Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அடக்கம் அமரருள் உய்க்கும்

Posted on May 20, 2009 by admin

அடக்கம் அமரருள் உய்க்கும்

     எஸ்.எம். ரஃபீஉத்தீன் பாக்கவி      

மனித உடலுக்குப் பல நோய்கள் இருப்பதுபோல அவனது உள்ளத்திற்கும் பல நோய்கள் உள்ளன. அந்த நோய்களில் ஒன்றுதான் பெருமை.

எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்று இறைவனைப் பற்றிச் சொல்லப்படுகிறது. இன்று இறைவனுக்கு அடுத்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று உண்டென்றால் அது பெருமைதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். (திறந்து கொண்டும் சொல்லலாம்;தப்பில்லை)

வாழ்க்கையின் வசதி நிரம்பப் பெற்றவர்கள், அழகில் சிறந்தோர், ஆற்றல் மிக்கோர், பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு கைநிறைய சம்பாதிப்போர் பெருமையடிக்கிறார்கள் என்றால் ஓரளவாவது அதை சீரணிக்க முடிகிறது. ஆனால் ஏழைகளும், அழகற்றவர்களும் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே அவஸ்தைப்படுவோரும் கூட பெருமையடிப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

பெருமை நம்மை உயர்த்தும் என்று பலரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் இறைநியதி என்று ஒன்று இருக்கிறதே, இந்தப் புவியையும் அதிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் இந்த உலகின் அனைத்து இயக்கங் களையும் இயக்கிக் கொண்டிருக்கிற அற்புத ஆற்றல் அந்த இறைசக்தி, அந்த ஆற்றல் இந்த பாவப்பட்ட ஆத்மாக்களை ஒருபோதும் உயர்த்தவே உயர்த்தாது.

 

பணிவு கொள்வோரை இறைவன் உயர்த்துவான். பெருமை யடிப்போரை வீழ்த்துவான். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் மனித சமுதாயத்தின் பெரும் பான்மை பிரச்சினைகளுக்கு இந்தப் பெருமைதான் காரணம் என்பதை உணர முடியும். மனிதனுக்கு ஏற்படுகிற கோபம் பெரும்பாலும் பெருமையால்தான் உண்டாகிறது. குரோதம் இதைக் கொண்டுதான் உண்டாகிறது. பொறாமை, வெறுப்பு போன்றவை இதனால்தான் ஏற்படுகிறது. பிறரைப் பற்றி இனிக்க இனிக்கப் புறம் பேசத்தூண்டுவதும் இந்தப் பாழாய்ப் போன பெருமைதான். பணிவுள்ள மக்களிடம் இது போன்ற பாவங்கள் நிகழ்வது ஆபூர்வம்.

முதல் மனிதராகிய நம் தந்தை ஆதம் அவர்களைப் படைத்தபோது இறை சன்னிதானத்தில் நடைபெற்ற ஒரு காட்சி, அந்த முதல் மனிதருக்கு வானவர்களைக் கொண்டு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது இறைவிருப்பம். எனவே, அனைத்து வானவர்களையும் ஒன்று திரட்டி அவருக்கு சிரம் தாழ்த்தும்படி இறைவன் கட்டளை யிடுகிறான். எல்லா வானவர்களும் சிரம் பணிகிறார்கள். அதிலே ஒரு தலை மட்டும் வணங்கா முடியாக நிமிர்ந்து நிற்கிறது. அது எவன் தலை என்று பார்த்தால் சாத்தானுடைய தலை. ஏனென்று கேட்டால் அவரைவிட நான் சிறந்தவன் என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரையோ மண்ணால் படைத்திருக்கிறாய் மண்ணைக் காட்டிலும் எல்லா வகையிலும் நெருப்பே சிறந்தது. எனவே அவரைக் காட்டிலும் நானே உயர்ந்தவன். சிறப்பு மிக்க நான் தாழ்வான ஜீவனுக்கு எப்படி சிரம் பணிய முடியும்? என்று இறைவனையே கேள்வி கேட்டுத் தாழ்ந்து போனான்.

