அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”தன் சகோதரரை மூன்று இரவு (நாட்)களுக்கு மேல் வெறுத்திருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. இருவரும் சந்திக்கின்றனர். இவரை அவர் புறக்கணிக்கிறார். அவரை இவர் புறக்கணிக்கிறார். இவ்விருவரில் சிறந்தவர், முதலில் ஸலாம் கூறுபவரே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒவ்வொரு திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அனைவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே பகைமை கொண்டவனைத் தவிர. இவர்கள் விஷயமாக அல்லாஹ் (கூறும்போது) ‘இந்த இருவரும் சமாதானம் ஆகும் வரை இருவரையும் விட்டு விடுங்கள்” என்று கூறுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது, ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கும் மேல் ஒருவன் வெறுத்து, இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”மூன்று நாட்களுக்கு மேல் ஒரு மூஃமினை வெறுப்பதற்கு, மற்றொரு மூஃமினுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்கள் கழிந்து விட்டால், அவரை அவர் சந்திக்கட்டும். அவருக்கு ஸலாம் கூறட்டும். அவரின் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டால் கூலி பெறுவதில் இருவரும் சமமாகி விடுவார்கள். அவருக்குப் பதில் ஸலாம் கூறாவிட்டால், அவர் பாவத்தைச் செய்தவராவார். ஸலாம் கூறியவரோ, வெறுத்தல் எனும் குற்றத்திலிருந்து நீங்கியவராவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூது)
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நீங்கள் மூவராக இருந்தால் ஒருவரை மட்டும் விட்டு விட்டு, இருவர் ரகசியம் பேச வேண்டாம். ஆனால் மக்களோடு சேர்ந்திருந்தாலே தவிர. இது அவரை கவலைப்படச் செய்யும்”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)