
எனவே எண்ணங்களை தூய்மைப்படுத்தாமல் புண்ணியங்கள் செய்வதால் பலன் ஏதும் இல்லை. எண்ணங்கள் தூய்மையானால் எல்லாமே துலங்கும்.
நன்மை செய்பவரெல்லாம் நல்லவர் அல்ல. தீயவனால்கூட சமூகத்துக்கு நன்மை ஏற்படலாம். சுமூகத்துக்கு பலன் கிடைப்பதால் தீயவன் நல்லவன் ஆகிவிட முடியாது. “தீயவனால் கூட இந்த மார்க்கத்தை அல்லாஹ் வலுப்படுத்துவான்” (நூல்: புகாரி) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.
எனவே சமூகப் பணிகளிலும், பிற அறப்பணிகளிலும் ஈடுபடுவோர் தூய எண்ணத்துடனும், உளச்சுத்தியுடனும் செயல்பட வேண்டும். தவறு செய்வோரைப்பார்த்து பரிதாபப்படுவதற்கு முன்பு நம் மீது நாம் பரிதாபப்பட வேண்டும். ஒருவனை நல்லவன் அல்லது தீயவன் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் அவன் உள்ளங்களைப் பார்க்கிறான். உள்ளங்களை அறிபவன் அவன் மட்டுமே. எனவே தான், மக்களின் பார்வையில் நல்லவனாகத் தெரிபவன் அல்லாஹ்வின் பார்வையில் தீயவனாகத் தெரியலாம். மக்களின் பார்வையில் தீயவனாகத் தெரிபவன் அல்லாஹ்வின் பார்வையில் நல்லவனாகவும் இருக்கலாம். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதை அவன் ஒருபோதும் விருமபுவதில்லை.
ளம் ளம் இப்னு ஜவ்ஷ் அல்யமாமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது, அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் என்னிடம், “யமாமீ! நீங்கள் எவரிடமும், ‘அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்’ என்றோ அல்லது ‘அல்லாஹ் உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டான்’ என்றோ கூறாதீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நான், “எங்கள் சகோதரர்களிடமும் நண்பர்களிடமும் கோபத்தில் கூறுகின்ற சாதாரண வார்த்தைகள்தானே இது!” என்று கேட்டேன்.
அதற்கு அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அன்ஹ¤ அவர்கள், “நீங்கள் அவ்வாறு கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘இஸ்ரவேலர்களில் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்போதும் வழிபாட்டிலேயே மூழ்கியிருந்தார். மற்றொருவர் வீணான பாவச்செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அவ்விருவருமே நண்பர்கள். வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அந்த மனிதர் தம் நண்பர் பாவம் செய்வதைப் பார்க்கும் போதெல்லாம், ‘இன்ன மனிதரே! பாவம் புரிவதைக் குறைத்துக்கொள்’ என்று கூறுவார். அதற்கு அவர் (பாவம் புரிபவர்) ‘எனக்கும் என் இறைவனுக்கும் இடையே உள்ள விஷயத்தில் நீ தலையிடாதே. என்னை விட்டுவிடு. நீ என்ன என்னை கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா?’ என்று கேட்டார்.
ஒருநாள் அந்த வழிபாட்டாளர் தாம் பெரும் பாவமாக கருதிய ஒரு பாவத்தை அவருடைய நண்பர் செய்வதைப் பார்த்தபோது, “உனக்கு கேடுதான்! பாவம் புரிவதைக் குறைத்துக்கொள்’ என அவரிடம் (கடுமையாகக்) கூறினார். அதற்கு அவருடைய நண்பர், ‘எனக்கும் என் இறைவனுக்கும் இடையே உள்ள விஷயத்தில் நீ தலையிடாதே. என்னை விட்டுவிடு. நீ என்னை கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா? என்று (இம்முறையும்) கேட்டார். அப்போது அவர் (வணக்கசாலி). ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்’ என்றோ ‘உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டான்’ என்றோ கூறினார்.
பின்னர் அல்லாஹ் வானவரை அனுப்பி அவ்விருவரின் உயிரையும் கைப்பற்றினான். விசாரணைக்காக அவர்கள் அல்லாஹ்விடம் வந்தபோது பாவம் புரிந்தவரிடம், ‘எனது கருணையால் நீ சொர்க்கத்துக்குச் செல்’ என அல்லாஹ் கூறினான். வழிபாட்டாளாரிடம், ‘(பாவம் புரிந்த அவரை நான் மன்னிக்க மாட்டேன், சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என்பது) உனக்கு தெரியுமா? என் அதிகாரத்தில் தலையிடும் ஆற்றல் உனக்கு உண்டா?’ என்று கேட்டுவிட்டு, (வானவர்களிடம்) ‘இவரை நரகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினான்.
பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (இந்த) அபுல் காசிமின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக அவர் தமது இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் அழிக்கின்ற வார்த்தையைச் சொல்லி விட்டார். (நூல்: முஸ்னது அஹ்மத்)
ஒருவர் நல்லவர் என்பதற்கு அவருடைய நற்செயல்கள் ஓர் அடையாளமே தவிர, அதுவே முகவரி அன்று. எண்ணமே அவரது உண்மையான முகமும் முகவரியும் ஆகும். அதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எனவே தூய எண்ணத்துடனும் உளச்சுத்தியுடனும் நற்செயல்கள் புரிவோர்தாம் வெற்றி பெறுவர். அந்த வெற்றியாளர்கள் கூட்டத்தில் அல்லாஹ் நம்மனைவரையும் சேர்த்தருள்புரிவானாக! ஆமீன்.
நன்றி: சிந்தனை சரம்