பெருமையின் தீங்குகளில் இதை முதன்மையானது எனலாம். இறைவனுக்கே மாறு செய்யத் தூண்டுகிற மனோபாவம். இன்று பள்ளிவாசல்களில் பாங்கோசை கம்பீரமாய் ஒலிக்கிறபோது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் பாராமுகமாய்ப் பலர் செல்வதற்கு அடிப்படைக் காரணமே இந்தப் பெருமைதான். பெருமை அதன் விளைவான அலட்சியம். மனிதன் எப்பொழுதும் இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டுமேயன்றி அறிவுக்கு அடிமையாக இருக்கக்கூடாது. இறை ஆற்றலுக்கு முன்பு இந்த அறிவெல்லாம் ஸ.ச்சும்மா ஜுஜுபி. உன்னையும் படைத்து அந்த முதல் மனிதர் ஆதமையும் படைத்து உன் அறிவையும் படைத்து இறைக் கட்டளை அது என்பதை மறந்தல்லவா அவன் அறிவுக்கு முக்கியத்துவம் தந்தான். அறிவை மட்டும் மனிதன் நம்புகிற போது பல சமயங்களில் அது இப்படித்தான் அவனைக் கவிழ்த்துவிடும்.

இறைக் கட்டளையில் மனம்தான் முன்னிற்க வேண்டுமேயன்றி அறிவு முன்னிற்கக்கூடாது. இது சாத்தானுக்கும் தெரியும்தான். பெருமை அவன் கண்ணை மறைத்து விட்டது. அவரைவிட நான் சிறந்தவன் என்கிற சாத்தானின் வாதம் தர்க்க ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால் இன்று நம் அனைவரின் பார்வையிலும் அவன் எவ்வளவு சிறுத்துப் போனான்? இதுதான் பெருமை. அது எத்தனைதான் ஆடம்பர வேடம் அணிந்துகொண்டு வந்தாலும் ஆர்ப்பாட்டமாய் வந்தாலும் பார்போர் கண்ணுக்கு அது சிறுமைதான்.

ஓர் எளிமையான உதாரணம் பார்க்கலாமா?

உயர்ந்த மலைமீது ஒருவர் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அங்கிருந்து கீழே கொஞ்சம் குனிந்து பார்த்தால் கீழே நடமாடுகிற மனிதர்களெல்லாம் பொடிப் பொடி எறும்புகள்போல் அவரின் கண்களுக்குத் தெரிவார்கள். வேடிக்கை என்னவென்றால் கீழிருப்போர் கொஞ்சம் நிமிர்ந்து இவரைப் பார்த்தால் அவர்கள் கண்களுக்கும் இவர் எறும்பு போல்தான் தெரிவார். இதுதான் எதார்த்தம். பெருமையடிப் பவர்கள் அவர்களுக்கு மட்டுமே பெருமையானவர்கள். மற்றவர் பார்வைக்கு அவர்கள் அற்பர்களாகத்தான் தெரிவார்கள்.

பெருமையைவிட்டு முற்றிலும் நீங்கியிருப்பது ஒன்று. பெருமை இல்லாததுபோல் பாவனை செய்வது பிறிதொன்று. இதில் நம்மில் பலர் வேடதாரிகளாகத்தான் இருக்கிறோமே தவிர, முற்றிலும் பெருமை இல்லாதிருப்போர் வெகு சொற்பமே. சொற்கள் ஒலிப்பதென்னவோ அடக்கமாகத்தான். ஆனால் இதயம் முழுக்க அகங்காரம்தான். ஆனாலும் இந்த வேஷம் அதிக நாட்களுக்குத் தாங்காது. சீக்கிரத்திலேயே சாயம் வெளுத்துப் போகும்.

