பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு
[ அந்நிய நாடுகளுக்குப் படையெடுப்பது மட்டுமின்றி, உள்நாட்டிலும் ஏற்றுமதிக்கான உணவு தானிய உற்பத்திக்காக இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆங்காங்கே நிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரேஞ்சர் ஃபார்ம்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதிக்கான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. டாடா நிறுவனமும் தன்பங்கிற்கு 60,000 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது. ]
ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. “ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!” என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தை ஒடுக்க சர்வாதிகார அதிபர் மார்க் ரவலோமானனா கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத அடக்குமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். இப்போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, தலைநகர மேயரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆண்ரி ரஜேவினா சர்வாதிகார அதிபருக்கெதிரான நாட்டு மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவரைச் சர்வாதிகார அதிபர் பதவி நீக்கம் செய்ததும், நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் மார்க் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போன நிலையில், இராணுவம் மற்றும் சட்டவாத நீதித்துறையின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவரான ஆண்ரி, சர்வாதிகார அதிபரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு கடந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் புதிய அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கே, இந்தியப் பெருங்கடலில் இயற்கை வளமும் தாது வளமும் கனிம வளமும் நிறைந்த மிகப் பெரிய தீவு நாடாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியச் சூறையாடலால் மடகாஸ்கர் இன்னமும் ஏழை நாடாகவே இருக்கிறது. வறுமையும் வேலையின்மையும் அந்நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டு விவசாயிகளைப் போலவே மடகாஸ்கர் விவசாயிகளும் தாராளமயஉலகமயமாக்கத்தால் ஓட்டாண்டிகளாகி நிற்கிறார்கள். ஏறத்தாழ 70% மக்கள் உலக உணவுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அரைகுறை உணவைக் கொண்டு வாழ்க்கையை நரக வேதனையுடன் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவும் திட்டத்தைக் கொண்டு வந்தார், அதிபர் மார்க். இதன்படி, தென்கொரிய தேசங்கடந்த ஏகபோக தொழிற்கழகமான டேவூ நிறுவனத்திற்கு 13 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் 99 வருடக் குத்தகைக்கு விடப்பட்டன. இது, அந்நாட்டின் மொத்த விளைநிலப் பரப்பில் ஏறத்தாழ பாதிக்கும் மேலானதாகும். பா.ம.க. தலைவர் ராமதாசு அடிக்கடி கோரிவருகிறாரே, அத்தகைய சிறப்பு விவசாய மண்டலத் திட்டம்தான் அங்கே செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அந்நியச் செலாவணி பெருகும் என்றும், இது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்றும் ஆட்சியாளர்கள் கதையளந்தனர்.
ஆனால் மடகாஸ்கர் விவசாயிகள், விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கும் இம்மோசடித் திட்டத்தை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. இது, நாட்டை அடிமைப்படுத்தும் நவீன காலனியாதிக்கம் என்று மிகச் சரியாக வரையறுத்த அவர்கள், தலைநகரை முற்றுகையிட்டு போராட்டங்களைத் தொடந்தனர். அவர்களது போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியைப் பிடித்துள்ள புதிய அதிபரான ஆண்ரி, டேவூ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது, மடகாஸ்கர் விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி.
தனது 34வது வயதில் மடகாஸ்கரின் அதிபராகியுள்ள ஆண்ரி, உலகின் முதலாவது இளம் அதிபர் என்று ஊடகங்களால் போற்றப்படுகிறார். எனினும் அவர் இடதுசாரியோ, சீர்திருத்தவாதியோ அல்ல; விவசாயிகளின் போராட்டத்துக்கு வடிகால் வெட்டும் வேலையைச் செய்துள்ள ஆளும் வர்க்கங்களின் எதிர்த்தரப்பு அரசியல் தலைவர்தான் அவர். எனவேதான், ”உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் எமது திட்டங்களுக்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; புதிய அதிபருடன் நாங்கள் புதிய ஒப்பந்தம் போட்டு எமது திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று நம்பிக்கையோடு அறிவிக்கிறது டேவூ நிறுவனம். இதே மடகாஸ்கரில் ஏறத்தாழ 4 லட்சம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள இந்தியாவின் வருண் நிறுவனம், ”நாங்கள் டேவூ நிறுவனத்திடமிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ளோம்; நாங்கள் விவசாயிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் ஒப்பந்த விவசாயம் மூலம் திட்டத்தை நிறைவேற்றப் போகிறோம்” என்கிறது.
