படித்தவர்களாக இருப்பார்கள், ஆனால் தங்களின் ரத்தப்பிரிவு என்ன என்பதை அறிந்து இருக்க மாட்டார்கள். பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னால் போதும், சிலருக்கு கோபம் தொனிக்கும், பார்வை விரியும்.
திருமணத்துக்கு முன்பு உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றால் “என் உடம்பு கல்லு மாதிரி” என்று ஜம்பம் கட்டுபவர்களும் உண்டு. “வீணாக சந்தேகப்படுகிறீர்கள்” என்று தட்டிக்கழித்து எரிச்சல் அடைபவர்களும் உண்டு.
குழந்தைகளுக்கு நோய் வருவதை தடுக்க அவ்வப்போது தடுப்பூசி போடுகிறோம். அதுபோல ஒவ்வொரு வயதினரும் வயதுக்கு தக்கவாறு குறிப்பிட்ட காலங்களில் உடலை பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்றபடி நடப்பது நலவாழ்வுக்கு மிக அவசியமானது.
இயல்பாக வருவது ஜலதோஷமாக இருக்கலாம். சில நாள் நீடித்துவிட்டு மறைந்து போகும் என்று நினைத்து நீங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது நெஞ்சுச்சளியாக தேங்கி, மற்ற வியாதிகளுக்கு முன்னோடியாக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு.
இதுபோல் வாய்ப்பகுதியில் ஏற்படும் புண்கள் குடல்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அறிகுறியாகும். மார்பகம் போன்ற பகுதிகளில் ஏற்படும் வலிகள் சில வியாதிகளுக்கான அடையாளம். இந்த அறிகுறிகள் உடலில் தென்படுகிறது என்றால் வியாதிகள் வளரத் தொடங்கி இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆரம்ப நிலையில் அவற்றை கவனித்தால் சரி செய்துவிடலாம்.
அவை சாதாரணமானது என்று விட்டுவிட்டால், பின்னால் விபரீதமாகி பாதிக்கப்படப்போவது நீங்கள்தான். எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை (வயதுக்கு தக்கபடி மாறுபடும்) உடற்பரிசோதனை செய்து கொள்வது சாலச்சிறந்தது.
தற்போது வெயில் காலம். இந்த நேரத்தில் அயல்நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பீதி நிலவுகிறது. நம்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு அந்த வியாதி பரவாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். நமது நாட்டில் இந்த காலத்தில் சிறுவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அம்மைநோய் மற்றும் அனைத்து வயதினருக்கும் உஷ்ணப் பிரச்சினைகள் வர சாத்தியக்கூறுகள் உள்ளது. இதற்கான ஆலோசனைகளை டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.
30-40 வயதுக்கு உட்பட்டவர்கள் பற்கள் பரிசோதனைகளை 2 ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல் 30 வயதிற்கு மேல் 40 வயதுவரை மூப்பு தொடங்கி விடுவதால் பலவித வியாதிகள் தென்பட தொடங்கும் காலமாகும். அந்த காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
அந்த வயதினர் சர்க்கரை வியாதிக்கான பரிசோதனையும், எச்.ஐ.வி. பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம். சர்க்கரை வியாதியை எளிதான பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். அறிகுறிகள் தென்பட்டால் அதற்கேற்ற பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாட்டால் முற்றிலும் தடுத்துவிட முடியும். எச்.ஐ.வி. பரிசோதனை செய்பவர்களுக்கு ரகசிய காப்பும் அளிக்கப்படும்.
உடலில் கெட்ட கொழுப்பு சேருவதால் மாரடைப்பு, இதயநோய் ஏற்படுகிறது. இதுதவிர ரத்த அழுத்தம், பாரம்பரிய அம்சம் போன்றவையும் இதயவியாதிக்கு காரணமாக இருக்கிறது. இதை அறிய 40 முதல் 50 வயதுடையவர்கள் ஹை சென்சிடிவ் சிஆர்பி அண்ட் ஹோமோசைடின் என்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இதேபோல் கொழுப்பு அளவு பற்றி அறியும் மற்றொரு பரிசோதனை `பாடி மாஸ் இன்டக்ஸ்’. இது நமது உடல் எடை, உயரம் ஆகியவற்றை கணக்கிட்டு கொழுப்பு அளவு பற்றி அறிந்து கொள்ளும் சோதனை. இந்த சோதனை மூலம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் போன்றவற்றை அறியலாம். புல் லிப்பீடு புரோபைல், டிரைகிளிசரிடஸ் போன்ற சோதனைகளையும் 40- 50 வயதுக்குட்பட்டவர்கள் செய்து கொள்ள வேண்டும்.
இதேபோல் பக்கவாத நோய் பரிசோதனை, புராஸ்டேட் கேன்சர் சோதனை போன்றவை 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செய்துகொள்ள வேண்டியவை. வயதாக வயதாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து முதிர்ச்சி அதிகமாவதால் உடலை தவறாமல் பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
இதில் அலட்சியம் காட்டாமல் அக்கறை செலுத்துவதற்கேற்பே நமது வாழ்வில் ஆரோக்கியம் காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: தினத்தந்தி