புதிதாய்த் திறக்கப்பட்ட அந்த அலுவலகத்தின் சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் அந்த அதிகாரி. அந்த நேரம் பார்த்து அவரைப் பார்க்க யாரோ ஒருவர் வர, மணியே அடிக்காத தொலைபேசி ரிசீவரைக் காதில் வைத்தபடி பந்தாவாய் பாவ்லா பண்ணினார் பாவி மனுஷன். ஒரு வழியாக ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு, வந்தவரைப் பார்த்து வாங்க, உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். வந்தவரோ சாவகாசமாய் ஒண்ணும் வேண்டாம் சார். உங்க தொலைபேசிக்கு இணைப்புக் கொடுப்பதற்காக தொலைபேசி அலுவலகத்திலிருந்து நான் வருகிறேன் என்றார். அந்த அதிகாரி முகத்தில் எத்தனை கிலோ அசடு வழிந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வெற்று பந்தாப் பேர்வழிகளின் பாடு பெரும்பாலும் இப்படித்தான்.

நான் ரொம்ப அடக்கமானவன். இறைவன் என்னைப் பெருமையை விட்டுக் காப்பாற்றினான் என்பதையே பெருமையோடு சொல்பவர்களும் நம்மில் பலருண்டு. நான் அடக்கமானவன் என்று சொல்லிக் கொள்வது பணிவல்ல; அடக்கம் இதயத்தில் அழுந்தப் பதிந்திருப்பதே உண்மையான பணிவு. பெருமை கொள்வோர் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் இறுதியில் அவர்களுக்கு எல்லா வகையிலும் அவமானமே மிஞ்சும்.

பெஞ்சமின் பிராங்க்ளின் அழகாய்ச் சொன்னார். “தற்பெருமை பூக்கும் ஆனால் காய்க்காது” மற்றொரு அறிஞர் சொன்னார் தற்பெருமை ஒருவனை ஊதச்செய்யும். ஆனால் அவனை உயர்த்தாது.

பெருமையை விட்டு நீங்கி ஆன்மிக ரீதியில் நம்மை உயர்த்திக்கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அழகானதொரு வழிமுறை சொல்லித் தருகிறார்கள். உலகியல் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு கீழுள்ளவர்களைப் பாருங்கள். வணக்க வழிபாடுகள் விஷயத்தில் உங்களுக்கு மேலுள்ளவர்களைப் பாருங்கள். இப்படிப் பார்க்கிறபோது நமக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து அவர் நிலைக்கு என் நிலை எவ்வளவோ தேவலை என்கிற திருப்தியோடு நாம் வாழ முடியும். வணக்க வழிபாடுகள் விஷயத்தில் நமக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கிறபோது அவர் அளவுக்கு வணங்க வேண்டும் எனும் ஆசையில் நமது வணக்க நிலையை மேலும் நாம் உயர்த்திக் கொள்ள முடியும்.

ஆனால் நமது நிலையோ இதற்கு நேர்மாற்றம். உலகம் சார்ந்த விஷயங்களில் நம்மைவிட மேலானவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி பொறாமையோடும் அதிருப்தி யோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வணக்க விஷயங்களில் நமக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து மகா திருப்தி. திருப்தியாவது பரவாயில்லை. பெருமை வேறு. வணக்க வழிபாடுகள் விஷயத்தில் பெருமை கொள்வது மிகவும் மோசமானது.

ஆதம் பெறும் மக்களெல்லோரிலும்

நம்மையன்பு கொண்டே

வேத நபி ரசூலின்

உம்மத்தாக்கும்

வெகு நன்றிக்குப்

பாதங்கள் மேலும்

சிரம் கீழுமாய்ப் பத்து நூறாயிரமாண்டோதி

தவஞ் செய்தாலும்

போதாது.

என்று தக்கலைப் பீரப்பா வருந்திப் பாடுவதுபோல எத்தனை வணங்கினாலும் வழங்கினாலும் அது இறைவன் நமக்களித் திருக்கும் அருட்கொடைகளுக்கு முன்பு சொற்பமே என்கிற எண்ணம் வேண்டும்.

தன்மதிப்பு போற்றப்பட வேண்டியதுதான். அது ஒன்றும் பிழையல்ல. ஆனால் நம்மைப் போன்றே பிறரையும் மதிக்க வேண்டும். எனக்கு சில சிறப்புகள் இருப்பதுபோல அவருக்கும் சில சிறப்புகளை இறைவன் தந்திருக்கலாம். என்கிற எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். நாம் போட்டிருக்கிற செருப்பு அறுந்து போனால் அதை நம்மால் சரி செய்ய முடிகிறதா? அதைக் கையில் தூக்கிக் கொண்டு செருப்பு தைப்பவர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு செல்கிறோமே. இந்த இடத்தில் நம்மைக் காட்டிலும் அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர்ந்து விடவில்லையா?

