‘என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!’ இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. ‘எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?’ என்று கேட்டார். ‘நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ‘ அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி.‘அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரீலை அழைத்து, ”அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!” என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரீல் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ”அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி