بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
2:30
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلاَئِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الأَرْضِ خَلِيفَةً قَالُواْ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لاَ تَعْلَمُونَ
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், நம்தந்தை ஆதம்[அலை] அவர்களையும் அவர்கள் மூலமாக இதுவரை வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, இனி பிறக்கவிருக்கிற அத்துணை மாந்தரையும் அவனது பிரதிநிதிகளாக இவ்வுலகில் அனுப்பி, நமக்கு வாழ்வின் இலக்கணங்களை கற்றுத்தருவதற்காக நபி மார்களையும் தொடர்ச்சியாக அனுப்பி இறுதியாக மரணம் என்றொரு முடிவையும் அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான். அந்த இறுதி முடிவான மரணத்தை நாமாக தேடிக்கொள்வதற்கு அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட மரண நேரத்தை அல்லாஹ் தீர்மானித்துள்ளான். அந்த நேரம் வரும்வரை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இவ்வுலகில் வாழ்ந்துதான் தீரவேண்டும். ஆனால் இன்று நாம் பார்த்தோமானால் ‘தற்கொலை’ செய்துகொள்வது பேஷனாகி விட்டது. தற்கொலைக்கான காரணங்களாக உள்ளவைகளை பார்த்தால் அற்பமானவைகளாக இருப்பதை காணலாம்.
தற்கொலைக்கான காரணிகள்
1. கடன்தொல்லை;கடன் வாங்குபவர்கள் அவசியத்தேவைக்கன்றி கடன் வாங்குவதை நிறுத்திக்கொள்வதன் மூலமும், இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ பழகிக்கொண்டாலே கடன் காணாமல் போகும். கடன் வாங்கி பிரியாணி சாப்பிடுவதைவிட, கடன் இல்லாத கஞ்சி சிறந்தது நிம்மதியானது எனபதை விளங்கிக்கொள்ளவேண்டும். ஒருவேளை அவசியத்தேவைக்காக் கடன் வாங்கும் நிலை வந்தாலும், அக்கடனை அடைக்கமுடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக உயிரை விட்டுவிடக்கூடாது. ஏனெனில், கடன் இன்றல்ல நாளை சம்பாதித்து கட்டிவிடலாம் ஆனால், உயிரை இழந்துவிட்டால் திரும்பவராது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
2. வரதட்சனை கொடுமை;தினந்தோறும் பத்திரிக்கையில் ஒரு வரதட்சனை கொடுமை தற்கொலை பற்றிய செய்தி இடம்பெறாத நாள் இல்லை என்னும் அளவுக்கு ஆண்டுதோறும் வரதட்சனை தற்கொலைகள் இந்தியாவில் பெருகிவருவதாக ஆய்வறிக்கைகள் கூறிவரும் நிலையில், வரதட்சனை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட எத்துனை சட்டங்கள் போட்டும் தடுக்கமுடியாத இந்த வரதட்சனை விஷயத்தை அல்லாஹ் ஒரு வரி கட்டளையில் தடுத்து நிறுத்துகிறான்;
4:4
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
முஸ்லிம்கள் இந்த வசனத்தை கடைபிடித்தால் வரதட்சனையும் இருக்காது. வரதட்சனை தற்கொலைகளும் இருக்காது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
3. காதல் தோல்வி; தற்கொலையில் பிரதானமான இடத்தை வகிப்பது காதல்தோல்வி தற்கொலைகள்தான். காதல்தோல்வி என்பது சற்று தாங்கமுடியாத இழப்புதான். ஆனாலும் அதற்காக உயிரை விடுவது என்பது முட்டாள்தனமானது. ஏனெனில், ஒரு முஸ்லிமுக்கு தன்னுடைய காதலியையும் தாண்டி, பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகள் உற்றார்-உறவினர்கள், சமுதாயத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் உண்டு. இதையெல்லாம் புறம்தள்ளி நேற்றுவந்தவளுக்காக உயிரைவிட்டால்செய்யத்தவறிய கடமைகளுக்காக இறைவனின் நீதிமன்றத்தில் பதிலளிக்கவேண்டும். மேலும், நாம் விரும்பும் பெண்ணைவிட நம்மை விரும்பும் பெண் சிறந்தவள் என்பதை விளங்கி, வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழவேண்டும்.4. இவை போக தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை,ஆசிரியர் திட்டினால் தற்கொலை, கணவரோ அவர்சார்ந்தவர்களோ திட்டினால் தற்கொலை, தனது நேசத்துக்குரிய நடிகர்-அரசியல் தலைவர்களுக்காக தற்கொலை இந்த பட்டியலில் இப்போது ‘லேட்டஸ்ட்டாக’ இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் பாசாகிவிடலாம். கணவர் திட்டினால் தவறை திருத்திக்கொண்டால் கணவரின் அன்பை பெறலாம் ஆனால் உயிரை இழந்தால் பெறமுடியுமா? மேலும் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்கள் சுமார் இருபது பேர் இருக்கும். இப்படி அதிக தற்கொலைக்கு காரணம் அரசியல்வாதிகள், இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். இலங்கை தமிழர்களுக்காக இத்துணை சகோதரர்கள் உயிரை மாய்த்தார்களே! ஒரு அரசியல்வாதி தற்கொலை செய்ததுண்டா? அரசியல்வாதிகளின் ஆவேசப்பேச்சுக்கு செவிமடுத்தால் நம்முடைய ஆவி[உயிர்]தான் போகும். நம்வீட்டில் சோத்துப்பானையில் ஆவிவராது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
தற்கொலை பற்றி இஸ்லாம்
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்;4:29
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللّهِ يَسِيرًا
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.4:30.
தற்கொலை பெரும்பாவம்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]
தற்கொலை செய்தவர் இறைவழியில் போரிட்டாலும் நரகமே
ஸஹ்ல் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பியபோது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களிடையே (‘குஸ்மான்’ என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலம்) தனியாகப் போரிட்ட எவரையும்விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, ‘இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்து போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், ‘நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்” என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார். அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றால். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், ‘அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு” என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பாh. இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 4203 ]
நிரந்தர நரகம்
ஹஸன் அறிவித்தார். இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப்(ரலி), நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார். ‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [நூல்;புஹாரி 1364]
நெருப்பிற்குள்ளும் இரட்டிப்பு வேதனை
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். [நூல்;புஹாரி,எண் 5778 ]
‘செத்துட்டோம்னா நிம்மதி’ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்பவர்கள் மேற்கண்ட இறைமறை-இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பொன்மொழிகளை படித்து தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக உண்மையான முஸ்லிம்கள் உலகில் ஏற்படும் சோதனைகளை கண்டு துவண்டுவிடக்கூடாது. ஏனெனில், அல்லாஹ் மூமீன்களை சோதிப்பேன் என்று சொல்லிக்காட்டுகிறான்;2:155
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
இறைவன் நம்மை புடம்போட்ட தங்கங்கங்களாக மாற்றுவதற்காக சில சோதனைகளை ஏற்ப்படுத்துவான். அதில் பொறுமையோடு இருந்து மகத்தான சொர்க்கத்தில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு வீற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்.
“Jazaakallaahu khairan” Nilofer Fathima