பாதையும் பயணமும்
படைப்பின் நோக்கம்
இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த பேரருளாளனின் படைப்புகள் அனைத்திற்கும் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. ‘மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர வேறொன்றுக்கும் படைக்கவில்லை ‘(திருக்குர் ஆன் 51 : 56) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுவது போல் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் தங்களை படைத்த இறைவனை அறிந்து, அவனை வணங்கவும் அவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, அவனுடைய கட்டளைகள் இப்பூமியில் நிலைபெற பாடுபடுதலேயாகும்.
செயல்களில் சிறந்தவர் யார் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு நாம் வாழ்வையும் மரணத்தையும் படைத்தோம்‘ என அல்லாஹ் கூறுகின்ற படி நம் வாழ்வின் நோக்கமே நம் அதிபதி நம்மை படைத்த நோக்கத்தை அறிந்து, அவனுடைய கட்டளைக்கு ஏற்ப வாழக் கூடிய மக்களாக மாற வேண்டும். இறைவனின் பேரருளால் நாம் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கிறோம். ஏனென்றால் நாம் முஸ்லீமாக இருப்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும். மனிதர்களில் புனிதர்களான நபிமார்களின் உறவுகளுக்கு முஸ்லீமாக வாழக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகன், நபி லூத் (அலை) அவர்களின் மனைவி, நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தை, ஏன் நமது உயிரினும் மேலான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தைக்கு கிடைக்காத பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.
முஸ்லீமாக உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளல், ஐவேளை தொழுதல், நோன்பு நோற்றல், அவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப ஜகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல் ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை என்பதை நாம் அனைவரும் தெரிந்திருக்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டிய கடமையை பற்றி திருமறையில் கீழ் காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான் : ‘நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தான் மனிதர்களில் தோற்றுவிக்கப்பட்டவர்களில் மிகச் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் மனிதர்களை நன்மையான காரியங்களை செய்யும் படி ஏவி, தீமையான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்‘ (திருக்குர்ஆன் 3 : 110) .
முஸ்லீம் என்றால் ?
முஸ்லீம் எனும் சொல்லுக்கு கட்டுபட்டவன் என்று நேரடியாக பொருள்படும். நாமும் கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறோம். யாருக்கு என்பதில் தான் தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம். நம்மில் சிலர் நம் தலைவர்களுக்கு, முன்னோர்களுக்கு, மனிதனின் மனோ இச்சைகளுக்கு, மனித சபலங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். இஸ்லாமோ முஸ்லீமை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை செய்து இறைவனுக்கு மட்டும் முழுமையாக கட்டுபட்டவர்களாக ஆக்கவே விரும்புகிறது. இறைவனும் திருமறையில் ‘அல்லாஹ்வுடைய நேரான வழியை விட்டும் தன் மனோ இச்சையை பின்பற்றுபவனை விட வழி கெட்டவன் எவனுமுண்டா?‘ (திருக்குர் ஆன் 28:50) என்று கேள்வி எழுப்புகிறான்.
நம்பிக்கையாளர்களே ! நடுநிலை சமுதாயமாக உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் பிற மனிதர்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும், நம்முடைய தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும்‘ என்று இறைவன் திருமறையின் 2:143-ல் சொல்லிக் காட்டுகின்ற படி நாம் நம்முடைய சொல்லாலும், செயலாலும் இம்மார்க்கத்திற்கு சாட்சியாளர்களாக விளங்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது எப்படி அவர்களின் வாழ்வு திருக்குர்ஆனாக இருந்தது என்று சொன்னார்களோ அது போல் நம்முடைய சொல், சிந்தனை, எழுத்து, பணி, போராட்டம், ஒன்றுகூடல் என அனைத்துமே குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைய வேண்டும். சுருங்க சொன்னால் நாம் நடமாடும் திருக்குர்ஆனாக, திருக்குர்ஆனின் விளக்கவுரைகளாக திகழ வேண்டும். நம் ஓட்டு மொத்த வாழ்வும் பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய வழித்தடத்திலேயே அமைய வேண்டும்.
