கேட்டதும், கிடைத்ததும்
உலகியல் வாழ்க்கையில் நாம் விரும்பியவை எல்லாம் நமக்குக் கிடைத்துவிடுவது இல்லை.
நாம் ஒன்றை அடைய விரும்புகின்றோம்; அதற்கு பதிலாக வேறு ஒன்று கிடைக்கிறது.
ஆனால், பல சூழ்நிலைகளில் நமக்குக் கிடைத்த, நாம் விரும்பாத ஒன்றுதான், நாம் விரும்பியும் அடைய முடியாமல் போன ஒன்றைவிடச் சிறந்ததாக அமைந்து விடுகிறது.
இது, பலரும் அனுபவ ரீதியாக அறிந்திருக்கக் கூடிய ஒரு வாழ்வியல் உண்மை.
இந்த வாழ்வியல் உண்மையை, ஒரு சுவையான உவமை மூலமாக சங்கப் புலவர் ஒருவர் உணர்த்துவதைக் காண்கிறோம்.
ஒரு கணவன், தன் மனைவியைத் தனிமையில் வருந்தும்படி விட்டுவிட்டுப் பிரிந்து செல்கிறான். மீண்டும் அவன் இல்லத்திற்கு வரும்போது, அவனிடம் பொய்யான கோபத்துடன் இருக்கும் அவனது மனைவி அவனிடம் பேச மறுக்கிறாள். என்றாலும், இல்லத்தில் இருக்கும் தனது தோழியிடம் பேசுவது போலப் பேசித் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாள்.
எளிதில் தீர்ப்பதற்கு இயலாத அரிய நோயை அடைந்தவர்களுக்கு – மருத்துவர், நோயுற்றவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைத் தரமாட்டார். அதற்கு மாறாக, நோயுற்றவர் விரும்பவில்லை என்றாலும், நோயை முழுவதும் குணப்படுத்துவதற்கு எது தேவையோ அதைத்தான் கொடுப்பார்.
அதுபோல, எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எனது தந்தை எனக்கு வளையல் வாங்கித் தருவதாகக் கடைவீதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, நன்கு ஒளி வீசக்கூடிய அழகான வேலைப்பாடு அமைந்த வளையல் ஒன்றை நான் தேர்ந்தெடுத்தேன்.
ஆனால் தந்தை அதை வாங்கித்தர மறுத்துவிட்டார். நான் அழுது அடம்பிடித்தேன். அப்போதும் அதை வாங்கித்தர மறுத்துவிட்டார். காரணம், அது அளவில் சற்றே பெரியதாக இருந்தது. எனவே அளவில் அதைவிட சிறியதான வளையல் ஒன்றை வாங்கித் தந்தார்.
அதற்குரிய காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போதுதான் புரிகிறது. எனது வளையல் அளவில் சிறியதாக இருப்பதால்தான், எனது கணவர் என்னைவிட்டுச் சிலகாலம் பிரிந்து இருந்தபோது, பிரிவுத் துன்பத்தால் நான் மெலிந்துபோன போதும்கூட என் வளையல்கள் தானாகவே கழன்று கொள்ளாமல் இருக்கின்றன.
கணவர் என்னைவிட்டுச் சிலகாலம் பிரிய நேரிடலாம் என்பதையும், அதன் காரணமாக வரும் பிரிவுத் துன்பத்தால் நான் மெலிந்துபோக நேரிடும் என்பதையும் நினைத்துத்தான் எனது தந்தை அன்று அளவில் சிறிய வளையல்களை வாங்கிக் கொடுத்தார் போலும். அதனால்தான் நான் விரும்பியதை வாங்கித் தராமல் எது எனக்கு ஏற்றதோ அதை வாங்கித் தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இத்தகைய மதி நுட்பம் வாய்ந்த எனது தந்தை பல்லாண்டு காலம் வாழ்வாராக! என்று கணவன் மீது இருந்த பொய்யான கோபத்தால் தோழியிடம் கூறுவது போல கூறுகிறாள் மனைவி.
நோயுற்றவர்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர், நோயுற்றவர் விரும்பியதைக் கொடுக்காமல், நோயைத் தீர்க்க எது தேவையோ அதைக் கொடுக்கும் செயலை, தனது மகள் விரும்பியதை மறுத்து, வேண்டியது எதுவோ அதைப் பெற்றுத் தரும் அறிவும், அனுபவமும் உடைய தந்தையின் செயலுக்கு உவமையாகக் கூறியிருக்கும் நற்றங்கொற்றனார் என்னும் சங்கப் புலவர் பாடியிருக்கும் நற்றிணைப் பாடலின் (136) நயம் படித்து இன்புறத்தக்க இலக்கியச் சுவையாகும். அப்பாடல் வருமாறு:
“திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே! பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப் பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள்பழி அமைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந்தொடி செறிஇயோளே”
இரா.அன்பழகன்
நன்றி: தினமணி