(Don’t miss it)
மனித வடிவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்!
ஒரு நாள் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலை முடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை.
அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் கைகளை அவர்களின் தொடைகள் மீது வைத்தார். முஹம்மதே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறும் எனக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நீ சாட்சியம் அளிக்க வேண்டும்.
இன்னும் தொழுகையை நீ நிலைநாட்ட வேண்டும். மேலும் ஜகாத் வழங்க வேண்டும்.
ரமளானில் நோன்பு நோற்க வேண்டும். வசதி இருந்தால் கஅ;பா ஆலயத்திற்குச் சென்று நீ ஹஜ் செய்ய வேண்டும்.
இந்தச் செயல்களே இஸ்லாம் ஆகும்.”
அதற்கு அந்த மனிதர், ”நீர் உண்மையே உரைத்தீர்” என்றார். அவர் கேள்வியும் கேட்கிறார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கூற்றை மெய்யானது என்று உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியந்தோம்.
பிறகு அவர், ஈமான் – நம்பிக்கை பற்றி எனக்கு அறிவித்துத் தாரும் எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “இறைவன் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் மறுமை நாள் மீதும் நல்லது கெட்டது விதியில் எழுதப்பட்டுவிட்டன என்றும் நீர் நம்பிக்கை கொள்வதாகும் ஈமான் என்பது”.அதற்கு அந்த மனிதர் ”நீங்கள் உண்மையே உரைத்தீர்” என்றார். பிறகு அவர், “இஹ்ஸான்” பற்றி எனக்குக் கூறும் என்றார்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “இஹ்ஸான்” என்றால், நீர் அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வோடு அவனை வணங்குவதாகும். அவ்வாறு நீர் அவனைப் பார்ப் பது போல் வணங்க முடியாவிட்டால், அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் (எனும் உறுதியான உணர் வோடு அவனை வணங்க வேண்டும்)”
வந்தவர் மீண்டும் – ”எனக்கு மறுமை நாளைப் பற்றிக் கூறும்” என வினவினார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவரல்லர்.”பிறகு அவர் “மறுமை நாளின் அடையாளங்கள் பற்றிச் சொல்லும்” என்றார்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”மறுமை நாளின் அறிகுறிகள் இவையே: அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகள் அணியாத, (அரை) நிர்வாணமாகத் திரியக் கூடிய, ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் தரித்திரர்கள் பெரிய பெரிய மாளிகைகளில் இருந்து பெருமை அடித்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்.”
பிறகு அந்த மனிதர் சென்றுவிட்டார். நான் வெகு நேரம் அப்படியே இருந்தேன். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி, உமரே! இப்பொழுது வந்து சென்றவர் யார் என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இறைவனும் அவன் தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள் எனக் கூறினேன்,
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”அவர்தான் ஜிப்ரீல். உங்களுக்கு உங்கள் தீனை- இறைமார்க்கத்தைப் போதிக்கவே உங்களிடம் அவர் வந்திருந்தார்.” (நூல்: முஸ்லிம்)