நபிகளாரின் பயணம்
மனிதர்களை வழிநடத்த இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நபிமார்களை வெவ்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பினாலும் அனைவரும் ‘அல்லாஹ்வை தவிர வேறு யாரும் வணங்காதீர்கள்‘ என்ற ஓரே அடிப்படை செய்தியை தான் சொன்னார்கள். எனவே எல்லோரின் அடிப்படை நோக்கமும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுபடக் கூடிய மக்களை உருவாக்குவதாக தான் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன் தூதுத்துவ பயணத்தில் முதலில் தனிப்பட்ட நபர்களை தூய்மைப்படுத்தி, அவர்களின் பண்புகளை செம்மைபடுத்தி அவர்களை செதுக்குகின்ற வேலையை தான் செய்தார்கள். அதன் பிறகு அந்த தனிப்பட்ட நபர்களை கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுக்கின்ற குர் ஆனின் படி வாழும் ஒரு ஒப்பற்ற சமூகத்தை சமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தீனை மேலோங்க செய்யும் விதமாக இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிலைபெறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்றாக உணர்ந்திருந்ததால் தான் அதை இலக்காக கொண்டே அவரது பாதையின் ஒவ்வொரு எட்டும் இருந்ததை ஸீராவை ஆழமாக படித்தால் உள்வாங்கி கொள்ளலாம். அதிகாரம் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அஞ்சுபவர்களின் கையில் கொடுக்கப்படும் போது தான் தவ்ஹீதை கூட ஒரு மனிதனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி தவறான சட்ட திட்டங்களுக்கு பலியாகி நம் வாழ்வின் சிறிய பகுதியில் மட்டுமே அல்லாஹ்வின் அடிமைகளாக இருக்க முடியும், அதுவும் அரசு அனுமதி கொடுக்கும் வரையில் மட்டுமே. உதாரணத்துக்கு நீதி வழங்குதல், அமைதியை ஏற்படுத்துதல் போன்றவை ஓர் அரசால் மட்டுமே முடியும். தனி மனிதனாகிய நம்மால் அதிகபட்சம் மது அருந்தாமல், விபசாரம் செய்யாமல் இருக்கலாமே தவிர அவைகளை முற்றிலும் ஒழிப்பது என்பது ஓர் அரசாங்கத்தால் மட்டுமே முடியும். எனவே ஒரு மனிதன் இஸ்லாமிய அடிப்படையில் வாழ ஆசைப்பட்டால் அதற்கேற்ற சூழ்நிலையை ஒரு இஸ்லாமிய அரசால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
தீனை மேலோங்க செய்யல்
அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து அவர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும் அது மிகைத்தே தீரும் என்று திருமறையின் 61 : 9 –ல் எல்லாம் வல்ல இறைவன் குறிப்பிடுவது போல் அவன் தன்னுடைய தூதரை அனுப்பியதின் நோக்கம் தீனை முழுமைப்படுத்துதல் என்பதை தெளிவாக உணரலாம். இதை மேலும் வலுப்படுத்தும் செய்தியை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நாம் காணலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்திய இஸ்லாமிய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் முழு வேகத்துடன் எடுத்து சென்ற போது அதை தடுத்த நிறுத்த எத்தனையோ வழி முறைகளை கையாண்டு தோற்று போன குறைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு சமரசத் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இப்பிரசாரத்தை பெருமானார் அவர்கள் நிறுத்தி விட்டால் அதற்கு பகரமாக மக்காவில் உள்ள அழகான பெண்ணை மணமுடித்து கொடுப்பதாகவும் அல்லது செல்வக்குவியலையே அளிப்பதாகவும் அல்லது மக்கத்து ஆட்சியை கொடுப்பதாகவும் பேரம் பேசினர்.
அப்பேரத்துக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில் வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றால் அது மிகையான ஒன்று அல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்க்கமாக சொன்னார்கள் ‘இந்த குறைஷிகள் என்னுடைய ஒரு கையில் சூரியனையும் ஒரு கையில் சந்திரனையும் கொடுத்தாலும் இந்த பணியை நான் விட மாட்டேன். ஒன்று அப்பாதையிலே என்னுடைய உயிர் போக வேண்டும் அல்லது இந்த தீன் இவ்வையகத்திலே மேலோங்க வேண்டும்‘. மேற்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து பார்த்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற பாதையின் இலக்கு தீனை மேலோங்க செய்வதே என்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஒரு கொள்கை வெற்றி பெற வேண்டுமானால் அதை எதிர்க்கும் பிற கொள்கைகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இஸ்லாம் அல்லாத அனைத்து கொள்கைகளும் இஸ்லாத்துக்கு எதிரானவையே.
இஸ்லாத்தின் தாரக மந்திரமான லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது வெறும் சொல்லல்ல. வெறும் சொல்லாக இருந்தால் வானங்களையும் பூமியையும் படைத்தது அல்லாஹ் என்று நம்பிக்கை கொண்ட குறைஷிகள் நிச்சயம் இவ்வளவு தீவிரமாக எதிர்த்திருக்க மாட்டார்கள். மாறாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இனி செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை கொண்டு ஏழைகளை அடிமைப்படுத்த முடியாது, கோத்திரத்தின் பெயரை சொல்லி எளியவர்களை சுரண்ட முடியாது, அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் எதிர்த்தார்கள்.