என்னுடைய ஆற்றல்களையும் அரும் சாதனைகளையும் பற்றிப் பொதுமக்கள் கொண்டுள்ள மதிப்பீட்டுக்கும் உண்மை நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு பயங்கரமானது என்கிறார் ஐன்ஸடீன். உலகம் போற்றும் அறிஞர் பெருமக்கள் அனைவருமே இந்த நிலையை உணர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

காந்தி என்றால் மகாத்மா என்கிற அடைமொழியும் கூடவே ஒட்டிக்கொண்டு நம் கவனத்திற்கு வருகிறது. ஆனால் அவர் வாக்குமூலத்தைக் கேளுங்கள். ’’நான் மகாத்மா என்றோ மற்றவர்கள் அல்ப ஆத்மா என்றோ நான் ஒருபோதும் கனவில் கூட எண்ணியதில்லை’’இந்த தன்னடக்கம்தான் அவரை மகாத்மாவாக்கியது. இந்த மேதை களெல்லாம் தங்களைப் பற்றி இப்படி பணிவான அபிப்ராயம் கொண்டிருந்ததால்தான் இன்று உலக மக்களால் மேதைகளாய் மதிக்கப்படுகிறார்கள். இயற்கை விதி இப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

நமது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் சொல்வதைப் பாருங்கள்:

எவனொருவன் தன்னைப்பற்றித் தானே உயர் மதிப்பீட்டுடன் வாழ்கிறானோ அவனை இறைவன் தாழ்த்தி விடுவான். மக்களெல்லோரும் அவனைத் தாழ்வாகவே பார்ப்பார்கள். இதற்கு மாற்றமாக எவரொருவர் தன்னைப் பற்றித் தாழ்வான அடக்கமான மதிப்பீடு கொண்டிருக்கிறாரோ அவரை இறைவன் உயர்த்துவான். மக்களின் பார்வையில் அவர்கள் மகத்தான மனிதர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

தன்னடக்கம் தானாக வர வேண்டும். அதைக் கற்றுத் தரவோ போதனைகள் மூலம் உருவாக்கவோ முடியாது. தானாக வருவதற்கு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பீடு வேண்டும். அளவு கடந்த சுய மதிப்பீடு ஆபத்தானது. அதுதான் தற்பெருமையாய் தலை தூக்கி நிற்கிறது. நம்மைப் பெருமை கொள்ளச் செய்கிற எந்தத் தகுதியாக இருந்தாலும் அது இடையில் வந்தது என்பதை உணர வேண்டும். நாம் பிறக்கிற போதே அந்தத் தகுதிகளோடு பிறக்கவில்லை. எத்தனைத் தகுதிகள் இருப்பினும் இது என் இரட்சகனின் அருட்கொடை என்றெண்ண வேண்டும்.

தன்னம்பிக்கை வேறு. தற்பெருமை வேறு. இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம்தான்.

தன்னம்பிக்கை போற்றுதலுக்குரியது. தற்பெருமை இகழ்ச்சிக்குரியது.

தன்னால் முடியும் என்றெண்ணுவது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே முடியும் என்றெண்ணுவது தற்பெருமை.

தன்னம்பிக்கை கொண்டவரை எப்பொழுதும் உற்சாகம் கொண்டவராகக் காணலாம். அந்த உற்சாகம் ரசனைக் குரியதாகும். தற்பெருமை ரசிக்கத்தக்கதல்ல. வெறுப்புக்குரியது.

தன்னம்பிக்கையோடு வாழ்வோம். தற்பெருமை தவிர்ப்போம்.

மின்மடலுக்கு : smrbaqavi@gmail.com

 

ந‌ன்றி :  ச‌ம‌நிலைச் ச‌முதாய‌ம் (ஏப்ர‌ல் 2009)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb