நம்முடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகளில் சிலர் ஜக்காத் மற்றும் வரிகள் (Tax) பற்றிய போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகிறது.
அவர்களின் எண்ணம் என்னவெனில் ‘தாங்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு வரியாகச் செலுத்துகிறோம். அந்நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் அந்நாட்டின் மேம்பாட்டிற்காக அந்தப் பணம் அரசாங்கம் மூலமாக செலவிடப்படுகின்றது. ஜக்காத் பணமும் அதற்காகத் தானே செலவிடப்படுகின்றது. எனவே அரசாங்கம் மூலமாக நாமும் அதே பணியைச் செய்வதால் ஜக்காத் கொடுக்க வேண்டியதில்லை‘ என்பது அவர்களின் எண்ணமாகும்.
இவ்வாறு எண்ணம் கொள்வதற்கு ஜக்காத் பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமையே காரணம் ஆகும். ஜக்காத் என்பது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வால் முஃமின்களின் மீது விதிக்கப்பட்ட கடமையாகும். வரி (Tax) என்பது ஒரு நாட்டை நிர்வகித்து அதை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தால் அதன் மக்களின் மீது விதிக்கப்ட்ட ஒரு கட்டணமாகும்.
இத்தகைய வரிப்பணங்கள் ஒரு நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பலன் அளிக்கிறது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆனால் ஜக்காத் என்பது இறைவனால் விதிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே செலவிடப்படவேண்டிய தொகை என வலியுறத்தப்பட்ட ஒன்றாகும்.
ஒருவன் வரிகட்டுகிறான் என்றால் அவன் அந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டுமே என்று கட்டுகிறானேத் தவிர அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும் பெறுவதற்காக அந்த வரியை கட்டுவதில்லை. ஆனால் முறையான இஸ்லாமிய நாடாக இருக்குமானால் அது இவ்வாறு வரிவிதிக்காமல் ஜக்காத்தை வசூலித்து அதை அதற்குரிய முறையில் இறைவனின் கட்டளைப்படி செலவு செய்யும்.
எனவே ஒருவன் ஜக்காத் செலுத்துவது என்பது இறைவனின் அன்பையும் உவப்பையும் பெறுவதற்காக இது இறை கட்டளை என்றுணர்ந்து இறைவன் காட்டித்தந்த வழியில் இறைவனுக்காகவே அதை செலவு செய்வதாகும். அந்த ஜக்காத் தொகையினை யார் யாருக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருக்கின்றானோ அவர்களுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டிய தொகையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார். (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). (அல்-குர்ஆன் 92:17-21)
ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: –
(ஜகாத் என்னும்) தானங்கள்
தரித்திரர்களுக்கும்,
ஏழைகளுக்கும்,
தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)
இவர்களே ஜக்காத் பெற தகுதியுடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். ஆனால் நம்மில் சிலர் அறியாமையினால் பள்ளிவாசல் கட்டுதல், பள்ளிக் கூடங்கள் கட்டுதல் மற்றும் இன்ன பிற பொது சேவைகளுக்காகவும் மற்றும் இறைவன் கூறிய எட்டு வகையினரல்லாத பிறருக்கும் தமது ஜக்காத் தொகையிலிருந்து செலவழித்து விட்டு தாம் ஜக்காத் கொடுத்துவிட்டதாக எண்ணுகின்றனர். இவர்கள் மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவு பெற கடமைப்பட்டுள்ளார்கள்.
“Jazaakallaahu khairan” சுவனத்தென்றல்