தீனை மேலோங்க செய்யும் பணிக்காக தூதரை அனுப்பியதாக சொல்லும் இறைவன் அப்பாதையில் செல்ல துடிக்கும் முஸ்லீம்களுக்கு அதற்கான வழியையும் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான். அழகான வியாபாரத்துக்கு அதனை ஒப்பிட்டு விட்டு தீனை மேலோங்க செய்ய ஆசைப்படுபவர்கள் முதலில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கை கொள்வதோடு இப்பாதையில் தங்களது பொருட்களையும், உயிர்களையும் கொண்டு போராட வேண்டும். ஏனென்றால் நபிமார்கள், ஸஹாபாக்கள் கடந்து சென்ற இப்பாதை மலர்கள் தூவிய மென்மையான பாதையல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து ஒரு மனிதர் நான் தங்களை நேசிக்கிறேன் என்று சொன்ன போது பெருமானார் சொன்ன பதில் நம்மை இப்பாதையில் பயணிப்பதின் கடினத்தை உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது என்னவென்றால் அப்படியென்றால் பசி பட்டினிகளை சமாளிப்பதற்குரிய வழிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படி இப்பாதையில் செல்பவர்களுக்கு, தீனை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் புகுத்துவதாக வாக்குறுதி அளிப்பதோடு, அல்லாஹ்வின் உதவியும் அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுகிறான். இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுதலும், அதனை பரப்புவதும், அதனை இம்மண்ணில் மேலோங்க செய்வதும் ஆகிய இப்பணியை தான் ‘நன்மையை ஏவி தீமையை தடுத்தல்‘, ‘சத்தியத்தை பரப்புதல்‘, ‘இகாமத்தே தீன்‘, ‘தீனை நிலைநாட்டுதல்‘ என பல்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.
அனைத்து நபிமார்களின் பணி
மேற்காணும் பணியை பற்றிய விரிவான விளக்கத்தை கீழ்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நூஹ்வுக்கு எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள். ஆகவே அவர்களை நீங்கள் அழைக்கும் போது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்கு பெரும் பளுவாக தோன்றும். அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்‘ (திருக்குர்ஆன் 42:13).
மேற்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்தித்தால் எல்லா நபிமார்களின் பணியும் தீனை நிலைநாட்டுவதாக தான் இருந்தது என்பதை நன்கு உணரலாம். இவ்வையகத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் மக்களிடத்தில் சொன்ன செய்தி ஒன்று தான் என்பதை கீழ்காணும் திருமறை வசனத்தின் மூலம் உணரலாம்.
அ நிஹ்புதல்லாஹ் வஜ் தனிபூத் தாகூத் வதாலிக தீய்னுல் கய்யூம்‘ ‘அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், தாகூத்துக்கு அடிபணியாதீர்கள். இது தான் நேரான மார்க்கம். முஜாஹித் போன்ற திருமறை விரிவுரையாளர்கள் தாகூத் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறி நடப்பவன் என்று கூறுகின்றனர். எனவே தாகூத் என்பது அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்கும் பிர் அவ்ன், நம்ரூத் போன்றவர்களை மட்டுமல்ல மக்களின் மனோஇச்சைகளின் அடிப்படையில் உருவான சட்டங்களை இயற்றும், உருவாக்கும், அதற்காக போராடும் அனைவரையும் குறிக்கும். அப்படிப்பட்ட தாகூத்திய சக்திகளை எதிர்த்து போராடுவது அனைவர் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் இவ்வசனத்தில் முதலாவதாக குறிப்பிடுகின்ற நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டும் வெகு சொற்பமானவர்களே அவர்களை பின்பற்றினர். சத்தியத்தை நிலைநாட்டும் பணியில் சிறு குழு மட்டுமே ஈடுபடும். இறைவனே திருமறையில் சொல்வது போல் பெரும்பான்மையினரின் விருப்பங்களை பின்பற்றினால் சத்தியத்தை விட்டு பிறழ்ந்து போகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. அடுத்ததாக குறிப்பிடப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்தார்கள். அந்த ஏகத்துவ ஏந்தலின் தியாகத்தின் சுவடுகள் இன்றளவும் ஹஜ்ஜில் நினைவு கூறப்படுமளவு ஆழமானவை.
