Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கூவம் மணக்குமா?

Posted on May 25, 2009 by admin

சில மாதங்களுக்கு முன் புதுப்பேட்டையிலுள்ள பழைய சித்ரா தியேட்டர் அருகிலுள்ள கூவத்தின் கரையோரம் இருந்த குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டபோது, கூவத்தின் வரலாறு மனக்கண்ணில் தெரிந்தது. கூவம் சென்னையின் மைய ரேகையாக அமைந்து உள்ளது. சென்னை மாநகரின் வரலாற்றில் கூவம் முக்கிய அங்கமாகிவிட்டது. 1820-ம் ஆண்டு காலகட்டத்தில் இன்றைய கல்லூரிச் சாலையிலுள்ள கல்வித்துறை இயக்குநரகத்தின் பின்புறம் உள்ள கூவம் ஆற்றங்கரையிலும், எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள ஆற்றங்கரையிலும் மாலை நேரங்களில் மக்கள் கூடி விருந்துகள் வைத்துக் கொண்டாடுவது உண்டு. இன்றைய கடற்கரைக்குச் சென்று பொழுதைக் கழிப்பதைப்போல 1820-களில் கூவம் கரை, பொழுதுபோக்கு மையமாக இருந்து வந்துள்ளது என்று சொன்னால் நம்பவா முடிகிறது? அதுமட்டுமல்லாமல், கூவத்தைப் புனிதமாகக் கருதினார் வள்ளல் பச்சையப்பர்.

அவர் அதிகாலையில் புதுப்பேட்டை, கோமளீஸ்வரன்பேட்டையிலுள்ள கூவத்துக்கு வந்து குளித்துவிட்டு, குதிரையில் கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குப் போவார் என்று அவரது சரிதையில் கூறப்படுகிறது. 1907-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரல்ப் பென்சன் இன்றைய பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் டவுட்டன் இல்லத்தில் குடியிருந்தபோது, மாலை நேரங்களில் கூவம் கரையில் உலவச் செல்வதுண்டு. சென்னை ஆளுநர் கிராண்ட் டப், “”கூவம் கரையோரத்தில் உள்ள மஞ்சள் அரளி மரங்களிலிருந்து நீரில் விழும் அரளி மலர்களைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார். இவ்வாறு கீர்த்தி பெற்ற கூவம் படிப்படியாகக் கழிவுநீர்க் கால்வாய் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் காரணம், இந்தியாவில் விளையும் பருத்தியின் மூலம் துணிகளை உற்பத்தி செய்து உடனே பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்திலிருந்து ஓர் அரண்மனை உத்தரவு வந்தது.

அதனால், 1934-ல் கவர்னர் மார்டின் பிட், சிந்தாதிரிப்பேட்டையில் பல பகுதிகளிலிருந்து நெசவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து குடியமர்த்தினார். நெசவுத் தொழில் மூலம் வெளியாகும் கழிவுகள் கூவத்தில் சேர்ந்தன. இதுதான் முதல் பாதிப்பு. கூவம் ஆறு சென்னையின் மேற்குப் பகுதியில் 65 கி.மீட்டர் தூரத்தில் கேசவரம் அணையில் இருந்து தொடங்குகிறது. இந்த ஆறு கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தில் தொடங்கி, மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கண்ணார்பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அமைந்தகரை என ஓடி சாக்கடை நீரோடு கலந்து சென்னை மாநகருக்குள் வருகிறது. சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம், ஓட்டேரி கால்வாய்களும், நந்தனம், மாம்பலம், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் ஓடைகளும் உள்ளன. இவைகள் மூலமாகத்தான் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் நாற்றம். கொசுக்கள் வளர்கின்றன. இன்றைக்கு அழகிய கூவம் நதியாக இருக்க வேண்டியது வெறும் சாக்கடையாக மாறிவிட்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் படிப்படியாக நாசமாகிவிட்டது. சென்னை மாநகரில் 18 கி.மீட்டர் தூரத்துக்கு கூவம் ஆறு ஓடுகிறது.

இதன் கரையில் குடிசைகள் வேய்ந்த 8,266 குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 127 இடங்களில் மாநகரக் கழிவு நீர் சேர்கிறது. கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு 34 மில்லியன் லிட்டர் இதில் சேர்கிறது. இந்நிலையில் கூவம் மணக்குமா? பல திட்டங்கள், அறிக்கைகள் என சொல்லப்பட்டு எதுவும் சரிவரவில்லை. ஆங்கிலேயர் காலத்திலேயே முயற்சிகள் இருந்தும், 1960-ல் இது குறித்து சென்னை மாகாண அரசு திட்ட மதிப்பிலே அறிக்கை தயார் செய்தது. அதன்படி சேத்துப்பட்டு அருகே அடையாற்றை கூவத்துடன் இணைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்தது. காங்கிரஸ் ஆட்சி முடிந்து அண்ணா தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்டது. அண்ணா 1967-ல் ரூ. 118 லட்ச மதிப்பில் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அண்ணா “”லண்டனுக்கு தேம்ஸ் எப்படி பெருமை சேர்க்கிறதோ அதைப்போல் கூவம் சென்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்ற ஆசையை வெளிப்படுத்தினார். 1973-ல் இதில் படகுகள் விடப்பட்டன.