மடகாஸ்கரில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது, விவசாயிகளின் எழுச்சி. இந்த எழுச்சிக்குக் காரணம், அந்நியக் கம்பெனிகளின் நிலப்பறிப்பு. இது ஏதோ, மடகாஸ்கரில் மட்டும் நடந்த விதிவிலக்கான நிகழ்வு அல்ல. உலகெங்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும், நிதியாதிக்கக் கும்பல்களும், அவற்றின் பங்காளிகளான வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசுகளும் போட்டிபோட்டுக் கொண்டு ஏழை நாடுகளின் விளைநிலங்களைக் கபளீகரம் செய்து வருகின்றன. இந்நிலங்களில் தமது நாட்டின் தேவைக்கான உணவு தானியங்களைப் பயிரிட்டுக் கொள்வது, உலகச் சந்தையில் விற்று ஆதாயமடைவது என்ற நோக்கத்துடன் இந்நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
இதனை “உணவு உற்பத்தியில் அவுட் சோர்சிங்” என்று குறிப்பிடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குத் தேவையான உணவு தானியங்களை அல்லது உயிர்ம எரிபொருள் தேவைக்கான பயிர்களை அதன் எல்லைக்கு அப்பால் உற்பத்தி செய்வதையே ”உணவு உற்பத்தியில் அவுட்சோர்சிங்” என்கின்றனர். அன்று வெள்ளைக்காரன் இந்தியாவைக் காலனியாக்கி, தனது நாட்டின் துணிகளுக்குச் சாயம் போடுவதற்காக, இந்திய விளைநிலங்களில் அவுரிச் செடியைக் கட்டாயமாகப் பயிரிட வைத்தான். இக்காலனியாதிக்க வழியில், இன்று பல்வேறு ஏகபோக நிறுவனங்களும் அரசுகளும் நிதியாதிக்கக் கும்பல்களும் ஏழை நாடுகளின் நிலங்களைக் கைப்பற்றி தமது தேவைக்காகப் பயிரிட்டு அள்ளிச் செல்வதுதான் உணவு உற்பத்தியில் அவுட்சோர்சிங் என்பதாகும்.
வெளிநாடுகளில் உணவு உற்பத்தியை மேற்கொண்டு அதன் மூலம் ஆதிக்கம் செய்யத் துடிக்கும் சௌதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசு முதலான எண்ணெய் வளமிக்க நாடுகள், “வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு (எஇஇ)” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அபரிமிதமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வெளிநாடுகளில் உணவு உற்பத்தியை இவை நடத்தி வருகின்றன. சூடான், பாகிஸ்தான், மியான்மர் (பர்மா), கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கசகஸ்தான், உகாண்டா, பிரேசில் முதலான நாடுகளில் இக்கூட்டமைப்பு லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை வாங்கிக் குவித்துக் கொண்டேயிருக்கின்றன. கடந்த ஓராண்டு காலமாக இக்கூட்டமைப்பு பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் முதலானவற்றை உற்பத்தி செய்து தமது நாடுகளுக்கு அள்ளிச் சென்றுள்ளன.
இக்கூட்டமைப்பிலுள்ள ஒரு நாடான கத்தார், பாகிஸ்தானின் வளமிக்க பஞ்சாப் மாநிலத்தில் ஏறத்தாழ 25,000 கிராமங்களை அழித்துவிட்டு பெரும்பண்ணை விவசாயத்தை நடத்த ஒப்பந்தம் போட்டுள்ளது. இதேபோல, சௌதி அரேபியா ஆட்சியாளர்கள் இந்தோனேசியாவில் ஏறத்தாழ 160 லட்சம் ஹெக்டேர் நிலங்களை வாங்கி உணவு உற்பத்தி செய்து தங்கள் நாட்டுக்கு அள்ளிக்கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளனர். எகிப்து நாட்டின் அரசு, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள உகாண்டாவில் ஏறத்தாழ 8 லட்சம் ஹெக்டேர் நிலங்களை வாங்கி, தங்களுக்குத் தேவையான கோதுமை மற்றும் மக்காசோளம் உற்பத்தி செய்யக்கோரி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள், கூட்டமைப்பின் மூலமாக மட்டுமின்றி, தனியாகவும் ஏழைநாடுகளின் நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. எத்தியோப்பியா, கசகஸ்தானில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை சௌதி அரேபியா வளைத்துப் போட்டுள்ளது. ஐக்கிய அரபுக் குடியரசு, சூடானில் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது. பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் தொடரும் எத்தியோப்பியாவில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை ஜெர்மானிய பெருந்தொழில் நிறுவனங்கள் வாங் கிக் குவித்துள்ளன. உணவு உற்பத்தி மட்டுமின்றி உயிர்ம எரிபொருள் உற்பத்திக்காகவும் ஆப்பிரிக்க கண்டத்தின் பல ஏழை நாடுகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆப்பிரிக்கக் கண்டத்தைப் போலவே, ஆசிய நாடுகளிலும் நிலப்பறிப்பு வேகமாக நடந்து வருகிறது. கம்போடியாவில் பழங்கள்காய்கறிகள் பயிரிட்டு அள்ளிச் செல்ல பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை இஸ்ரேல் வாங்கிக் குவித்துள்ளது. குவைத் அரசு, தனது உயிர்ம எரிபொருள் தேவைக்காக மக்காச்சோளம் பயிரிட லாவோசில் நிலங்களை வாங்கிக் குவிக்கிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடான வியட்நாமில் கிடைபோடுவதற்காக ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வந்திறங்குகின்றன.
