கேள்வி 1 : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா? அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா?
கேள்வி 2 : 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா?
முதல் கேள்விக்கான பதில்:
முதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு உங்கள் கேள்விக்கு வருவோம்.
ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.
‘பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881)
ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
‘ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.. (நூல்: புகாரி 930)
இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.
தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.
தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.
அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.
இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ‘நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?’ என்று கேட்க, அவர் ‘இல்லை’ என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக’ என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)
‘நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?’ என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்..
இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.
இன்னும் சில ஐயங்களுக்கு விடை காண்போம்.
1. லுஹர் தொழுகையின் நேரம் தான் ஜும்ஆவின் நேரமா?
ஜும்ஆவின் நேரம் லுஹரின் நேரத்திற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. லுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரம் ஆகும். அதற்கான ஆதாரம்.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுவார்கள். அதன் பின்னர் நாங்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அதற்கு ஓய்வளிப்போம்’. (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1870, அஹ்மத், நஸயீ 1392)
2. ஜும்ஆவின் முன் சுன்னத் எப்போது?
மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம்.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)
இரண்டாவது கேள்வியும் பதிலும்:
கேள்வி: 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா?
இது சந்தேகத்திற்கு இடமின்றி விபச்சாரக் குற்றத்தைச் சேரும். இதற்கான பதிலை ஒரே வரியில் சொல்லிவிட முடியும், ஆனாலும் விபச்சாரம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைபாட்டை ஆதாரங்களோடு இங்கே விளங்கிக் கொள்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும்.
1.விபச்சாரம் கூடாது:
அல்லாஹ் திருமறையில் விபச்சாரம் குறித்து இவ்வாறு சொல்கிறான்.
‘நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும், மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது’ (அல்குர்ஆன் 17:32)
இங்கே அல்லாஹ் பயன்படுத்தி இருக்கும் வார்த்தையின் ஆழத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். ‘விபச்சாரத்தை நெருங்காதீர்கள்’ என்பது ‘விபச்சாரத்தை செய்யாதீர்கள்’ என்று சொல்வதை விட எந்த அளவுக்கு கவனமான வார்த்தைப் பிரயோகம் என்பதை புரிந்து கொள்ளலாம். ‘விபச்சாரத்தை செய்யாதீர்கள்’ என்பது அந்தச் செயலை செய்வதை மட்டுமே தடுக்கும். ஆனால் விபச்சாரத்திற்கு முந்திய செயல்களை அவை தடுக்காது. பார்ப்பது, பேசுவது, நடப்பது, பிடிப்பது இதுபோன்ற அதை நெருங்குவதற்குரிய காரியங்களும் உள்ளன. இவற்றுக்கு தடை விதித்தால் தான் விபச்சாரம் என்ற குற்றத்திலிருந்து தப்ப முடியும். அதனால் தான் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
2.நூறு கசையடிகள்:
விபச்சார குற்றம் எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை அதற்கு தரப்படும் தண்டனையை வைத்து விளங்கிக் கொள்ளலாம். ஒரு இஸ்லாமிய ஆட்சியில், ஒரு இஸ்லாமிய ஆட்சியாளன் இந்த தண்டனையை நிறைவேற்றுவது அவன் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
‘விபச்சாரியும், விபச்சாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (அல்குர்ஆன் 24:2)
திருமணம் ஆகாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. திருமணம் ஆகாதவருக்கத் தான் இந்த தண்டனை என்பதை அடுத்து வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்..
3.மரண தண்டனை:
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொண்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மீண்டும் கூறினார்.
அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். முடிவில் நான்கு தடவை தனக்கு சாட்சியம் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உமக்கு பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?’ என்று கேட்டார்கள்.
அவர் இல்லை என்றார். நீர் மணமுடித்தவரா? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதன் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறியுமாறு கட்டளையிட முஸல்லா என்ற இடத்தில் கல்லெறியப்பட்டார். கல்லெறி விழுந்ததும் அவர் ஓடலானார்.
பிடிக்கப்பட்டு மீண்டும் கல்லெறியப்பட்டு மரணித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்தார்கள். அவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்கள்: புகாரி, திர்மிதி 1451)
இந்த ஹதீஸ் திருமணம் ஆனவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் தண்டனையாக கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், ஒருவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசரம் காட்டக் கூடாது என்பதையும் விளக்குகிறது.
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக அவரது குற்றத்தை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. தண்டனை கொடுப்பதில் அவசரம் காட்டி ஓர் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் இதன் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு ஹதீஸ் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.
உங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களைத் தண்டிப்பதைத் தவிருங்கள். அவரை விட்டுவிட ஏதேனும் ஒருவழி இருந்தால் விட்டுவிடுங்கள்.. ஏனெனில் ஒரு தலைவர் தண்டனை வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவதை விட மன்னிப்பு வழங்குவதில் தவறான முடிவுக்கு வருவது சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நூல்: திர்மிதி 1444)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நரகம் காட்டப்பட்ட போது அதில் விபச்சாரகர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டார்கள். (நூல்: புகாரி 1386) அதாவது மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள்.
4.பாவமன்னிப்பு:
‘உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள், அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்’. (அல்குர்ஆன் 4:16)
‘எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்’. (அல்குர்ஆன் 4:17)
நமது நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாததினாலும், விபச்சாரத்திற்கு உரிய தண்டணை வழங்கப்படாததினாலும் விபச்சாரகர்கள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமே இல்லை. விபச்சாரகர்கள் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பது திருமண ஒப்பந்தம் இன்றி ஆணும் பெண்ணும் விரும்பி செய்வதாகும். 15 வயதுடைய விபரமறிந்த ஓர் ஆண், ஏழு வயதுடைய விபரமறியாத பெண்ணை உடலுறவில் ஈடுபடுத்துவது கற்பழிப்பு வகையைச் சேர்ந்ததாகும். விபச்சாரக் குற்றத்திற்கே மிகக் கடுமையான தண்டனை என்கிற போது கற்பழிப்புக் குற்றம் அதைவிட கடுமையானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.