மூஸா (அலை) சமர்பித்த செய்தி
மூஸா (அலை) பிர் அவ்னிடம் சென்று தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் (43:46) என்று அறிமுகப்படுத்திய போது பிர் அவ்ன் உடனே அல்லாஹ்வை ஏற்றுக்கொள்வோன் என்றோ ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றோ கூறவில்லை. மூஸா (அலை) அவர்கள் வெறும் இறைவனை ஸுஜீது செய்வதற்கோ அல்லது சில சடங்குகளை செய்வதன் பால் மாத்திரம் அழைக்கவில்லை, மாறாக முழுமையான அதிகாரம் அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் முழக்கத்துடனே வந்திருக்கின்றார்கள் என்பதை தெளிவாக பிர் அவ்ன் உணர்ந்ததால் தான் பிர் அவ்ன் உடனே தன் மக்களை பார்த்து கேட்டான் ‘என்னுடைய மக்களே ! இந்த தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா?‘ (43:51) என்று தான் கேட்டான். சுருங்கச் சொன்னால் நம் சமுதாய தலைமைகளை விட பிர் அவ்ன் இகாமத் தீனை தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சமர்பித்த செய்தி
நபிமார்களின் இறுதி முத்திரை முஹம்மது (ஸல்) சத்திய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் செய்த ஆரம்பக் கட்டத்தில் வெகு சொற்பமானவர்களே இஸ்லாத்தில் இருந்தார்கள். இஸ்லாத்தில் இருப்பவர்களை துன்பப்படுத்துவது பெரும்பான்மை இஸ்லாமிய எதிரிகளின் வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் பனூஅம்ரு பின் ஹாஷா எனும் கோத்திர தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முஸ்லீம்கள் தங்கள் மார்க்க கடமைகளை செய்வதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அதற்கு பதிலாக முஸ்லீம்கள் ஆட்சி அதிகாரம் பெறும் போது தங்கள் கோத்திரத்துக்கு அதில் பங்களிக்க வேண்டும் என்று கோரினார். ஆட்சி, அதிகாரம் கிடைப்பது ஒரு புறம் இருக்க, தங்களை அடித்தால் கூட கேட்பதற்கு ஆளில்லா நம்மை விட வெகு பலவீனமான நிலையில் இருந்த போது கூட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அக்கோரிக்கையை மறுத்ததோடு ‘ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது‘ என்று முழங்கினார்கள்.
இகாமத்தே தீன் என்பது எல்லா நபிமார்களின் பணி மாத்திரமல்ல, அவர்களை வாய்மையோடு பின்பற்றிய சத்திய சீலர்களும் அவ்வழித்தடத்திலே பயணம் செய்துள்ளனர் என்பதை வரலாற்று சுவடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வுலகை படைத்தவன் எவனோ அவனுடைய சட்டங்கள் தான் இவ்வுலகை ஆளவேண்டும் என்பதை பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும். வானுக்கு அதிபதி தான் பூமிக்கும் அதிபதி எனும் உண்மையை மக்களின் உள்ளங்களில் ஆழப் பதியச் செய்யும் ஒரு செயலே இகாமத்தே தீன் என்றும் சொல்லலாம். முகீரா பின் ஷுஐபா (ரலி) ருஸ்தும் மன்னனிடம் படையெடுத்து சென்ற போது படையெடுப்பின் நோக்கத்தை பற்றி சொன்னார்கள் ‘மக்களை மனிதர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகளாக மாற்றவே வந்திருக்கின்றோம்‘ என்று தீனை நிலைநாட்டுதலின் விளக்கத்தை சொன்னார்கள்.
ஒற்றுமை
மேற்கண்ட திருமறையின் 42:13ம் வசனத்தில் தீனை நிலைநாட்டுங்கள் என்று சொல்லி விட்டு அதில் பிரிந்து விடாதீர்கள் என்றும் அல்லாஹ் அறிவுறுத்துகிறான். எனவே இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற விரும்புபவர்கள், இஸ்லாத்தை இம்மண்ணில் ஆளும் கொள்கையாக நிலை நாட்ட விரும்புவர்கள் தனித் தனித் தீவுகளாக பிரிந்து இருக்க கூடாது. மாறாக அனைவரும் ஒரு கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்துக்கு எதிரான ஜாஹிலிய்யா சக்திகள் இஸ்லாத்தை நசுக்க ஓரணியில் திரண்டு நிற்கும் போது இஸ்லாத்தை நிலைநாட்ட போராடும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் ‘ஜமாத் இல்லாமல் இஸ்லாம் இல்லை, தலைமை இல்லாமல் ஜமாத் இல்லை, அடிபணிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை‘ என்று சொன்னபடி இஸ்லாம் ஜமாத்தோடு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதனால் தான் இஸ்லாத்தின் தலையாய கடமையான தொழுகையை தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதற்கு 27 மடங்கு நன்மை உள்ளது மாத்திரமல்ல, அல்லாஹ்வின் தூதரும் யார் தக்க காரணமின்றி தனியாக வீட்டில் தொழுகின்றாரோ அவர்களின் வீடுகளுக்கு சென்று தீ வைத்து எரித்து விட என் மனம் நாடுகிறது என்று ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறதை பார்க்கின்றோம். அது போலவே ஜும்மா தொழுகை, நோன்பு, ஜகாத், சர்வதேச சகோதரத்துவ மாநாடாகிய ஹஜ் அனைத்தும் ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துவதை பார்க்கின்றோம்.