சீன முதலாளித்துவ அரசு பல்வேறு ஏழை நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பணிகளில் உதவி செய்ய ஒப்பந்தங்கள் போட்டு வருகிறது. இந்த ஒப்பந்தங்களின்படி, பயனடையக்கூடிய ஏழை நாடுகள் தம்முடைய விளைநிலங்களில் ஒரு பகுதியை சீன அரசுக்குக் குத்தகைக்குக் கொடுக்க வேண்டும். இப்படி பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ஏறத்தாழ 20 லட்சம் ஹெக்டேர் நிலங்களை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசுகள் மட்டுமல்ல; விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், நிதியாதிக்கக் கும்பல்கள், நிதி முதலீட்டு வங்கிகள் முதலானவையும் ஏழை நாடுகளில் விவசாய நிலங்களைக் கைப்பற்றி வருகின்றன. உணவு பதப்படுத்தல் மற்றும் தானிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய கம்பெனிகள் 120 லட்சம் ஹெக்டேர் நிலங்களைப் பல நாடுகளில் வாங்கியுள்ளன. 2007ஆம் ஆண்டில் மிட்சூயி என்ற நிறுவனம், பிரேசிலில் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தை, உயிர்ம எரிபொருள் தேவைக்கான சோயாவை உற்பத்தி செய்வதற்காக வாங்கியுள்ளது.
முதலீட்டு வங்கிகளான டாட்ஷே, கோல்டுமேன்சாக்ஸ் ஆகியன சீனாவின் ஒட்டுமொத்த கால்நடைத் தொழிற்துறையை — அதாவது, சீனாவின் மிகப்பெரும் வெண்பன்றிப் பண்ணைகள், கோழிப்பண்ணைகள், இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் அவற்றின் நிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளன. பெரும் முதலீட்டு வங்கியான பிளாக்ராக், உலகெங்கும் நிலங்களை வளைத்துப் போடுவதற்காக பலகோடி டாலர்களை ஒதுக்கியுள்ளது. அண்மையில் திவாலாகி அமெரிக்க அரசால் மீட்கப்பட்ட முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டேன்லி, உலகின் கோதுமைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் உக்ரைன் நாட்டில் 40,000 ஹெக்டேர் விவசாய நிலங்களைக் கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் ரினைசன்ஸ் கேபிடல் என்ற முதலீட்டு நிறுவனம் 3 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களை உக்ரைனில் வளைத்துப் போட்டுள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிளாக் எர்த் பார்மிங், அல்ப்காட் அக்ரோ முதலான நிறுவனங்கள் ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளன.
இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இத்தகைய நிலப்பறி வேட்டையில் இறங்கியுள்ளனர். அரசுத்துறை நிறுவனமான இந்திய வர்த்தகக் கழகம் மற்றும் குஜராத் அம்புஜா, ருசிசோயா, சுன்ஷன்வாலா வனஸ்பதி முதலானவை உள்ளடங்கிய 15 தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் குழுமமும் சோயா மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்காக பாரகுவே, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகளில் பத்தாயிரம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. “காருட்டுரி குளோபல்” என்ற ரோஜா மலர் உற்பத்தி நிறுவனம் எத்தியோப்பியாவில் மக்காச்சோளம், நெல், காய்கறி மற்றும் இதர பணப்பயிர்களை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. டாடாவின் கண்ணன் தேயிலை நிறுவனமும் எத்தியோப்பியாவில் காலூன்றியுள்ளது. இவை தவிர, இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய பர்மாவையும் பாமாயிலுக்காக இந்தோனேசியாவையும் முற்றுகையிட்டுள்ளனர்.