படித்துறையில், பாரி, ஓரி என தமிழக ஏழு பெரும் வள்ளல்கள் பெயரில் படித்துறை மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இன்று அவை எல்லாம் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. 1976-ல் ம.பொ.சி. தலைமையில் அமைந்த குழு ரூ. 22 கோடியில் ஒரு திட்டத்தைக் கண்டறிந்தது. 1991-ல் செவன் டிரண்ட் என்ற ஆலோசனைக் குழுமம் மற்றும் 1994-ல் மேக் டொனால்ட் குழுமமும் ரூ. 34.8 கோடி மதிப்பீட்டிலும், 1998-ல் அரசு பொதுப்பணித்துறை ரூ. 19 கோடி மதிப்பீட்டிலும், 2000-ல் மீண்டும் தமிழக அரசு ரூ. 720 கோடி மதிப்பீட்டிலும், தற்போது 2008-ல் தமிழக அரசு உலக வங்கியுடன் இணைந்து பல திட்டங்கள் என அறிவிப்புகள்… ஆனால், எதிலும் பலன் கிட்டவில்லை. சேத்துப்பட்டு பாலத்தின் கீழ் அரசின் மீன் வளர்ப்புப் பண்ணை இருந்தாலும் மீன் வளர்ப்பும் சரியாக நடக்கவில்லை. அது நஷ்டத்தில் நடக்கிறது. இங்கு கிடைக்கும் மீன் வகைககள், நண்டுகளை உண்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படுவது நிச்சயம்.

போதாக்குறைக்கு கழிவுகள் அதில் சேர்வதால் மனித இனத்தை வாட்டும் கொசுக்கள் தாராளமாக உற்பத்தி ஆகின்றன. கூவத்தில் கலக்கும் கழிவு நீரைத் தடை செய்ய வேண்டும். அத்துடன் தூர்வாரி, கரைகளில் மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டும். கூவம் சுத்தம் ஆனால் மின்சார ரயில், பறக்கும் ரயில் போலவே நீர்வழி போக்குவரத்தையும் சென்னை மாநகரில் ஏற்படுத்தலாம். கூவத்தைச் சீர்படுத்தி, பக்கிங்காம் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இவற்றுடன் இணைக்கலாம். கூவம் ஆறு நேப்பியர் பூங்கா அருகில் கிழக்கு நோக்கிச் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. அதன் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அங்குள்ள மேட்டுப்பாங்கான கழிவுகளை அகற்ற வேண்டும். சென்னையில் 1,398 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல தொழிற்கூடங்களின் கழிவுகள் கூவத்தில் நேரடியாகச் சேர்கின்றன. சில சமயங்களில் இறந்த மாடுகள், நாய்களின் உடல்கள் இந்த ஆற்றில் காணப்படுகின்றன. அவற்றையும் அகற்ற உரிய நடவடிக்கைகள் வேண்டும்.

கூவத்தைச் சுத்திகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன: 1. கூவம் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள தடைகளை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். 2. கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு வேறு பகுதிகளில் மாற்று இடம் கொடுக்க வேண்டும். 3. மருத்துவமனை கழிவுகள், ஆலைக் கழிவுகள், பெரிய ஓட்டல்களின் கழிவுகள் கூவத்தில் கலப்பதைத் தடை செய்ய வேண்டும். இந்தக் கழிவுகளில் மருத்துவமனைகளின் மூலம் சேர்வது மட்டும் 37 டன் ஆபத்தான மருத்துவக் கழிவுகள். 4. கூவத்தில் நீர்வரத்தைச் சரிசெய்ய 50 முதல் 80 மீட்டர் அளவில் அகலப்படுத்த வேண்டும். 5. புறநகர்ப் பகுதியில் செங்கல் சூளைக்காக மண் எடுக்கப்படுகிறது. இதனால் ஒரே சீரான ஆழம் இல்லாமல் போகிறது. மணலும் திருடப்படுகிறது. கூவத்தின் கரையோரங்களில் பூங்கா, ஓட்டல்கள், மக்களைக் கவரும் வகையில் பல்பொருள் அங்காடிகள் அமைக்கலாம். இவற்றைப் பராமரிக்க இவற்றிலிருந்து வாடகை பெறலாம்.

இவ்வளவு திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் அரசுச் செலவில் நடத்தப்பட்டு அவ்வப்போது கூவத்தைச் சுத்தப்படுத்த ஒதுக்கீடும் செய்யப்பட்ட பிறகும் கூவம் மணக்கவில்லையே ஏன்? இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பலரும் பங்கு போடாமல் இருந்திருந்தால் இப்போது பணிகள் முடிந்து இருக்கும். மக்களின் வரிப்பணம் இவ்வளவு கோடிகளாக ஒதுக்கீடு செய்து அது குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செலவு செய்யப்படாமல் தனிப்பட்டவரின் நலனுக்குச் செல்கிறது. இதனால் கூவம் மட்டுமல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி பெறுவதில்லை. காகிதப் பூ மணக்காது! அதைப்போல் கூவம் தேம்ஸ் ஆகிவிடாது! உண்மையிலேயே நமது ஆட்சியாளர்களுக்கு மனமிருந்தால், வாஷிங்டன் நகருக்கு ஒரு பொட்டோமாக் நதி, லண்டனுக்கு ஒரு தேம்ஸ், பாரிஸ் நகருக்கு ஒரு ரைஸ் போல சிங்காரச் சென்னைக்கு கூவமும் அமைவது என்ன இயலாத ஒன்றா?

நன்றி: தினமணி (கே.எஸ். இராதாகிருஷ்ணன்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

89 + = 90

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb