புது தில்லி: நாடு முழுவதும் அனைத்து குடிமக்களுக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் திங்கள்கிழமை பதவியேற்ற பிறகு நிருபர்களிடம் பேசுகையில் இந்த உறுதிமொழியை அளித்தார். “18 வயது நிரம்பியவர்களுக்கும் அதற்கும் அதிகமானவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இது நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டு அதில் குடிமக்கள் பற்றிய எல்லா விவரங்களும் பதிவு செய்யப்படும். பிறந்த தேதி, நிறம், உருவஅமைப்பு, அங்க அடையாளங்கள் பற்றிய குறிப்புகளுடன் கையெழுத்து, கைரேகை ஆகியவை அதில் இடம் பெறும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியக் குடியுரிமை எண் வழங்கப்படும். இனி எதிர்காலத்தில் இந்த அடையாளம்தான் சட்டப்பூர்வ ஆவணமாக அனைத்து இடங்களிலும் பயன்பாட்டுக்கு வரும். இந்த அடையாள அட்டையைக் கேட்டு வாங்குவது அவசியமாகும்.
இப்போதைக்குக் கடலோர மாவட்டங்கள் சிலவற்றிலும் அந்தமான்-நிகோபார் தீவுகளிலும் சோதனை அடிப்படையில் இந்த அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. இது பூர்த்தியானதும் இத் திட்டத்தில் உள்ள நன்மை தீமைகள், குறைகள் ஆராயப்படும். அவற்றை நீக்கும் பரிகார நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டு தேசம் பூராவிலும் உள்ளவர்களுக்கு இது அமல்படுத்தப்படும். இந்த அட்டையே வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அனைத்துக்கும் அடிப்படை ஆவணமாக இனி பயன்படும்.
அத்துடன் தேசியக் குடிமகன் ஆவணமும் பராமரிக்கப்படும். பிறப்பு, இறப்பு பதிவேடுகளும் இந்த ஆவணமும் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு நாட்டின் மக்கள் தொகை பற்றிய திட்டவட்டமான தகவல்கள் அரசுக்கு தரப்படும்.
இனி வெளிநாட்டவர்கள் யாரும் சட்ட விரோதமாக இங்கு குடியேற முடியாது’ என்றார் ப. சிதம்பரம்.
துணை நிலை ராணுவப்படைகள்: உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை நிலை ராணுவப் படைப்பிரிவுகளின் தலைமையகங்களுக்கு நேரில் வந்து பார்வையிடுவதாக உறுதி கூறியிருக்கிறார் ப. சிதம்பரம். அவரை வரவேற்க நினைவுப்பரிசுகளுடன் அதிகாரிகளும், கோரிக்கைகளுடன் ஜவான்களும் காத்திருக்கின்றனர். ஊதியம், படிகள் ஆகியவற்றை உயர்த்தக் கோரியும், விடுமுறை, ஓய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தக் கோரியும் சிதம்பரத்திடம் கோரிக்கை வைக்க அனைவரும் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.