அந்நிய நாடுகளுக்குப் படையெடுப்பது மட்டுமின்றி, உள்நாட்டிலும் ஏற்றுமதிக்கான உணவு தானிய உற்பத்திக்காக இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆங்காங்கே நிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரேஞ்சர் ஃபார்ம்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதிக்கான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. டாடா நிறுவனமும் தன்பங்கிற்கு 60,000 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது.
இப்படி உலகெங்கும் குறுக்கும் நெடுக்குமாக ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களும் அந்நிய செலாவணி இருப்பை அபரிமிதமாகக் கொண்டுள்ள எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏழை நாடுகளின் நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. எதிர்காலத்தில் பெட்ரோலிய எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு மாற்று எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும்போது, உயிர்ம எரிபொருள் மூலம் கொள்ளை இலாபமீட்டும் நோக்கத்துடன் மக்காச்சோளம், சோயா, காட்டாமணக்கு முதலானவற்றை உற்பத்தி செய்வதற்காக அவை பெருமளவில் நிலத்தை வளைத்துப் போட்டு வருகின்றன. இதுதவிர, பெரும் பண்ணைகளை உருவாக்கி உணவு தானியங்களை உற்பத்தி செய்து, உணவை ஒரு ஆயுதமாகக் கொண்டு ஏழை நாடுகளை ஆதிக்கம் செய்யும் நோக்கத்துடன் இப்படி விளைநிலங்களைக் கைப்பற்றி வருகின்றன.
இச்சூறையாடலுக்குச் சாதகமாக ஏற்கெனவே உலக வங்கியும், ஏகாதிபத்திய நாடுகளும் தாராளமயம் உலகமயமாக்கத்தின் மூலம் தமது விவசாய உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் கொட்டி, ஏழை நாடுகளின் விவசாயத்தையே காலாவதியாக்கி விட்டன. பன்னாட்டு நிறுவனங்களோ ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி வருகின்றன. ஏற்றுமதிக்கான விவசாயத்தை மேற்கொண்டு, உலகமயத்தால் போட்டி போட முடியாமல் விவசாயிகள் திவாலாகி வருகிறார்கள். உள்நாட்டுச் சந்தையிலும் வாய்ப்பில்லாமல், உலகச் சந்தையிலும் விற்க முடியாமல் விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி வருகிறார்கள். மாற்றுத் தொழில் கிடைத்தால் விவசாயத்தை விட்டே வெளியேறிவிடும் நிலையில் ஏழை நாடுகளின் விவசாயிகள் தத்தளிக்கிறார்கள். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, நவீன காலனியாதிக்க முறையிலான நிலப்பறிப்பை ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்கள் புதிய உத்தியாகச் செயல்படுத்தி வருகின்றன.
இதற்கேற்ப பன்னாட்டு நிறுவனங்கள் வலுவான சட்டரீதியான ஏற்பாட்டையும் உருவாக்கி வருகின்றன. உலக வங்கியும் மறுசீரமைப்பு வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியும், நிலவுரிமை தொடர்பான சட்டங்களை பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்பத் திருத்துமாறு ஏழை நாடுகளை நிர்பந்தித்து வருகின்றன. உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 120 கோடி அமெரிக்க டாலர்களைக் கடனாகக் கொடுக்க உடன்பட்ட உலக வங்கி, அதற்குக் கைமாறாக ஆப்பிரிக்க நாடுகளின் நிலவுரிமை தொடர்பான சட்டங்களைத் திருத்தக் கோரியது. ஏறத்தாழ இதே வழியில், ஐரோப்பிய வங்கியும் மத்திய ஆசிய நாடுகளின் சட்டங்களைத் திருத்தக் கோரியுள்ளது. இவற்றை ஏற்று அர்ஜெண்டினா, மங்கோலியா, சிரியா, லெபனான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுரிமைச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், இந்துவெறி கும்பல் ஆளும் கர்நாடக மாநிலத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நிலக் கொள்ளைக்கு ஆதரவாக சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரிலும் ஆலைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியமைப்பது என்ற பெயரிலும், அந்நிய நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை அபகரித்து வருவதைப் போல, இப்போது “உணவு உற்பத்தியில் அவுட்சோர்சிங்” என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது!!
நன்றி: புதிய ஜனநாயகம் 07 May 2009